'புகாரை வாபஸ் பெற முடியாது' - பிடிவாத எடப்பாடி; டென்ஷனில் எம்எல்ஏ-க்கள்; தவெக-வின் திட்டம் என்ன?

May 23, 2026 - 18:01
0
'புகாரை வாபஸ் பெற முடியாது' - பிடிவாத எடப்பாடி; டென்ஷனில் எம்எல்ஏ-க்கள்; தவெக-வின் திட்டம் என்ன?

அ.தி.மு.க-வைச் சேர்ந்த வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான 25 எம்.எல்.ஏ-க்கள் குழுவினர், கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அவரது உத்தரவையும் மீறி, சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், த.வெ.க அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்தனர். இதனால், கட்சித் தாவல் தடைச் சட்ட சிக்கலையும் தற்போது அவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

இப்படியான சூழலில், அ.தி.மு.க-வுக்குள் கிளர்ச்சி எம்.எல்.ஏ-க்களை மீண்டும் சேர்த்துக்கொள்வது குறித்து கடந்த இரண்டு நாள்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி
அக்ரி கிருஷ்ணமூர்த்தி

ஒரு தொழிலதிபரின் கெஸ்ட் ஹவுஸில் நடந்த பேச்சுவார்த்தையில், எடப்பாடி தரப்பிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். வேலுமணி தரப்பிலிருந்து தங்கமணியும் சி.விஜயபாஸ்கரும் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளனர்.

அப்போது, ''25 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகரிடம் அளித்த புகாரை வாபஸ் பெற வேண்டும். தோல்வி குறித்து ஆராய குழு அமைக்க வேண்டும். கட்சியை வழிநடத்தவும், நீக்கம் மற்றும் சேர்க்கை தொடர்பான விவகாரங்களில் முடிவெடுப்பதற்கும் வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும்.

அந்த வழிகாட்டுதல் குழுவின் ஆலோசனைபடிதான் பொதுச்செயலாளர் நடந்துக்கொள்ள வேண்டும்'' என்று வேலுமணி தரப்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதனை அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொன்னபோது, வெடித்துவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி.

அதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் சிலர், "சபாநாயகரிடம் அளித்த புகார் லைவ்விலேயே இருந்தால்தான், கிளர்ச்சியில் ஈடுபட்ட 25 எம்.எல்.ஏ-க்களும் அவர்களுக்கு துணை போன கட்சி நிர்வாகிகளும் தனக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்று நினைக்கிறார் எடப்பாடி.

'அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டால், அந்தப் பழி முழுவதும் உங்கள் தலையில்தான் விழும். தவிர, இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் கட்சி இல்லை. நம் வசமிருக்கும் 25 எம்.எல்.ஏ பதவிகளையும் இழந்து, த.வெ.க-வை வலிமைப்படுத்த போகிறீர்களா... அல்லது, அந்த எம்.எல்.ஏ-க்களை மன்னித்து அரவணைத்து கட்சியை வலுப்படுத்த போகிறீர்களா...' என்று சீனியர்கள் சிலர் நேரடியாகவே எடப்பாடியிடம் கேட்டுவிட்டனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதற்கு, ''அவர்களை மன்னித்து புகாரை வாபஸ் வாங்கிவிட்டால், என் மீது எப்படி பயம் வரும்... அவர்களுடைய டிமாண்டுகளுக்கு நான் அடிபணிந்துவிட்டதாகப் போய்விடாதா? கட்சிக்கும் எனக்கும் துரோகம் செய்தவர்கள் பதவி இழக்கட்டுமே... அப்போதுதான் அவர்களுக்கு பொதுச்செயலாளர் பதவி மீது பயம் வரும்.

தகுதி நீக்கம் தொடர்பாகக் கொடுத்த புகார் மனுவை வாபஸ் வாங்க முடியாது' என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டார் எடப்பாடி.

ஆனாலும், அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன. திங்கட்கிழமை காலைக்குள் ஒரு பதிலைச் சொல்வதாகக் கூறியிருக்கிறார்" என்றனர்.

25 எம்.எல்.ஏ-க்கள் மீதும் எடப்பாடி தரப்பு அளித்திருக்கும் புகாரை வாபஸ் பெறவில்லை என்றால், இவ்விவகாரத்தில் சபாநாயகர் உரிய முடிவை எடுப்பாரெனத் தெரிகிறது.

ஒருவேளை 25 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டால், அந்தத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் த.வெ.க சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிப்பெற வைத்து, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தொடர்வதற்குத் திட்டமிடுகிறது ஆட்சி மேலிடம்.

எடப்பாடி பழனிசாமி எடுக்கப்போகும் முடிவைப் பொறுத்துதான், தமிழக அரசியலில் அடுத்த சூறாவளி கிளம்பும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User