GDN Review: பரபர ஐடியாக்கள், அதிரடி திருப்பம்; ஆனால் ஒரு ஜீனியஸின் பயோபிக்குக்கு இவை மட்டும் போதுமா?

Aug 07, 2026 - 17:01
0
GDN Review: பரபர ஐடியாக்கள், அதிரடி திருப்பம்; ஆனால் ஒரு ஜீனியஸின் பயோபிக்குக்கு இவை மட்டும் போதுமா?

1900களின் தொடக்கத்தில், கோவை மாவட்டத்தின் கிராமம் ஒன்றில், பருத்தி வேளான் செய்யும் விவசாயியாக இருக்கும் இளைஞர் ஜி.டி.நாயுடுவுக்கு (டீஜே அருணாசலம்) பிரிட்டிஷ் அதிகாரி பயன்படுத்தும் மோட்டர் சைக்கிள் மீது ஆர்வம் வருகிறது. சேமித்த காசு, மனைவியின் (ஷீலா) நகை போன்றவற்றை விற்று அதே மோட்டர் சைக்கிளை அவரிடமிருந்து வாங்குகிறார்.

அதைப் பிரித்துப்போட்டு அதன் மொத்த இயங்குமுறையையும் கற்கிறார் ஜி.டி.என். அதன் காரணமாகக் கிடைக்கும் இயந்திரவியல் அறிவைக்கொண்டு, அன்றாடம் தேவைகளுக்கான சின்ன சின்ன கருவிகளைத் தன் சொந்த முயற்சியால் கண்டுபிடிப்பதோடு, அவற்றை வைத்து தொழிலதிபராகவும் உயர்கிறார் ஜி.டி.என் (மாதவன்).

G.D.N Review | ஜி.டி.என் விமர்சனம்
G.D.N Review | ஜி.டி.என் விமர்சனம்

இந்நிலையில், நேர்மையாகவும், மக்கள் பயன்படும் வகையிலும் கண்டுபிடிப்புகளையும், தொழில்களையும் செய்யும் ஜி.டி.என்-இன் வளர்ச்சியைப் பிடிக்காத பிரிட்டிஷ் அதிகாரி, அவர்மீது பொய்க் குற்றச்சாட்டுகளையும் கட்டமைப்பதோடு, அதற்கு வருமான வரித்துறை அதிகாரி கிருஷ்ணனையும் (ஜெயராம்) பயன்படுத்துகிறார்.

இறுதியில் இவற்றை எல்லாம் ஜி.டி.என் எப்படி வென்று காட்டுகிறார் என்பதே கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியிருக்கும் 'ஜி.டி.என்' படத்தின் கதை.

அதீத அறிவு, இளகிய மனம், மனைவி மீதான காதல், ஆற்றாமையிலும் பிறழாத உறுதி என ஜி.டி.நாயுடுவின் நடுவயது வாழ்க்கையை நெருக்கமாகக் கொண்டு வந்திருக்கிறார் மாதவன். பிரச்னைகளைக் கூலாகச் சமாளிக்கும் இடங்களில் மாதவனின் அனுபவம் கைகொடுக்கிறது. ஆனால், முதுமைக்கான நடிப்பில் வெளிப்படும் செயற்கைத்தனம் துருத்திக்கொண்டு நின்று தொந்தரவு செய்கிறது.

அறிவியல் மீதான ஆர்வம், ஆர்வம் தரும் துருதுருப்பு, ஆங்காங்கே விளையாட்டுத்தனம் என ஜி.டி.என்-இன் இளம் வயதிற்குத் தேவையானதைச் செய்திருக்கிறார் டீஜே அருணாசலம்.

விடாத நேர்மை, ஜி.டி.என்-ஐ தோற்கடிக்கப் போராடுவது எனத் தட்டையான கதாபாத்திரத்தைத் தன் அனுபவத்தாலும், பிரத்யேக உடல்மொழியாலும் ரசிக்கும்படி மாற்றி, இரண்டாம் பாதிக்கு வலுசேர்க்கிறார் ஜெயராம்.

நக்கல், நையாண்டி, சேட்டை, எமோஷன் எனத் தான் வரும் எல்லாக் காட்சிகளில் மின்சாரம் பாய்ச்சும் சத்யராஜ், படம் முழுவதுமே தள்ளாடும் இடங்களைத் தூக்கிப் பிடித்திருக்கிறார்.

துஷாரா, கருணாகரன், முரளிதரன், பிரியாமணி ஆகியோர் கவனத்தில் நிற்க, வினய், தம்பி ராமையா, ஷீலா, அதீதி பாலன், மோகன் ராமன், ரமேஷ் திலக் போன்றோர் துணைக் கதாபாத்திர நெரிசலில் வந்துப் போகிறார்கள்.

G.D.N Review | ஜி.டி.என் விமர்சனம்
G.D.N Review | ஜி.டி.என் விமர்சனம்

கோவை கிராமங்களின் பசுமை, அக்கால மின்விளக்குகளின் எழில் போன்றவற்றை முடிந்தளவுக்கு நெருக்கமாகக் கொண்டுவந்து, ஒரு 'பயோ-பிக்' படத்திற்கான உணர்வை ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன் கடத்தியிருந்தாலும், ஆங்காங்கே தலைதூக்கும் செயற்கைத்தனம் தொந்தரவும் செய்கிறது.

