"நீங்கள் போதைப்பொருளை ஊக்குவிப்பதாக மக்கள் நினைக்க மாட்டார்களா?" - மம்மூட்டியைச் சாடும் ஹரீஷ் பெராடி

Mar 21, 2026 - 19:02
 0
"நீங்கள் போதைப்பொருளை ஊக்குவிப்பதாக மக்கள் நினைக்க மாட்டார்களா?" - மம்மூட்டியைச் சாடும் ஹரீஷ் பெராடி

மலையாள இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி 'மட்டாஞ்சேரி மாஃபியா' படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஆசிஃப் அலி, நஸ்லென் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில், நடிகர் ஹரீஷ் பெராடி, இயக்குநர் காலித் ரஹ்மானுடன் மம்மூட்டி மீண்டும் இணைந்திருப்பதைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மம்மூட்டி
மம்மூட்டி

கடந்த ஆண்டு கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இயக்குநருடன் பணிபுரிவது, போதைப் பொருட்களை ஊக்குவிப்பதாக மக்கள் நினைக்க மாட்டார்களா எனக் கேள்வி கேட்டு பதிவிட்டிருக்கிறார்.

வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு, வீடுகள் கட்டித் தரும் திட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. வீடு கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பகுதிகளைச் சில தினங்களுக்கு முன்பு நேரில் பார்வையிடச் சென்றார் மம்மூட்டி.

அப்போது சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் கே. ரபீக் என்பவர் மம்மூட்டியுடன் நெருக்கமாக நடந்து வந்துகொண்டிருந்தார். அதற்கு மம்மூட்டி அவரிடம், "ஏன் எப்போதும் என் கூடவே நிற்கிறீர்கள்? நான் உங்களுக்காகத்தான் வந்தேன் என்று ஊர் மக்கள் நினைக்கமாட்டார்களா?" என்று கேட்டார். இதனைக் குறிப்பிட்டுதான் ஹரீஷ் பெராடி பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் ஹரீஷ் பெராடி, "ஒரு பொதுச் சேவகர், மம்மூட்டியிடம் சிறிது நேரம் கூடவே இருந்தபோது, 'நான் உங்களுக்காகத்தான் வந்தேன் என்று ஊர் மக்கள் நினைக்கமாட்டார்களா?' என்று தோன்றிய மம்முக்காவுக்கு, கஞ்சா வழக்கில் கைதான ஒரு இயக்குநருடன் மீண்டும் பணியாற்ற முன்வரும்போது,

நான் போதைப்பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கிறேன் என்று ஊர் மக்கள் நினைக்க மாட்டார்களா என்று ஏன் தோன்றவில்லை? எனக்குத் தெரியவில்லை. எது சரி என்றும் எனக்குத் தெரியவில்லை" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், இயக்குநர்கள் காலித் ரஹ்மான், அஷ்ரப் ஹாம்ஸா, ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிரின் வீட்டில் கஞ்சாவுடன் பிடிபட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0