`4 பேருக்கு நல்லதுதானே செய்யுறான், செய்யட்டும்' மாற்றுத்திறனாளி ஆறுமுகத்தின் சமூகசேவை; நெகிழும் தாய்

Jun 17, 2026 - 15:01
0
`4 பேருக்கு நல்லதுதானே செய்யுறான், செய்யட்டும்' மாற்றுத்திறனாளி ஆறுமுகத்தின் சமூகசேவை; நெகிழும் தாய்

திருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட் வளைவு, மாலை நேரங்களில் மிகவும் பரபரப்பாகிவிடும். எந்நேரமும் வாகனங்கள் முட்டிக்கொண்டு, ஹாரன் சத்தங்கள் காதைக் கிழிக்கும். அங்கே, செய்கைகளாலேயே ஒட்டுமொத்த டிராஃபிக்கையும் ஒழுங்குபடுத்தி நிர்வகித்து வருகிறார், 50 வயதான ஆறுமுகம்.

அவருக்குப் பிறப்பிலேயே காது கேட்காது; வாயும் பேசவும் வராது. ஆனால், கடந்த மூன்று வருடங்களாக எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல், விபத்துகள் நடந்துவிடக் கூடாது என்கிற ஒரே காரணத்திற்காக அங்கே டிராஃபிக் போலீஸாகவே மாறிப் பணிசெய்து வருகிறார். அவரிடம் நாம் பேச நினைத்தபோது, புன்னகையை மட்டுமே பதிலாய்த் தந்தார். எனவே, ஆறுமுகத்தின் அண்ணன் சரவணன் நம்மிடம் அவருக்குப் பதிலாகப் பேசத் தொடங்கினார்,

அப்பாவின் இழப்பும்... மனதை மாற்றிய விபத்தும்!

"எங்க அப்பா 2004-ல ஒரு விபத்துலதான் இறந்துபோனார். அவர் ஒரு ஃபாரஸ்ட் ஆபீஸர். சீவலப்பேரி ரோடு, அண்ணாநகர் ஒடுக்கமான பாலத்துல எதிரே வந்த அம்பாசிடர் கார் மோதிதான் அப்பா ஸ்பாட்லயே இறந்தார். அப்போ ஆறுமுகத்துக்கு 25 வயசு. அப்பாவோட அந்த மரணம், இவன் மனசை பலமா பாதிச்சிருக்கணும். அந்த விபத்தின் தாக்கம்தான், இன்னைக்கு 50 வயசுலயும் 'இனி யாரும் விபத்துல சாகக் கூடாது'ன்னு இவனை ரோட்டுல நிக்க வச்சிருக்கு!" என்கிறார் சரவணன்.

ஆறுமுகம்

ஆறுமுகத்துடன் பிறந்தவர்கள் மொத்தம் நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள். தந்தை மறைவுக்குப் பிறகு, அம்மாவின் பென்ஷன் வருமானத்தில்தான் குடும்பம் நகர்கிறது. ஆறுமுகத்துக்குத் திருமணமும் நடந்திருக்கிறது. ஆனால், துரதிஷ்டவசமாக இரண்டு வருடங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மனைவியைப் பிரிந்துவிட்டார். பத்து வருடங்களாகத் தனியாகத்தான் வாழ்கிறார்.

சைக்கிள் பயணம்... சலிக்காத சேவை!

சமூக சேவைக்கு வருவதற்கு முன்பு, ஆறுமுகம் கட்டட வேலை மற்றும் பெயின்ட்டிங் வேலைகளுக்குக் கூலிக்குச் சென்று வந்திருக்கிறார். மாற்றுத்திறனாளி என்றாலும், அவர் பயங்கர சுறுசுறுப்பு. வித்தியாசமான ஒரு பழக்கம் அவரிடம் உண்டு... எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர் பேருந்திலோ, மற்ற வாகனங்களிலோ ஏற மாட்டார். பாளையங்கோட்டையில் இருந்து திருச்செந்தூர் வரைக்கூட தன் சைக்கிளிலேயேதான் செல்வாராம்.

தொடர்ந்து பேசிய சரவணன்,``முதல்ல சீவலப்பேரி ரோடு பிரியுற இடத்துல, பள்ளிக்குப் போற பிள்ளைங்க விபத்துல சிக்கிடக் கூடாதுனு அங்கே காலையில் நிக்க ஆரம்பிச்சான். இப்போ மார்க்கெட் ஸ்டாப்ல நிக்கிறான். எந்தக் கூலியும் கிடையாது, யாரும் அவனுக்கு சம்பளம் தரப்போறதுமில்லை. தினமும் மாலை 6 மணிக்கு வீட்டை விட்டு கிளம்புனா, ராத்திரி 11 மணிக்குத்தான் வீட்டுக்கு வருவான்.

பேசாம வீட்டுல இருன்னு... எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம்.

இவனோட இந்த அர்ப்பணிப்பைப் பார்த்து நெகிழ்ந்த நெல்லை ரோட்டரி கிளப்பினர், புதிய சைக்கிளைப் பரிசாக வழங்கியுள்ளனர். அங்கிருக்கும் போலீஸாரும் சேவையைப் பாராட்டி, `தொப்பி மற்றும் கோட்' கொடுத்து கௌரவித்துள்ளனர். ஒருமுறை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரே நேரில் இவரைப் பாராட்டி இருக்கிறார்.

ஆரம்பத்துல ஏண்டா இந்த வேலை... பேசாம வீட்டுல இருன்னு... நாங்க எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். ஆனா அவன் கேட்கல. இதுலதான் அவனுக்கு நிம்மதி கிடைக்குதுன்னு புரிஞ்சதும், நாங்களும் விட்டுட்டோம். அம்மாவும், 'ஏதோ நாலு பேருக்கு நல்லதுதானே செய்யுறான், செய்யட்டும்'னு மனம் நெகிழ்ந்து சொல்லிட்டாங்க.

சுயநலமின்றி செயல்படும் ஆறுமுகம்....

ஆறுமுகம் டிராஃபிக் சரி செய்வதோடு நின்றுவிடுவதில்லை. ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்மஸ், போன்ற பண்டிகை நாள்களில் யாராவது இவருக்குப் பிரியாணியோ, நல்ல சாப்பாடோ கொடுத்தால், அதை அவர் சாப்பிடுவதில்லை. அப்படியே சைக்கிளில் எடுத்துக்கொண்டு போய், கிராமப்புறங்களில் பசியோடு இருக்கும் ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User