Cockroach Janta Party: அவமானத்தை ஆயுதமாக்கிய இணையப் புரட்சி! - அரசுக்கு சவால் விடும் கரப்பான்பூச்சி!
இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடந்த 15-ம் தேதி ஒரு வழக்கு விசாரணையின்போது, ``வேலையில்லாமலும், எந்தத் தொழிலிலும் இடம் கிடைக்காமலும் இருக்கும் கரப்பான்களைப் போன்ற இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சமூக ஊடகச் செயல்பாடுகள், பத்திரிகைத்துறை அல்லது பொதுநலப் பிரசாரங்களைத் கையில் எடுத்துக்கொண்டு எல்லோரையும் தாக்கத் தொடங்குகிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்துக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி, இளைஞர்களை இழிவுபடுத்துவதாக அமைந்தது.
அவரின் கருத்து சமூக ஊடகங்களில் சர்ச்சையான நிலையில், `போலிப் பட்டங்களைப் பெறுபவர்களைக் குறித்தே நான் அவ்வாறு கூறினேன். இந்தியாவின் இளைஞர்களை அவமதிக்கும் நோக்கம் எனக்கில்லை. ஊடகங்கள் எனது கூற்றைத் தவறாகச் சித்தரித்துவிட்டது." என நீதிபதி விளக்கமளித்திருந்தார்.
இருப்பினும், இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி அபிஜீத் திப்கே என்ற இளைஞர், `இளைஞர்கள் அனைவரும் தங்களை "கரப்பான் பூச்சிகள்" என்று பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொள்ளுமாறு எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் தகவல் தொடர்பியல் (Political Communication Careers) நிபுணர் துறைக்கு படிக்கும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அபிஜீத் தீப்கே (30), கடந்த வாரம் இந்த கருத்தை விமர்சிக்கும் வகையில் கிண்டலாக 'காக்ரோச் ஜனதா கட்சி' (Cockroach Janta Party - CJP) என்ற வலைதளைத்தை தொடங்கினார். எக்ஸ், இன்ஸ்டாகிராம் என சமூக ஊடகங்களிமும் இந்தக் 'சிஜேபி' கட்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இவர் 2012-ல் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இருந்து உருவான ஆம் ஆத்மி கட்சியுடன் (AAP) இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வேடிக்கையான நையாண்டியாகத் தொடங்கப்பட்ட இந்த விவகாரம், அதிவேகமாக ஓர் ஆன்லைன் அரசியல் இயக்கமாக உருவெடுத்தது. லட்சக்கணக்கான இளைஞர்கள் இதன் இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து கொண்டனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.90 கோடியைத் (19 Million) தாண்டியிருக்கிறது. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இது இந்த நாட்டின் பிரதமர் மோடி, பா.ஜ.க, கங்கிரஸ் என அரசியல் கட்சி, அரசியல் தலைவர்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை விடப் பலமடங்கு அதிகம். இதன் அதீத வளர்ச்சி காரணமாகவே இந்தியாவின் பாதுகாப்பைக் கருதி இதன் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டது.
மேலும், கரப்பான் பூச்சியைத் தன் அரசியல் சின்னமாக ஏற்றுக்கொண்ட இக்கட்சி, மோடி அரசைக் குறிவைத்து மீம்ஸ்கள், போலித் தேர்தல் பிரச்சார வாசகங்கள் மற்றும் நையாண்டிக் கருத்துக்களைப் பதிவிடத் தொடங்கியது.

சில நாட்களிலேயே, கூகுள் ஃபார்ம் (Google Form) மூலமாக பல்லாயிரக்கணக்கான ஆன்லைன் தன்னார்வலர்களை ஈர்த்ததுடன், மகுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் போன்ற சில எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆதரவையும் பெற்றது. சிஜேபி (CJP) தனக்கென ஒரு தேர்தல் அறிக்கை மற்றும் கட்சிப் பாடலையும், தேர்தல் சின்னத்தையும் வெளியிட்டு அசத்தியது.
