டேட்டா திணிப்பு... டெலிகாம் நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும் அரசு!

Sep 25, 2026 - 07:00
0
டேட்டா திணிப்பு... டெலிகாம் நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும் அரசு!

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) தரவுகளின்படி, இந்தியாவில் 128 கோடி பேர் மொபைல் போன் பயன்படுத்து கிறார்கள். சுமார் 69 கோடி பேர் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துகிறார்கள். டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களால் பணப் பரிவர்த்தனை தொடங்கி, புக்கிங் வரைக்கும் எல்லாப் பணிகளும் மொபைல் போன்களைச் சார்ந்தே நடக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில், டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை சுரண்டுவதும் அதிகரித்திருக்கிறது.


மொபைல் போன் ரீசார்ஜ் செய்யும்போது டேட்டாவையும் சேர்த்தே வாங்க வேண்டும் என்கின்றன டெலிகாம் நிறுவனங்கள். இதனால் டேட்டாவைப் பயன்படுத்தாதவராக இருந்தாலும், அதற்கான கட்டணத்தையும் சேர்த்துச் செலுத்தவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதைக் கேள்வி எழுப்பியுள்ள ட்ராய் அமைப்பு, வாய்ஸ், எஸ்.எம்.எஸ் மட்டும் கொண்ட விலை மலிவான திட்டங்களைத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஆனால், டெலிகாம் நிறுவனங்கள் இதற்கு செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை. நெட்வொர்க் பராமரிப்பு, அடுத்தகட்ட முதலீடுகள், தொழில்நுட்பச் செலவுகள் எனப் பல காரணங்களை அடுக்குகின்றன. ‘வாய்ஸ் கால் சேவையும் டேட்டா நெட்வொர்க்கை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகிறது’ என்று வாதிடுகின்றன.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும்; லாபம் ஈட்ட வேண்டும்; உலகத் தரத்திலான சேவையை வழங்க வேண்டும்; அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், நுகர்வோரின் தேவைதான் திட்டங்களை நிர்ணயிக்க வேண்டுமே தவிர, நிறுவனங்களின் வருவாயை ‘மக்களின் தேவை’ என்று கட்டமைக்கக் கூடாது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எளிய மக்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டுமே ஒழிய தடுத்துவிடக்கூடாது.

குறைந்த வருமானம் கொண்டவர்கள், மூத்த குடிமக்கள், அடிப்படையான மொபைல் பயன்பாட்டை மட்டுமே கொண்டவர்களுக்கு டேட்டா என்பது தேவையில்லை. அவர்களிடம் டேட்டாவையும் விற்று, கூடுதல் பணம் வசூலிப்பது நியாயமல்ல. தங்களுக்கு என்ன தேவை என்பதை முடிவு செய்ய வேண்டியது நுகர்வோர்தான் என்பதே சந்தையின் அடிப்படை ஜனநாயகம்.

டெலிகாம் நிறுவனங்களோடு பேசி அரசு உடனடியாக முறைப்படுத்த வேண்டும். தனியார் நிறுவனங்களின் வணிக நலன்களைக் காப்பதில் காட்டும் அக்கறையைக் கொஞ்சம் நுகர்வோரின் நலனைக் காப்பதிலும் காட்ட வேண்டும்.
நுகர்வோர் தேவைக்கு ஏற்ப திட்டங்கள் இருக்க வேண்டும். அந்தத் திட்டங்கள் நியாயமான கட்டணத்தில் வழங்கப்பட வேண்டும். ட்ராய் விதிமுறைகளை நிறுவனங்கள் பின்பற்றுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User