3-வது ஆட்சியின் 2-ம் ஆண்டு நிறைவு: "பயோகேஸ் நோக்கி இந்தியா நகர வேண்டும்" - பிரதமர் அறிவுறுத்தல்

May 22, 2026 - 09:31
0
3-வது ஆட்சியின் 2-ம் ஆண்டு நிறைவு: "பயோகேஸ் நோக்கி இந்தியா நகர வேண்டும்" - பிரதமர் அறிவுறுத்தல்

பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சிக்காலத்தின் இரண்டாவது ஆண்டு ஜூன் 9-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, அரசின் பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கான மத்திய அமைச்சரவையின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் மற்றும் பிற இணை அமைச்சர்கள் என அனைவரும் பங்கேற்ற இந்த உயர்மட்டக் கூட்டம், சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

மோடி - அமைச்சர்கள்
மோடி - அமைச்சர்கள்

இந்தக் கூட்டத்தில் பொருளாதாரம், விவசாயம், தொழிலாளர் நலன் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட ஒன்பது முக்கிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்பாக, மேற்கு ஆசியப் போர் காரணமாக இந்தியா எதிர்கொண்டு வரும் சவால்கள் குறித்து இதில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. உலக அளவில் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய பிரதமர், ``சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் முட்டுக்கட்டை காரணமாக கச்சா எண்ணெய், எரிவாயு, உரங்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, பயோகேஸ் மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் போன்ற மாற்று எரிபொருட்களை நோக்கி இந்தியா தீவிரமாக நகர வேண்டியது அவசியம்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மேலும், அரசு நிர்வாகத்தில் சிவப்பு நாடா முறையை ( bureaucratic red tape) முற்றிலும் ஒழிக்க வேண்டும். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். கோப்புகள் ஒரு மேஜையிலிருந்து மற்றொரு மேஜைக்குக் காலவரம்பின்றி நகர்ந்து கொண்டிருக்கக் கூடாது.

எந்தவொரு பணியும் தொய்வடையாமல், எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் மிக விரைவாக மக்களுக்குப் பலன் தரும் வகையில் செயலாக்க வடிவம் பெற வேண்டும்" என அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User