Delimitation: `மக்களவை தொகுதிகள் சமமாக 50% உயர்வு; 2051 வரை மாற்றமில்லை'- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Nov 27, 2026 - 20:31
0
Delimitation: `மக்களவை தொகுதிகள் சமமாக 50% உயர்வு; 2051 வரை மாற்றமில்லை'- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவைத் தொகுதிகளைச் சரிசமமாக 50% உயர்த்தும் முக்கியத் திருத்தங்கள் அடங்கிய தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை இன்று (27.11.2026) பச்சைக்கொடி காட்டியுள்ளது.

வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. இந்தப் புதிய திருத்தங்களின்படி, உயர்த்தப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை அடுத்த 25 வருடங்களுக்கு, அதாவது 2051-ம் ஆண்டு வரை எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பை மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் இணைக்காமல், எல்லா மாநிலங்களுக்கும் பொதுவாக 50% இடங்களை அதிகரிப்பதன் மூலம் தென் மாநிலங்களின் அச்சத்தைப் போக்கலாம் என மத்திய அரசு கணக்குப் போட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்றத்தில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டுடன் இணைக்கப்பட்டுள்ள இந்தத் திருத்தப்பட்ட மசோதா, அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்காகவே, மழைக்காலக் கூட்டத்தொடரின் நீட்சியாக நவம்பர் 30-ம் தேதி நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை மத்திய அரசு கூட்டியுள்ளது.

புதிய மசோதா நிறைவேறினால், மக்களவையின் மொத்த பலம் 850 ஆக அதிகரிக்கும். முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அரசியலமைப்பு (131-வது திருத்த) மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது.

ஆனால், அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்ற அம்சத்திற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் மசோதா தோல்வியைத் தழுவியது. மோடி தலைமையிலான அரசு கொண்டுவந்த ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தது வரலாற்றில் அதுவே முதல்முறை.

மக்கள்தொகைப் பெருக்கம் அதிகமாக இருக்கும் வட மாநிலங்களுக்கே, மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு சாதகமாக அமையும் எனத் தென் மாநிலங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன.

மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென் மாநிலங்கள், மக்கள்தொகையை மட்டும் அளவுகோலாக வைத்துத் தொகுதிகளைப் பிரித்தால் நாடாளுமன்றத்தில் தங்களின் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என அஞ்சின.

மோடி, அமித் ஷா

அதேசமயம், இது வெறும் சதவிகித உயர்வு சார்ந்தது மட்டுமல்ல, மாநிலங்களுக்கு இடையிலான விகிதாசாரப் பகிர்வு சார்ந்தது என்ற வாதத்தையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.

கடைசியாக 1970-களில், அதாவது 1971-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மக்களவைத் தொகுதிகள் 543 ஆக வரையறுக்கப்பட்டன. அதன்பிறகு, தொகுதி மறுசீரமைப்பு இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

தற்போது மீண்டும் இந்த மசோதா விவகாரம் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது; பொறுத்திருந்து பார்க்கலாம்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User