அவதூறு வழக்கு: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதும் நள்ளிரவு ஜாமீனும்; என்ன நடந்தது?

Jul 04, 2026 - 13:01
0
அவதூறு வழக்கு: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதும் நள்ளிரவு ஜாமீனும்; என்ன நடந்தது?

கடந்த ஜூன் 20-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில், தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசினார். மேலும், சட்டசபையில் முதல்வர் அமர்ந்திருப்பது குறித்தும் விமர்சனம் செய்தார்.

இதுதொடர்பாக தவெக நகரச் செயலாளர் செல்வமுருகன் அளித்த புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 352 மற்றும் 353-2 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் ஆத்தூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

அனிதா ராதாகிருஷ்ணன் - ஸ்டாலின் - எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
அனிதா ராதாகிருஷ்ணன் - ஸ்டாலின் - எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

கைது நடவடிக்கைக்கு எதிராக, அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, "1967-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டைப் பெரும்பாலும் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான் ஆட்சி புரிந்துள்ளனர். நாம்தான் வாக்களித்து அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்.

மனுதாரர் சாதாரண குடிமகன் அல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். அவர் இதுபோல முதலமைச்சரை அவதூறாகப் பேசியிருக்கக் கூடாது" என்று கடுமையான கண்டனம் தெரிவித்து முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

முன்ஜாமீன் மனு தள்ளுபடியான சில மணி நேரங்களிலேயே, ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்றிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை, ஏ.டி.எஸ்.பி திபு மற்றும் ஆய்வாளர் ரென்னிஸ் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டனர்.

"வழக்கறிஞர் இல்லாமல் வரமாட்டேன்" எனக் கூறி அவர் தனது காரில் ஏற முயன்றார். ஆனால், காவல்துறையினர் அவரது காரில் செல்ல அனுமதி மறுத்து, சமாதானம் செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு எஸ்.பி. அபிஷேக் குப்தா மேற்பார்வையில் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடித்தது.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதை அறிந்து எஸ்பி அலுவலக வாயிலில் திரண்ட தி.மு.க வழக்கறிஞர்களும் தொண்டர்களும், அவரது உடல்நிலையைக் காரணம் காட்டி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அவரது மகன், குடும்ப மருத்துவர் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி இதய சிகிச்சை பிரிவு மருத்துவர் தலைமையிலான குழுவினர் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர்.

மாலை 6.10 மணியளவில் மருத்துவப் பரிசோதனைக்காக அவரை காவல்துறை அழைத்துச் சென்றபோது செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், ``எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணையுமாறு சிலர் வற்புறுத்தினர். நான் யாருக்கும் அடிபணிய மாட்டேன்" என்று கூறினார்.

மேலும், காவல்துறை வாகனத்தில் ஏறும் போது, "தொட்டுப்பார், நான் தி.மு.க காரன்" என்று சவால் விட்டு மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

கைது நடவடிக்கையைக் கண்டித்து தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ-க்கள் மார்க்கண்டேயன், அப்துல் வஹாப் ஆகியோர் வந்தபோது, காவல்துறையினருடன் ஏற்பட்ட சலசலப்பால் தென்காசி முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் உள்ளிட்ட 9 பேரும், திருச்செந்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 32 தி.மு.க-வினரும் கைது செய்யப்பட்டனர்.

மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நள்ளிரவில் திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் சிதம்பரம் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

10 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகையை 3 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும், அடுத்த 10 நாட்களுக்குத் தினமும் காலை 10 மணிக்கு ஆத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தவெக அமைச்சர் நிர்மல் குமார், "அனிதா ராதாகிருஷ்ணன் காலில் விழுந்து தவமிருந்தாலும், அவரை தவெக-வில் சேர்க்க மாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User