மாசடைந்த சுருளி அருவி; தூய்மைப் பணியில் நேரடியாகக் களமிறங்கிய கம்பம் எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா!

Jun 17, 2026 - 22:02
0
மாசடைந்த சுருளி அருவி; தூய்மைப் பணியில் நேரடியாகக் களமிறங்கிய கம்பம் எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா!

தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மற்றும் புண்ணியத் தலங்களில் ஒன்றாக விளங்கும் சுருளி அருவியில், கம்பம் தொகுதி எம்எல்ஏ பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது.

இயற்கை எழில் கொஞ்சும் சுருளி அருவிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் வருகை தருகின்றனர். 

ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக புண்ணிய ஸ்தலமாக கருதப்படும் இங்கு தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக வருவது வழக்கம்.

கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா
கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா

மேலும், கேரள மாநிலத்திலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக தர்ப்பணம் செய்ய வரும் பொதுமக்கள் பயன்படுத்திய துணிகள் மற்றும் பிற பொருள்களை ஆற்றங்கரையில் விட்டுச் செல்வதாலும், சுற்றுலாப் பயணிகள் வீசிச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளாலும் சுருளி அருவிப் பகுதி குப்பை மேடுகளாக மாறியிருந்தது. 

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 6 மணியளவில், 2 ஜேசிபி எந்திரங்கள், 2 டிராக்டர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்களுடன் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா நேரடியாக களமிறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

தர்ப்பணம் நடைபெறும் பகுதிகள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, பொதுமக்கள் சிரமமின்றி சடங்குகளை மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா
கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா

பின்னர் சுற்றுலாப் பயணிகளிடம் பேசிய அவர், "சுருளி அருவிக்கு வருபவர்கள் பிளாஸ்டிக் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருள்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.

சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி அருவிப் பகுதிக்குச் செல்லும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.  இதற்கான உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்" என்றார். மேலும், "சுருளி அருவி பராமரிப்பில் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்ஆகியோர் அருளி அருவி தூய்மை பணியில்

போதிய கவனம் செலுத்தவில்லை என்பதால் பொதுமக்கள் தொடர்ந்து எனக்கு புகார் தெரிவித்து வந்தனர். அதனால் தான் அதிகாலையில் இருந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். 

முதலமைச்சர் தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மக்கள் நலனுக்காக தொடர்ந்து களப்பணிகளை மேற்கொண்டு வருகிறது" என்றும் கூறினார்.

கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா
கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா

இந்த நிகழ்வில் கூடலூர் நகராட்சி முன்னாள் தலைவர் செல்வேந்திரன்,  தமிழக வெற்றிக் கழக மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தன்னார்வத்துடன் களமிறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்ட எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ராவின் நடவடிக்கையை, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User