சென்னை ஐஐடியில் நடைபெற்ற டிசைன் ஃபெஸ்டிவல்; வருங்கால வடிவமைப்பிற்கான ஒரு புதிய உந்துதல்!

Mar 23, 2026 - 23:32
 0
சென்னை ஐஐடியில் நடைபெற்ற டிசைன் ஃபெஸ்டிவல்; வருங்கால வடிவமைப்பிற்கான ஒரு புதிய உந்துதல்!

சென்னையை இந்தியாவின் வடிவமைப்புத் தலைநகராக (Design Capital) மாற்றும் நோக்கில், சென்னை ஐஐடி வளாகத்தில் 'சென்னை டிசைன் ஃபெஸ்டிவல் 2026' (Chennai Design Festival), நேற்று முன்தினம் (21.03.2026) மிகச்சிறப்பாக நடைபெற்றது.

காலையிலேயே ஐஐடி ஆடிட்டோரியத்தில் திரண்டிருந்த பொறியாளர்கள் மற்றும் கலைஞர்களின் முன்னிலையில், வடிவமைப்பு என்பது வெறும் பாடம் மட்டுமல்ல, அது கவனிப்பு மற்றும் பயிற்சியின் மூலம் உருவாகும் ஒரு கலை என்ற கருத்துடன் நிகழ்வு தொடங்கியது.

Chennai Design Festival
Chennai Design Festival

இயற்கை மற்றும் நம்பிக்கையைச் சார்ந்த வடிவமைப்பு

நிகழ்வின் தொடக்க உரையாற்றிய பேராசிரியர் சந்திபன் பந்தியோபாத்யாய், ஜப்பானிய புல்லட் ரயிலின் வேகத்தினால் ஏற்படும் சத்தத்தைக் குறைக்க மீன்கொத்திப் பறவையின் மூக்கு வடிவத்தைப் பயன்படுத்தியதை உதாரணமாகக் கூறி, வடிவமைப்பு என்பது இயற்கையைப் பார்த்துப் பழகும் வித்தை என்று விளக்கினார்.

தொடர்ந்து பேசிய சாம்சங் ரிசர்ச் சென்டர் இயக்குநர் சதீஷ் பாட்டீல், வடிவமைப்பு என்பது அழகை மட்டும் குறிப்பதல்ல, அது ஒரு நம்பிக்கை (Trust) என்று குறிப்பிட்டார். வாடிக்கையாளர்களின் சந்தேகத்தைப் போக்க வாஷிங் மெஷின்களில் 'டிரான்ஸ்பரன்ட்' மூடி கொண்டு வரப்பட்ட வரலாற்று ரகசியத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

வாகனக் கட்டமைப்பும் உணர்வுப்பூர்வமான வடிவமைப்பும்

நிகழ்வின் முக்கிய அம்சமாக வாகன வடிவமைப்பு குறித்த விவாதங்கள் அமைந்தன. ரெனால்ட் டஸ்டர் காரின் வடிவமைப்பாளர் அமர் கிளேர் பேசுகையில், இந்தியச் சூழலுக்கு (வெயில் மற்றும் சாலைகள்) ஏற்ப ஒரு காரைச் செதுக்குவதில் உள்ள சவால்களை விளக்கினார்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சிவகுமார், வாடிக்கையாளர்களின் உணர்வுகளைப் (Emotions) புரிந்துகொண்டு வடிவமைப்பதாலேயே சில வாகனங்கள் 'ஐகானிக்' அந்தஸ்தைப் பெறுகின்றன என்று கூறினார்.

Chennai Design Festival
Chennai Design Festival

விருது வழங்கும் நிகழ்வு:

இந்த அறிவுசார் விவாதங்களுக்கு இடையே, வடிவமைப்புத் துறையில் பல தசாப்தங்களாகப் பங்காற்றி வரும் எம். மணிவண்ணன் அவர்களுக்கு, மதிப்புமிக்க 'வடிவமைப்பு முன்னோடி விருது' (Design Pioneer Award) வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

டிவிஎஸ் (TVS) நிறுவனத்தின் விக்டர் மற்றும் ஸ்கூட்டி பெப் போன்ற புகழ்பெற்ற வாகனங்களின் வடிவமைப்பில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் மதிய அமர்வில், கட்டிடக்கலை வல்லுநர் மனோன்மணி அவர்கள் நவீன வீடுகளில் மறைந்து வரும் 'திண்ணை' மற்றும் 'முற்றம்' போன்ற பாரம்பர்யக் கூறுகளை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அதேபோல், டிவிஎஸ் 50 போன்ற சாதாரண மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் 'மக்கள் வடிவமைப்புகள்' (People's Design) குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Chennai Design Festival
Chennai Design Festival

இன்றைய டிரெண்டான ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) குறித்துப் பேசிய வல்லுநர்கள், தொழில்நுட்பம் வேகத்தைக் கொடுத்தாலும் ஒரு வடிவமைப்பாளரின் 'நோக்கத்தை' (Intent) அதனால் ஈடுசெய்ய முடியாது என்று தெளிவுபடுத்தினர். மேலும், வடிவமைப்பு என்பது மக்களின் குணநலன்களை (Behavior) மாற்றி அமைக்கும் ஒரு சக்தி வாய்ந்த கருவி என்று HDFC-யின் நரேந்திர காடே விளக்கினார்.

வடிவமைப்பு என்பது வெறும் படிப்பு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, அது மனிதநேயம் மற்றும் சமூக முன்னேற்றம் சார்ந்தது என்ற புரிதலுடன் இந்த சென்னை டிசைன் ஃபெஸ்டிவல் நிகழ்வு நிறைவடைந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0