பௌத்தத்திற்கு சோழர்கள் கொடுத்த தானம்.! - இந்தியா திரும்பும் ஆனைமங்கலம் செப்பேட்டின் சுவாரஸ்ய வரலாறு

May 18, 2026 - 10:01
0
பௌத்தத்திற்கு சோழர்கள் கொடுத்த தானம்.! - இந்தியா திரும்பும் ஆனைமங்கலம் செப்பேட்டின் சுவாரஸ்ய வரலாறு

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் மிகப்பெரிய கடற்படையைக் கொண்டு, கடல் கடந்த தேசங்களை எல்லாம் நடுங்கச் செய்தவர்கள் சோழ மாமன்னர்கள். அவர்கள் தங்களின் வெற்றிகளையும், கொடைகளையும் வெறும் காற்றில் எழுதிவிட்டுப் போகவில்லை; காலத்தால் அழியாத செப்புத் தகடுகளில் செதுக்கி வைத்தார்கள்.

அப்படிச் செதுக்கப்பட்ட ஒரு வரலாற்றுப் பேரதிசயம்தான், 'ஆனைமங்கலம் செப்பேடு' (லீடன் பட்டயங்கள்).

காலனித்துவ ஆட்சிக் காலத்தில் நம் மண்ணை விட்டுத் திருடப்பட்டு, நெதர்லாந்து நாட்டின் அருங்காட்சியகத்தில் முடங்கிக் கிடந்த இந்தத் தமிழர்களின் ஆகச்சிறந்த பொக்கிஷம், இப்போது மீண்டும் தாய் மண்ணிற்குத் திரும்புகிறது என்ற செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் சிலிர்க்க வைத்திருக்கிறது.

ஆனைமங்கலம் செப்பேடு
ஆனைமங்கலம் செப்பேடு

யார் இந்த ஆனைமங்கலம் செப்பேட்டின் நாயகர்கள்?

கதை கி.பி. 985 – 1014 காலகட்டத்திற்குச் செல்கிறது. தஞ்சையில் மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். இன்றைய இந்தோனேசியப் பகுதியான 'ஸ்ரீவிஜய' நாட்டின் சைலேந்திரகுல மன்னரான மாற விஜயதுங்க வர்மன், தன் தந்தையின் நினைவாக நாகப்பட்டினத்தில் 'சூடாமணி விகாரம்' என்ற பிரம்மாண்ட பௌத்த வழிபாட்டுத் தலத்தைக் கட்டுகிறார்.

மத நல்லிணக்கத்திற்குப் பெயர்பெற்ற இராஜராஜ சோழன், அந்த பௌத்த விகாரையின் பராமரிப்புச் செலவுகளுக்காக 'ஆனைமங்கலம்' கிராமத்தின் மொத்த நில வருவாயையும் தானமாக வழங்க வாய்மொழியாக ஆணையிடுகிறார்.

தந்தையின் அந்த வரலாற்று ஆணையை, அவரது வீரம் செறிந்த மகன் முதலாம் இராஜேந்திர சோழன் செப்புத் தகடுகளில் நிரந்தர சாசனமாகப் பொறித்து வைக்கிறார். இதுவே 'ஆனைமங்கலம் செப்பேடு'.

30 கிலோ எடை... 21 தகடுகள்... சோழர்களின் மாஸ்டர்பீஸ்!

இந்தச் செப்பேட்டுத் தொகுப்பைப் பற்றித் தெரிந்துகொள்வது ஆச்சரியத்தில் உச்சத்துக்கே அழைத்து செல்கிறது...

பிரம்மாண்ட எடை: மொத்தம் 21 செப்பேடுகள், ஒரு கனமான வளையத்தில் கோர்க்கப்பட்டு, சுமார் 30 கிலோ எடையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அரச முத்திரை: அந்த வளையத்தின் முன்பகுதியில் சோழர் காலத்து அதிகாரப்பூர்வ முத்திரை பதிக்கப்பட்டுள்ளது.

செப்பேட்டின் அளவு: ஒவ்வொரு செப்பேடும் 14 இன்ச் நீளமும் ஐந்து இன்ச் அகலமும் கொண்டது.

இருமொழிக் கலவை: முதல் 5 செப்பேடுகள் சமஸ்கிருதத்திலும், மீதமுள்ள 16 செப்பேடுகள் தமிழ் எழுத்துகளிலும் செதுக்கப்பட்டுள்ளன.

