"ராணிப்பேட்டையில் தேர்தல் வேலைகளைத் தொடங்கக் கூடாது" - அமைச்சர் காந்தி உத்தரவா? புலம்பும் திமுகவினர்

Apr 3, 2026 - 08:31
 0
"ராணிப்பேட்டையில் தேர்தல் வேலைகளைத் தொடங்கக் கூடாது" - அமைச்சர் காந்தி உத்தரவா? புலம்பும் திமுகவினர்

ராணிப்பேட்டை தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான ஆர்.காந்திக்கு இம்முறை சீட் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் வினோத் காந்திக்கு சீட் கொடுத்தது தி.மு.க தலைமை.

இதனால் கடும் விரக்தியடைந்த அமைச்சர் காந்தி, மகனிடமிருந்து எப்படியாவது சீட்டைப் பறிக்க முயன்று வருவதால் ராணிப்பேட்டை தி.மு.க-வே ரணகளமாகியிருக்கிறது!

அமைச்சர் காந்தி
அமைச்சர் காந்தி

தி.மு.க-வின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளராக இருக்கிறார் ஆர்.காந்தி. தொடர்ந்து ஆறு முறை ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு நான்குமுறை வெற்றிபெற்றுள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலில் வென்றதும் இவருக்கு அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்ட நிலையில் இந்தத் தேர்தலில் காந்திக்கு சீட்டே தராமல் தி.மு.க தலைமை புறக்கணித்துவிட்டது.

அவருக்கு பதில், அவரது மகன் விரோத் காந்தியை வேட்பாளராக அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ராணிப்பேட்டை தி.மு.க-வினர் "அமைச்சர் காந்திமீது முதல்வருக்குச் சமீபகாலமாக நன்மதிப்பு இல்லை. துறைரீதியான செயல்பாடுகளிலும், கட்சிப் பணிகளிலும் சிறப்பாகச் செயல்படவில்லை. வயதோதிகம் காரணமாக அவரது பணிகள் சுணக்கமடைவதாகக் கருதுவதால் அவருக்கு சீட் தருவதில் முதல்வருக்கு விருப்பமில்லை.

மறுபக்கம், அவரது மகன் வினோத் காந்தியும் சீட் கேட்டுவந்த நிலையில் மகனுக்குக் கொடுக்கலாம் என டிக் அடித்துவிட்டார் ஸ்டாலின். ஆனால் இதனை காந்தியால் துளியும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஏப்ரல் 6-ம் வரை வேட்புமனுத் தாக்கலுக்கு நேரம் இருப்பதால் தலைமையின் மனதை மாற்றி மகனிடமிருந்து எப்படியாவது சீட்டைப் பறிக்க பகீரத பிரயத்தனங்களைச் செய்துவருகிறார். " என்றனர்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

'மகனுக்கு சீட் கொடுத்ததற்கு ஏன் காந்தி இவ்வளவு கொந்தளிக்கிறார்' என விசாரித்தோம். அதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், "அமைச்சர் காந்திக்கும் அவரது மகனுக்கும் எப்போதும் முட்டல்மோதல்தான். கட்சியினர் மத்தியில் வினோத் காந்தி அவப்பெயரைச் சம்பாதித்து வருவதால் அவரை அரசியலைவிட்டு ஓரங்கட்ட வேண்டும் என நினைத்தார் காந்தி. ஆனால், முதல்வர் மாப்பிள்ளை ரூட்டில் தலைமையைத் தொடர்புகொண்டு சீட் வாங்கிவிட்டார் வினோத்.

ஆனாலும், அவரை வேட்புமனுத் தாக்கல் செய்யவிடாமல் தடுப்பதுடன் தொகுதியில் தேர்தல் வேலையைத் தொடங்கவிடாமல் முட்டுக்கட்டை போட்டு வருகிறார் காந்தி.

அமைச்சர் காந்தி
அமைச்சர் காந்தி

'எனக்கு சீட் உறுதியாகும்வரை வேலை தொடங்கக்கூடாது' எனக் கறார் உத்தரவும் பிறப்பித்திருக்கிறார்" என்றனர்.

தி.மு.க தலைமையிடம் இதுகுறித்து பேசினோம். "ஏப்ரல் 6-ம் தேதிக்குள் முதல்வரிடம் பேசி சீட்டை வாங்கிவிடலாம் எனப் பார்க்கிறார். ஆனால், வினோத் காந்திக்குத்தான் சீட் என முதல்வரும், முதல்வரின் மாப்பிள்ளையும் உறுதியாக இருக்கிறார்கள்" என்றனர்.

இப்ப தேர்தல் வேலை பார்க்கணுமா.. வேண்டாமா எனப் புலம்பித் தள்ளுகிறார்கள் ராணிப்பேட்டை தி.மு.க-வினர்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0