பிஜித் பாலாவின் படத்தொகுப்பு தேவையான இடத்தில் நிதானத்தையும், வேகத்தையும் கொடுக்கத் தவறியிருக்கிறது.

கோவிந்த் வசந்தாவின் இசையில், 'மனச பறிச்சாயே' பாடல் மனதை வருடுகிறது. பின்னணி இசையால், உணர்வுபூர்வமான தருணங்களுக்கு விசையூட்டியிருக்கிறார் கோவிந்த்!

அக்காலகட்ட தொழிற்சாலைகள், வீடுகள், பேருந்துகள், ஜி.டி.என்-இன் கண்டுபிடிப்புகள், நவீன காருக்கு முந்தைய வடிவங்கள் என சிரில் குருவில்லாவின் தயாரிப்பு வடிவமைப்பு காட்சிக்குக் காட்சிக்கு உழைத்துக்கொட்டியிருக்கிறது. ஆனால், பெரும்பாலும் ஏ.ஐ-யைச் சார்ந்தே இருக்கும் வரைகலையில் செயற்கைத்தனம் கொப்பளிக்கிறது.

இந்திய விஞ்ஞானியும், தொழிலதிபருமான ஜி.துரைசாமி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றின் முக்கியமான பக்கங்களை மட்டும் திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார்.

1970களில் தமிழ்நாட்டுப் பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தில் ஜி.டி.என் வாழ்க்கை வரலாற்றை சேர்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்திலிருந்து தொடங்கும் படம், அவரின் இளமைக் காலத்திலிருந்து விவரிக்கத் தொடங்குகிறது.

G.D.N Review | ஜி.டி.என் விமர்சனம்
G.D.N Review | ஜி.டி.என் விமர்சனம்

ஜி.டி.என்-இன் காதல், குடும்பம், அறிவியல் ஆர்வம் எனத் தொடக்கத்தில் நிதானமாகவும், சிறிது எமோஷனுடனும் நகர்கிறது. ஆனால், நாடகத்தனமான மேக்கிங்கும், போதுமான நம்பகத்தன்மையில்லாத எமோஷன் காட்சிகளும் படத்திலிருந்து பார்வையாளர்களை விலகச் செய்கின்றன.

மாதவனின் வருகைக்குப் பிறகு விறுவிறுப்பும் பரபரப்பும் தொற்றிக்கொள்கின்றன. புதுப்புது பிரச்னைகள் வருவதும், அவற்றை அவர் சமாளிப்பதும் என இடைவேளை வரை சுவாரஸ்யத்தை ஓரளவிற்குப் பிடித்து நிறுத்துகிறது திரைக்கதை.

'சட்டப்படி மட்டுமே நடக்கும் நேர்மையான அதிகாரி ஜெயராம் vs சட்டத்தோடு மனதிற்கும் நேர்மையாக நடக்கும் ஜி.டி.என்' என்ற இரண்டாம் பாதிக்கான ஒனலைன் அழுத்தமாகவே தொடங்குகிறது. 

இருவரும் நேருக்கு நேர் இல்லாமல், சத்யராஜ் வழியாக மோதிக்கொள்வது சுவாரஸ்யம் என்றால் அவர்கள் அதற்காகப் போடும் திட்டங்கள் திரைக்கதைக்கான மோட்டராக மாறியிருக்கின்றன. பிரிட்டிஷ் காலத்திலிருந்த மோசமான வரிக்கொள்கை குறித்தும் பேசும் படம், மீண்டும் எமோஷன் மீட்டரில் கால் வைத்து, அழுத்தமில்லாத காட்சிகளால் தத்தளிக்கிறது.

ஜி.டி.என்-இன் தனித்துவமான குணங்களை மையப்படுத்தாமல், வழக்கமான நல்லவர், புத்திசாலி என்ற வண்ணத்திலேயே கதாபாத்திரம் பின்னப்பட்டுள்ளது. தேசிய, மாநில அளவில் அவரின் அரசியல் நிலைப்பாடுகள் என்ன என்பனவற்றை விளக்கும் காட்சிகளில் போதுமான தகவல்கள் இல்லை.

G.D.N Review | ஜி.டி.என் விமர்சனம்
G.D.N Review | ஜி.டி.என் விமர்சனம்

க்ளைமாக்ஸ் திருப்பங்கள் ஓரளவிற்கு இக்குறைகளைக் கலைய முற்பட்டாலும், 'பிரிட்டிஷ் வருகைக்குப் பிறகுதான் இந்தியச் சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகளும், மோசமான கல்வி முறையும் வந்ததாக' பேசுவது ஜி.டி.என்-இன் பார்வையாக இல்லாமல் பொதுவாகத் திணிக்கப்பட்ட குரலாகவே இருக்கிறது.

சுதந்திர இந்தியாவின் முக்கிய ஆளுமைகளின் ஒருவரான ஜி.டி.என்-இன் சாதனைப் பக்கங்களைத் திரையில் விரித்தது பாராட்டத்தக்க முயற்சி என்றாலும், அவற்றைச் சுவாரஸ்யமாகவும், நவீன மேக்கிங்கிலும் திரையில் காட்டத் தவறுகிறது இந்த 'ஜி.டி.என்'.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User