Doctor Vikatan: அடிக்கடி கத்திரிக்காய் சாப்பிட்டால் கிட்னி ஸ்டோன்ஸ் வருமா?

Apr 6, 2026 - 07:31
 0
Doctor Vikatan: அடிக்கடி கத்திரிக்காய் சாப்பிட்டால் கிட்னி ஸ்டோன்ஸ் வருமா?

Doctor Vikatan: சிறுநீரகக் கல் இருப்பவர்கள் தக்காளி சாப்பிடக்கூடாது என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் கத்திரிக்காயும் சாப்பிடக்கூடாது என்று சொல்வது சரியா... அடிக்கடி தக்காளியும் கத்திரிக்காயும் சாப்பிட்டால் கிட்னி ஸ்டோன் வரும் என்பது உண்மையா? 

பதில் சொல்கிறார், சிறுநீரக மருத்துவர் பிரபு காஞ்சி

சிறுநீரக மருத்துவர் பிரபு காஞ்சி

``சிறுநீரகத்தில் உருவாகும் கற்களை கால்சியம் ஆக்ஸலேட் கற்கள் (Calcium Oxalate Stones), கால்சியம் பாஸ்பரஸ் கற்கள் (Calcium Phosphorus Stones), யூரிக் அமில கற்கள் (Uric Acid Stones), ஸ்ட்ருவைட் கற்கள் (Struvite Stones) என பொதுவாக நான்கு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் இந்திய மக்கள் தொகையில் சுமார் 80% பேருக்கு கால்சியம் ஆக்ஸலேட் வகை கற்களே உருவாகின்றன.

போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் ஏற்படும் உடல் வறட்சி (Dehydration), உணவில் உப்பு மற்றும் உணவில் அதிகப்படியான  ரெட் மீட் சேர்த்துக் கொள்வது என கால்சியம் ஆக்ஸலேட் கற்கள் உருவாவதற்குப் பல  காரணங்கள் உண்டு. நாம் உண்ணும் சில உணவுகளில் ஆக்ஸலேட் அளவு அதிகமாக இருக்கும்போது, அது சிறுநீரில் கால்சியத்துடன் இணைந்து படிகங்களாக (Crystals) மாறி கற்களை உருவாக்குகிறது.

சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள் சாக்லேட், டீ, நட்ஸ், கீரை வகைகள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தக்காளி மற்றும் கத்திரிக்காயில் ஆக்ஸலேட் இருந்தாலும், அவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் (Anti-inflammatory) அதிகம் உள்ளன. எனவே, ஆரோக்கியமான நபர்கள் இவற்றைத் தாராளமாகச் சாப்பிடலாம். இவை கற்களை உருவாக்காது. 

சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள் சாக்லேட் மற்றும் டீ, நட்ஸ், கீரை வகைகள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

குறிப்பாக, கத்திரிக்காயின் தோலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் உள்ளதால், அவற்றைத் தவிர்க்க வேண்டியதில்லை. ஏற்கெனவே கால்சியம் ஆக்ஸலேட் கற்கள் இருப்பவர்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட ஆக்ஸலேட் உள்ள உணவுகளைத் தவிர்ப்பதுடன், கத்திரிக்காய் மற்றும் தக்காளி எடுத்துக்கொள்வதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். 

சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க அல்லது மீண்டும் வராமல் இருக்க  மூன்று விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு நாளைக்குக் குறைந்தது 2.5 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அல்லது திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். கோடைக்காலத்தில் இதன் அளவை இன்னும் அதிகரிக்கலாம்.  உணவில் உப்பின் அளவை பாதியாகக் குறைக்க வேண்டும்.  அசைவ உணவுகளைக் குறைத்து, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. மற்றபடி, கத்திரிக்காய், தக்காளி சாப்பிடுவதால் ஆரோக்கியமான நபர்களுக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகவெல்லாம் வாய்ப்பே இல்லை."

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0