தவெக: ``என்னை மட்டும் போகஸ் செய்து விமர்சிக்கிறார்கள்!" - எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் விளக்க வீடியோ

May 19, 2026 - 16:32
0
தவெக: ``என்னை மட்டும் போகஸ் செய்து விமர்சிக்கிறார்கள்!" - எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் விளக்க வீடியோ

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ், தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கவுண்டம்பாளையம் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகளைச் சந்தித்து, தொகுதியின் சுகாதார மேம்பாடு, தூய்மைப் பணிகள், கழிவு அகற்றம் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்து, தேவையான நிர்வாக நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.

கனிமொழி சந்தோஷ்
கனிமொழி சந்தோஷ்

இந்த அதிகார்வபூர்வ சந்திப்பு கனிமொழி சந்தோஷின் வீட்டில் நடைபெற்றதாகக் கூறி பெரும் சர்ச்சை வெடித்தது. இது குறித்து தி.மு.க. கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, "அரசு மேல் அதிகாரிகளைத் தன் வீட்டுக்கு வரக் கட்டாயப்படுத்தி ஆய்வு செய்ய இந்த சட்டமன்ற உறுப்பினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?" என முதலமைச்சர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியரைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல், த.வெ.க தொண்டர்களும், "அதிகாரிகளை பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர வைத்துவிட்டு, எம்.எல்.ஏ சோபாவில் அமர்ந்திருப்பது பண்ணையார்தனமான மனநிலை. இது கட்சித் தலைவர் விஜய்யின் பெயரைக் கெடுக்கும் செயல்" என விமர்சித்தனர்.

இந்த நிலையில், எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தன் எக்ஸ் பக்கத்தில், ``எனது அன்பு மக்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு தகவல்… பல ஆண்டுகளாக நான் ஜோதிடராக மக்களை சந்தித்து வந்த எனது பழைய ஜோதிட அலுவலகம் இன்று வரை மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் சுமந்து நிற்கிறது. அந்த அலுவலகம் எனது வாழ்க்கைப் பயணத்தின் முக்கியமான நினைவுகளை தாங்கி நிற்கும் ஒரு இடம்.

தற்போது, எனது புதிய MLA அலுவலகத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அலுவலகத்தின் painting மற்றும் பிற பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மக்கள் பயன்பாட்டிற்கு சிறப்பாகவும், அனைவரும் எளிதாக சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைக்கக்கூடிய வகையிலும் அதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை, வழக்கம்போல நான் எனது பழைய ஜோதிட அலுவலகத்திலேயே பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் என்னைச் சந்திக்க விரும்பும் அனைவரையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து வருகிறேன். எனக்கு மக்கள் சேவையே முதன்மை.

அலுவலகம் எந்த இடத்தில் இருந்தாலும், மக்களின் நலனுக்காக என் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும். புதிய MLA அலுவலகம் முழுமையாக தயார் ஆனவுடன், மேலும் சிறப்பான சூழலில் அனைத்து பொதுமக்களையும் அங்கு சந்தித்து, உங்கள் தேவைகள் மற்றும் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க உறுதியாக உள்ளேன். உங்கள் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும் எனக்கு என்றும் உறுதுணையாக இருக்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``என்னை மட்டும் போகஸ் செய்து விமர்சிக்கிறார்கள். என் மீது ஏன் இவ்வளவு கோபம் எனத் தெரியவில்லை. ஒரு பெண் வெளிப்படையாக வெளியே வந்து உயர்வது மக்களுக்குப் பிடிக்கவில்லையா எனத் தெரியவில்லை. பொதுவான மக்களுக்கு புரியவேண்டும் என்பதற்காகக்த்தான் இந்தப் பதிவு" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User