ஆனைமங்கலம் செப்பேடு
ஆனைமங்கலம் செப்பேடு

வரலாற்றுக் கருவூலம்: இராஜேந்திர சோழன் காலத்து கல்வி, கலாச்சாரம், அரசியல், கட்டடக்கலை, பொருளாதாரம் மற்றும் ஆட்சியமைப்பு பற்றிய குறிப்புகள் இதில் அணுவணுவாக விவரிக்கப்பட்டுள்ளன.

26 கிராமங்கள் தானம்: ஆமூர், நாணலூர், புத்தாகுடி, மூஞ்சிகுடி, சந்திரபாடி, உதய மார்த்தாண்ட நல்லூர் உள்ளிட்ட ஊர்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இராஜராஜ சோழனின் சாதனைகளுடன் 26 கிராமங்கள் தானமாக வழங்கப்பட்ட செய்தியை இதன் மூலம் அறியலாம்.

ஒருவேளை இந்தச் செப்பேடுகள் மட்டும் நமக்குக் கிடைக்காமல் போயிருந்தால், உலகப் புகழ்பெற்ற சோழப் பேரரசின் முழுமையான வரலாற்றை நாம் வரிசைப்படுத்தி அறிய முடியாமலே போயிருக்கும்.

இது குறித்து வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் Dr. S. ஹரிகிருஷ்ணன் கூறிய சுவாரசியமான தகவல்கள்...

"சோழர்களின் முழுமையான வரலாற்றை நாம் வரிசைப்படுத்தி அறிவதற்கு திருவாலங்காடு, கரந்தை, திருக்களர், எசாலம் மற்றும் ஆனைமங்கலம் ஆகிய ஐந்து முக்கிய செப்பேடுகள்தான் நமக்கு ஆதாரமாக விளங்குகின்றன.

பொதுவாகவே கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகளை விட செப்பேடுகள் என்பவை மன்னர்களின் நேரடி ஆணைக்கான சாசனங்கள். ஓலைச்சுவடிகள் போல இவை இயற்கையாக அழிவதில்லை.

வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் Dr. S. ஹரிகிருஷ்ணன்
வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் Dr. S. ஹரிகிருஷ்ணன்

ஆனால், செம்பின் உபயோகத்திற்காகப் பல செப்பேடுகள் பிற்காலத்தில் உருக்கப்பட்டுப் பாத்திரங்களாக உருவாக்கப்பட்டன. அத்தகைய இழப்புகளையும் தாண்டி நமக்குக் கிடைத்திருக்கும் இந்த ஆனைமங்கலம் செப்பேடு ஒரு வரலாற்றுப் பொக்கிஷம்.

இந்தச் செப்பேடு உருவான வரலாற்றுப் பின்னணிக்கு இணையாக, அது நெதர்லாந்து சென்ற கதையும், சோழர்களின் தலைநகர மாற்றமும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

கி.பி. 1026-ல் இராஜேந்திர சோழன் தன் தலைநகரை தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். அங்கு பிரம்மாண்ட அரண்மனைகள், கோட்டைகள் மற்றும் சோழகங்கம் என்ற ஏரியை உருவாக்கினார்.

சுமார் 250 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராக விளங்கிய அந்த வரலாற்று நகரம், 13-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரப் பாண்டியனின் படையெடுப்பால் அரண்மனைகளும் மதில்களும் தகர்க்கப்பட்டு முற்றிலும் சிதைக்கப்பட்டது.

மேலும் வேதனையான விஷயம் என்னவென்றால், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் திருவையாறு கொள்ளிடம் ஆற்றுப் பாலம் கட்டுவதற்காக, கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் உள் திருச்சுற்று மதில்களில் இருந்த, நம் முன்னோர்கள் செதுக்கிய கிடைத்தற்கரிய கல்வெட்டுப் பாறைகளைத் தூண்களாகப் பயன்படுத்தினர்.

இன்றும் அந்த எழுத்து வரிகளைப் பாலத்தின் கீழ் உள்ள தூண்களில் நாம் காண முடியும். சோழர்களின் இத்தகைய பெருமைகளைத் தாங்கிய செப்பேடுகள் வெள்ளையர் காலத்தில் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டன. அப்படித் தப்பிய இந்த ஆனைமங்கலம் செப்பேடு இப்போது நல்லெண்ண அடிப்படையில் திரும்புவது நம் வரலாற்று ஆய்வுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

ஆனைமங்கலம் செப்பேடு
ஆனைமங்கலம் செப்பேடு

சீனா கோபுரம் போல இருந்த நாகை விகாரை: என்னானது?

