தவெக-வில் அதிமுக MLA: ``கூட்டணிக் கட்சிகள் மீது நம்பிக்கையின்மையா?" - தவெக-விற்கு அப்பாவு கேள்வி

Jun 17, 2026 - 15:01
0
தவெக-வில் அதிமுக MLA: ``கூட்டணிக் கட்சிகள் மீது நம்பிக்கையின்மையா?" - தவெக-விற்கு அப்பாவு கேள்வி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு பெரும்பான்மை கிடைக்காத த.வெ.க, ஆட்சி அமைக்க தி.மு.க கூட்டணியில் தேர்தலை எதிர்க்கொண்ட கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகள் ஆதரவு வழங்கின.

அதேநேரம், த.வெ.க-வுக்கு ஆதரவு நிலைப்பாடு தொடர்பாக அ.தி.மு.க-வில் சலசலப்பு ஏற்பட்டது. அதன் காரணமாகவே கட்சி இரண்டு குழுவாகப் பிரிந்து மீண்டும் இணைந்தது. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வின் 4 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அப்போதே த.வெ.க-வில் இணைந்தனர். இதுவும் அரசியல் அரங்கில் விவாதமானது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் விஜய்

இதற்கிடையில், வி.சி.க, சி.பி.ஐ போன்ற கட்சிகள் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை த.வெ.க-வில் இணைத்தது தொடர்பாக அதிருப்தி தெரிவித்திருந்தது. இது தொடர்பாக சமீபத்தில் சிபிஎம் சண்முகம் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாகவே, ''அதிமுக எம்.எல்.ஏ-க்களை த.வெ.க-வில் இணைப்பது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் அதிருப்தி தெரிவித்திருந்தோம்'' எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மதுராந்தகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க தொண்டர்களை த.வெ.க-வில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ``அ.தி.மு.க எனும் கட்சி இனி இருக்காது. இன்னும் எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-வில் இணைவார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க-விலிருது ஐந்தாவது எம்.எல்.ஏ-வாக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் தன் எம்.எல்.ஏ பதவி ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் நேற்று வழங்கியிருக்கிறார்.

இவரும் அ.தி.மு.க-வில் இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தன் எக்ஸ் பக்கத்தில், ``அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆளுங்கட்சியான த.வெ.க-வில் இணைவது தற்போது ஆட்சியில் இருக்கும் த.வெ.க அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்ற, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் மீதுள்ள நம்பகத்தன்மையின்மையா? அல்லது அவர்களது தொடர்பைத் துண்டித்து விட்டு ஒன்றிய அரசிடம் தற்போது வைத்திருக்கின்ற மறைமுக உறவை வெளிப்படையாக உறுதிப்படுத்தப்படுவதற்காகவா?

முன்னாள் சபாநாயகர் அப்பாவு
முன்னாள் சபாநாயகர் அப்பாவு

அதிமுகவின் 25 MLA-க்கள் இந்த அரசை ஆதரித்து வாக்களிப்பதற்காக அவர்களில் 8 பேர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று உறுதியளித்ததாக நம்பியவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது?

MLA பதவியை ராஜினாமா செய்து கொண்டு இருப்பது அமைச்சர் பதவிக்காகவா? எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கலாமே (ஆறு மாதத்திற்குள் தேர்தலில் நின்று MLA-வாக தேர்ந்தெடுக்கப்பட்டால் போதுமானதே) த.வெ.க அரசு அதை நிறைவேற்றுமா? அல்லது 25 MLA-க்களையும் தொடர்ந்து ஏமாற்றுமா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User