கடலூர்: `அண்ணிக்கு என்னைத்தான் பிடிக்கும்!’ - அண்ணனை `ஸ்கெட்ச்’ போட்டு முடித்த உடன்பிறவா தம்பி

Aug 24, 2026 - 20:00
0
கடலூர்: `அண்ணிக்கு என்னைத்தான் பிடிக்கும்!’ - அண்ணனை `ஸ்கெட்ச்’ போட்டு முடித்த உடன்பிறவா தம்பி

கடலூர் மாவட்டம், ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா கட்டுமானப் பணிகள் செய்யும் கூலித் தொழிலாளி. இவரும், பட்டாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அஸ்வினிதா என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து, கடந்த 2016-ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பத்து வயதில் ஒரு மகனும், எட்டு வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற இளையராஜா, அதன்பிறகு திரும்பவில்லை. அதையடுத்து உறவினர்கள் அவரைத் தேடிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியிலுள்ள ஒரு கிணற்றில் சடலமாகக் கிடந்தார் இளையராஜா. அதைப் பார்த்ததும் அவரது மனைவு உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழுதனர். அதையடுத்து சடலத்தை மீட்ட சிறுபாக்கம் போலீஸார், உடற்கூராய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இளையராஜாவின் மனைவி அஸ்வினிதா

அத்துடன் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில், உயிரிழந்த இளையராஜாவின் வீட்டுக்கு அவரது சித்தி மகன் வெங்கடேசன் அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் இளையராஜாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டர்.

அதையடுத்து அவரின் நண்பர் செல்வம், இளையராஜாவின் மனைவி அஸ்வினிதா உள்ளிட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய சிறுபாக்கம் காவல் நிலைய விசாரணை அதிகாரிகள், ``இளையராஜாவின் சித்தி மகன்தான் வெங்கடேசன். அந்த வகையில் அடிக்கடி அண்ணன் இளையராஜாவின் வீட்டுக்கு வந்து சென்றபோது, அவருக்கு அஸ்வினிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற, இருவரும் திருமண உறவை தாண்டிய நட்பில் இருந்திருக்கின்றனர்.

இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது அக்கம்பக்கத்தினர் மூலம் இளையராஜாவுக்குத் தெரியவர, இனிமேல் வீட்டுக்கு வராதே என்று வெங்கடேசனிடம் தெரிவித்திருக்கிறார். அதேபோல மனைவி அஸ்வினிதாவையும் கண்டித்திருக்கிறார். அதுபற்றி வெங்கடேசனிடம் சொல்லி அழுதிருக்கிறார் அஸ்வினிதா.

இந்த நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி இளையராஜாவிடம் மது அருந்தலாம் என்று செல்போனில் பேசிய வெங்கடேசன், காரில் வந்து அவரை அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது வெங்கடேசனின் நண்பர் செல்வமும் உடன் இருந்திருக்கிறார். தொடர்ந்து கீழக்கல்பூண்டி பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையில் மதுவை வாங்கிக் கொண்டு, ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் அமர்ந்து மூவரும் குடித்திருக்கின்றனர். அப்போது, தன் மனைவியுடன் பேசக் கூடாது என்று வெங்கடேசனிடம் கூறியிருக்கிறார் இளையராஜா.

வெங்கடேசன்

அந்த விவகாரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில், `அண்ணியிடம் நான் பேசுவேன்தான். அண்ணிக்கு உன்னைவிட என்னைத்தான் பிடிக்கும்’ என்று ஆவேசமாகத் தெரிவித்திருக்கிறார் வெங்கடேசன். அதில் கோபமடைந்த இளையராஜா வெங்கடேசனைத் தாக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் வெங்கடேசன் தாக்கியதில் அதே இடத்தில் உயிரிழந்துவிட்டார் இளையராஜா.

அவரின் சடலத்தை காரில் போட்டுக்கொண்ட இருவரும், மீண்டும் மதுவை வாங்கிக் குடித்திருக்கின்றனர். அதையடுத்துதான் ஒரங்கூருக்குச் சென்று அங்கிருந்த கிணற்றில் சடலத்தை வீசியிருக்கின்றனர். மது போதையில் தெரியாமல் கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக சீன் செட் செய்ய நினைத்திருக்கிறார்கள். ஆனால் இளையராஜாவின் உடலில் இருந்த காயங்கள் கொலையைக் காட்டிக் கொடுத்துவிட்டது” என்றனர் விரிவாக.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User