அபத்தமான நகைச்சுவையைப் போராட்ட வடிவமாக மாற்றி, இந்திய சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த சிஜேபி கட்சியின் சார்பில், ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அரசியல் சீர்குலைவுகளைக் கேலி செய்யும் மீம்ஸ்களும் (Memes), குறும் காணொளிகளும் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. கடுமையான சூழ்நிலைகளிலும் உயிர்வாழும் திறன்கொண்ட கரப்பான் பூச்சியை, இந்திய இளைஞர்கள் சகிப்புத்தன்மையின் குறியீடாக நகைச்சுவையுடன் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

நகைச்சுவையாகவும், தன்னையே கிண்டல் செய்துகொள்ளும் வகையிலும் சிஜேபி கட்சியில் இணைவதற்கு தகுதிகளாக சிலவற்றை வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக வேலையில்லாமல் இருப்பது, சோம்பேறியாக இருப்பது, எப்போதும் ஆன்லைனிலேயே கிடப்பது, தொழில்முறையாகப் புலம்புவது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இக்கட்சியின் தேர்தல் அறிக்கையாக, வாக்குப்பதிவு முறைகேடுகள், கார்ப்பரேட் ஊடகங்களுக்கும் அரசாங்கத்திற்கும் உள்ள தொடர்பு மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு அரசுப் பதவிகள் வழங்குவது போன்ற இந்திய அரசியலின் முக்கியமானப் பிரச்சினைகளை நையாண்டித் தனமாகப் பேசுகிறது.
இது தொடர்பாக பேசிய அபிஜீத் திப்கே, ``இதில் எதுவுமே திட்டமிட்டுச் செய்யப்பட்டது அல்ல. இந்த இயக்கத்தின் அசுர வளர்ச்சி, இந்திய இளைஞர்களிடையே தேங்கிக்கிடக்கும் ஏமாற்றத்தையும் விரக்தியையும் பிரதிபலிக்கிறது. இளைஞர்கள் உண்மையில் மிகுந்த விரக்தியில் இருந்தனர். அவர்களுக்குத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த எந்த வடிகாலும் இல்லை. அரசின் மீது அவர்கள் கடுமையான கோபத்தில் இருக்கின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் சமீபத்தில் அரசு வேலைவாய்ப்புத் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிவு என பாதிக்கப்பட்ட இளைஞர்களின் கோபத்திற்கு மத்தியில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்தின் கருத்து இந்த இயக்கத்திற்குத் தீப்பொறியாக அமைந்தது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மோடிக்கு எதிராகவோ அல்லது அரசாங்கத்திற்கு எதிராகவோ பேச யாரும் தயாராக இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இப்போது காலங்கள் மாறிவருகின்றன. சிஜேபி எந்தவொரு உண்மையான அரசியல் அமைப்போடும் இணைக்கப்படவில்லை. இருப்பினும், இதன் எழுச்சி ஒட்டுமொத்த தெற்காசியாவிலும் நிலவும் ஒரு பொதுவான போக்கை எதிரொலிக்கிறது.
சமீபத்திய ஆண்டுகளில் இலங்கை, வங்காளதேசம் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்களில் இளைஞர்கள் முக்கியப் பங்கு வகித்ததை இது நினைவுபடுத்துகிறது. இளைஞர்கள் மிகவும் விரக்தியடைந்துள்ளனர். ஆனால் அரசு அவர்களின் கவலைகளைக் காதுகொடுத்துக் கேட்பதில்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியாவில் இந்த நெருக்கடி மிகவும் தீவிரமாக உள்ளது, ஏனெனில் நாட்டின் மக்கள் தொகையில் கால் பகுதிக்கும் அதிகமானோர் இளைஞர்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோருக்குப் போதிய வேலை வாய்ப்புகள் இல்லை. அதோடு, அதிகரித்து வரும் மத ரீதியிலான தீவிரத்தன்மை, பிரிவினை, பொருளாதாரப் சமத்துவமின்மை போன்ற விவகாரங்களால் ஆளும் இந்து தேசியவாதக் கட்சியின் மீது பல இளம் வாக்காளர்கள் கோபத்தில் உள்ளனர் என்பது புரியவருகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
பா.ஜ.க ஆதரவாளர்கள் மற்றும் சிஜேபியின் எதிர்ப்பாளர்கள் சிலர், இதை எதிர்க்கட்சிகளுடன் தொடர்புடைய ஒரு வெறும் ஆன்லைன் கிம்மிக் (Gimmick) என்று நிராகரித்துள்ளனர். இதற்குத் அபிஜீத் திப்கேயின் பழைய ஆம் ஆத்மி பின்னணியைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், இது ஒரு டிஜிட்டல் பிரச்சாரமே தவிர, அடிமட்ட மக்கள் இயக்கம் அல்ல என்பதால், இதன் வேகம் விரைவில் குறைந்துவிடும் என்றும் அவர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.
ஆனால், களத்தில் தற்போது சில இளைஞர்கள் கரப்பான் பூச்சி போன்ற ஆடைகளை அணிந்து போராட்டங்களில் கலந்துகொள்ளத் தொடங்கியதன் மூலம், இந்த இயக்கம் மெதுவாக நிஜ உலகிற்குள் நுழையத் தொடங்கியுள்ளது என்பதை மறுக்கமுடியாது. கரப்பான் பூச்சிகள் என்ன செய்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)