அன்றைய நாகப்பட்டினம் இன்றைய சென்னை துறைமுகத்தைப் போல சீனா, ஜாவா, ஸ்ரீவிஜயம் போன்ற நாடுகளின் வணிகர்கள் வந்து இறங்கும் பரபரப்பான சர்வதேச துறைமுக நகரமாகத் திகழ்ந்தது. 1660-ல் வந்த டச்சு பயணி வௌட்டர் ஸ்கௌட்டன் (Wouter Schouten) மற்றும் 1724-ல் வந்த டச்சு போதகர் ஆகியோர் இந்த சூடாமணி விகாரையைப் பார்த்து, "இது சீனக் கோபுரம் போல பிரம்மாண்டமாக உள்ளது" என்று வியந்து எழுதியுள்ளனர்.

ஆனால், சோழர்களின் இந்த கலைப் பொக்கிஷம் 1867 ஆகஸ்ட் 28 அன்று, உள்ளூர் மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, பிரெஞ்சுக்காரர் ஒருவர் கல்லூரி கட்டுவதற்காக அன்றைய கவர்னர் உத்தரவின் பேரில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது வேதனையின் உச்சம்.

அதற்கு முன்பு 150 ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு நடந்த அகழ்வாய்வில் சுமார் 300 தங்க முலாம் பூசப்பட்ட, வெண்கல புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

ஆனைமங்கலம் செப்பேடு
ஆனைமங்கலம் செப்பேடு

இந்தச் செப்பேடு நெதர்லாந்துக்கு எப்படிச் சென்றது?

கி.பி. 1700-களில் தமிழ்நாட்டின் சோழமண்டலக் கடற்கரைப் பகுதிகள் டச்சு கிழக்கு இந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்தன. அப்போது இங்கு வந்த ஃப்ளோரன்சியஸ் கேம்பர் (Florencius Camper) என்ற டச்சு மதபோதகர், இந்த மதிப்புமிக்க சோழர் காலத்துச் செப்பேடுகளைக் கண்டெடுத்துத் தன் சொந்த நாடான நெதர்லாந்திற்கு எடுத்துச் சென்றுவிட்டார்.

அவரது வழிவந்தவர்களிடமிருந்து, திருமண உறவுகள் மூலம் ஹமேக்கர் குடும்பத்திற்கு இந்தச் செப்பேடுகள் கைமாறின. இறுதியில் 1862-ல் பேராசிரியர் எச்.ஏ. ஹமேக்கர் குடும்பத்தினரால் நெதர்லாந்தின் புகழ்பெற்ற 'லெய்டன் அருங்காட்சியகத்திற்கு' இந்தச் செப்பேடுகள் வழங்கப்பட்டன.

அங்குள்ள பல்கலைக்கழகத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாக்கப்பட்டதால், உலக வரலாற்றில் இது ‘லீடன் பட்டயங்கள்’ என்று அழைக்கப்படலாயிற்று.

சர்வதேசச் சட்டங்களால் முடியாததை முடித்த 'நல்லெண்ணம்'!

இந்தியாவில் 1878-ல் கொண்டுவரப்பட்ட 'Indian Treasure Trove' சட்டத்திற்கு முன்பே இந்தச் செப்பேடுகள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டன. அதேபோல், 1970-ன் யுனெஸ்கோ விதிமுறைகளும் இதற்குப் பொருந்தாது என்பதால் சட்டப்படி இதை இந்தியா கோர முடியாது.

ஆனால், தமிழர்களின் கலாசார முக்கியத்துவத்தை உணர்ந்த நெதர்லாந்து அரசு, நல்லெண்ண அடிப்படையில் (Goodwill gesture) இந்தச் செப்பேடுகளை இந்திய அரசிடம் ஒப்படைக்க முன்வந்தது. யுனெஸ்கோவின் சர்வதேச விதிகளின்படி, கடந்த பல ஆண்டுகளாக இந்திய அரசு நடத்திய தீவிர தூதரகப் பேச்சுவார்த்தைகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இது.

ஆனைமங்கலம் செப்பேடு
ஆனைமங்கலம் செப்பேடு

இனி எங்கே பார்க்கலாம்?

தற்போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ள இந்தச் சோழர் காலத்து வரலாற்றுப் பொக்கிஷம், டெல்லியில் உள்ள இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

அதன் பிறகு, நம் தமிழ்நாட்டின் முக்கிய அரசு அருங்காட்சியகம் ஒன்றில் பொதுமக்கள் பார்வைக்காகப் பாதுகாப்பாக வைக்கப்படும்.

சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிய மண்ணில் சிறைபட்டுக் கிடந்த தமிழனின் வீரம் செறிந்த வரலாறு, இதோ தன் சொந்த மண்ணிற்கு, கம்பீரமாகத் திரும்புகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User