கோவை: சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி: ``நெஞ்சை உலுக்கும் பேரதிர்ச்சியை.!"- செந்தில் பாலாஜி

May 23, 2026 - 10:31
0
கோவை: சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி: ``நெஞ்சை உலுக்கும் பேரதிர்ச்சியை.!"- செந்தில் பாலாஜி

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, நடப்புக் கல்வியாண்டில் 5ம் வகுப்புக்கு செல்ல இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்ற நிலையில், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது அச்சிறுமியை இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் கடத்தி சென்றதாக தெரியவந்தது. இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இந்நிலையி்ல் நேற்று கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக சூலூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு விசாரித்தனர். அதில் தேடப்பட்டு வந்த சிறுமி, சடலமாக கிடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.

சிறுமி உயிரிழப்பு

இதனிடையே சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், சிறுமியின் முகம் உள்ளிட்ட பகுதிகள் சிதைக்கப்பட்டு இருப்பதாகவும் சிறுமியின் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டு அவரது உறவினர்களும், பெற்றோரும் சூலூர் காவல் நிலைய வாயில் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சிறுமி கொலை தொடர்பாக அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்துக்குரிய கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கார்த்தி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் கார்த்திக் மற்றும் அவருக்கு உதவியதாக மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட கார்த்தி காவல் துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஒரு கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தாக கூறப்படுகிறது. இதில் வலது கை மற்றும் கால் முறிவு ஏற்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் பலரும் தவெக அரசின் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தன் எக்ஸ் பக்கத்தில், ``கோவை மாவட்டம், சூலூர், கண்ணம்பாளையம் பேரூராட்சியில், வெறும் 10 வயது நிரம்பிய பச்சிளம் சிறுமி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு, அவரது உடல் குளத்தில் வீசப்பட்டிருக்கும் சம்பவம், நெஞ்சை உலுக்கும் பேரதிர்ச்சியையும், சொல்ல முடியாத வேதனையையும் அளிக்கிறது.. அவரின் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிக்கிறேன்.

செந்தில் பாலாஜி

ஒரு மலராக மலர வேண்டிய குழந்தையின் உயிரை இவ்வளவு கொடூரமாக பறித்துள்ள அந்த மிருகத்தனமான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் எந்தவித தாமதமுமின்றி அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசையும் காவல்துறையையும் வலியுறுத்துகிறேன். புதிய அரசு பொறுப்பேற்ற பின், கடந்த இரண்டு வாரங்களாக நாம் செய்திகளில் காணும் பல்வேறு சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு குறித்த மக்களின் அச்சத்தையும் கவலையையும் அதிகரித்துள்ளன.

மக்களின் உயிரும், பாதுகாப்பும் அரசின் முதன்மை பொறுப்பு என்பதை இந்த புதிய அரசு உணர்ந்து, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் தீவிரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்

முன்னாள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் உடல் வீசப்பட்டுள்ள மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம், மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. ஒரு குழந்தையை இப்படி படுகொலை செய்துள்ள மிருகத்தனமான குற்றவாளிகளை, உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு மற்றும் காவல்துறையை வலியுறுத்துகிறேன்.

பாஜக அண்ணாமலை
அண்ணாமலை

கடந்த திமுக ஆட்சியில் நிலவிய அதே பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல் தற்போதும் தொடர்வது கவலைக்குரியது. தவெக அரசு ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. பதவியேற்பு வைபவங்களுக்கு மத்தியில், முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான தீவிரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டிய சூழலில் இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User