கோவை: `மீண்டும் தேர்ச்சி பெற முடியுமா?’ - நீட் மறுதேர்வு பயம்; விபரீத முடிவெடுத்த மாணவி!

Jun 17, 2026 - 17:32
0
கோவை: `மீண்டும் தேர்ச்சி பெற முடியுமா?’ - நீட் மறுதேர்வு பயம்; விபரீத முடிவெடுத்த மாணவி!

கோவைப்புதூர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் பிரபு. கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாவட்டச் செயலாளராக உள்ள இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் அனுகீர்த்தனா (19) எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து, நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருந்தார். சிறு வயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்த அனுகீர்த்தனா, நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து கடந்த ஆண்டு தீவிரமாகப் படித்துத் தேர்வும் எழுதி இருந்தார்.

அனு கீர்த்தனா
அனு கீர்த்தனா

​மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக அவர் ஆவலோடு காத்துக் கொண்டு இருந்த சூழலில், கடந்த முறை எழுதப்பட்ட நீட் தேர்வு முறைகேடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அனுகீர்த்தனாவிற்கு கடுமையான மனச்சோர்வை ஏற்படுத்தி இருந்தது. ‘மீண்டும் தேர்வு எழுதினால் தேர்ச்சி பெற முடியுமா?’ என்ற மன அழுத்தம் காரணமாக இன்று அதிகாலையில் அனுகீர்த்தனா தனது சித்தப்பாவிற்கு  வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு, உடல்வலிக்கு பயன்படுத்தும் மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அதிகாலையில் இந்த வாட்ஸ்-அப் தகவலைப் பார்த்து பதறிய அனுகீர்த்தனாவின் சித்தப்பா,  வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மயங்கிய நிலையில் இருந்தார். ​உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனுகீர்த்தனா பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்கொலை தடுப்பு மையம்

இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பத்மநாதன், “அனுகீர்த்தனா ஏற்கெனவே நீட் தேர்வு எழுதிய நிலையில், மீண்டும் நீட் தேர்வு என்பதால் கடும் மன அழுத்தத்தில் இருந்தார். இந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக, தேர்வு ரத்து செய்யப்பட்டதால் 21 லட்சம் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்” என்றார்.

நீட் தேர்வு காரணமாக 19 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து குனியமுத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User