நெருக்கும் திமுக... சட்டமன்றத் தேர்தல் போட்டியிலிருந்து பின்வாங்குகிறாரா திருமாவளவன்?

Apr 4, 2026 - 16:30
 0
நெருக்கும் திமுக... சட்டமன்றத் தேர்தல் போட்டியிலிருந்து பின்வாங்குகிறாரா திருமாவளவன்?

2026 சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறேன் என வி.சி.க தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்த நிலையில், அந்த முடிவை தி.மு.க ரசிக்கவில்லை என்கிறார்கள் வி.சி.க-வினர். தேர்தலில் திருமா போட்டியிடுகிறாரா இல்லையா என்பது குறித்து விசாரித்தோம்.

thirumavalavan
thirumavalavan

தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 தொகுதிகள் பெற்ற நிலையில், கடந்த மார்ச் 29-ம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சித் தலைவர் திருமாவளவன்.

அதன்படி, திருப்போரூரில் பன்னீர்தாஸ், அரக்கோணத்தில் எழில் கரோலின், செய்யூரில் சிந்தனைச் செல்வன், பெரியகுளத்தில் ஆற்றலரசு, பண்ருட்டியில் அப்துல் ரகுமான், கள்ளக்குறிச்சியில் மாலதி ஆகியோரை வேட்பாளராக அறிவித்தார்.

காட்டுமன்னர்கோவிலில் கட்சியின் தலைவர் என்கிற முறையில் நானே களமிறங்குகிறேன் என அறிவித்தார் திருமாவளவன். ''2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் சூழல் வெகுவாக மாறவிருக்கிறது, அதனாலேயே மாநில அரசியலுக்குத் திரும்புகிறேன்'' என்றும் குறிப்பிட்டார். ஆனால், அவர் போட்டியிடுவதாக அறிவித்திருந்த நிலையில், அதில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

நம்மிடம் பேசியவர்கள், "முதலில் மாநில அரசியலுக்குத் திரும்புகிறேன் என திருமா அறிவித்ததை தி.மு.க தலைமை கொஞ்சமும் விரும்பவில்லை. ‘நீங்கள் ஏன் காட்டுமன்னார்கோயிலில் போட்டியிட வேண்டும்... சிதம்பரம் எம்.பி தொகுதிக்கான இடைத்தேர்தலை யார் எதிர்கொள்வது...’ என்று நேரடியாகவே கேட்டிருக்கிறார்கள் தி.மு.க தரப்பில், அந்தக் கேள்வியை திருமா எதிர்பார்க்கவில்லையாம்.

அதேபோல,‘தொங்கு சட்டமன்றம் அமையலாம். கூட்டணி அமைச்சரவையில் இடம்பிடிக்கலாம்...’ என்ற கருத்துடன் திருமாவளவன் இருக்கிறார் என்பதையும்; தி.மு.க-வுடன் இணக்கம் காட்டியதால் மூன்று சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு வாய்ப்பு தராமல் புறக்கணித்தையும் அறிவாலயத் தரப்பு எதிர்பார்க்கவில்லை.

இறுதியாக, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முடிவை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அழுத்தமாகக் கோரியிருக்கிறார்கள்" என்றனர்.

thirumavalavan
thirumavalavan

வி.சி.க நிர்வாகிகள் சிலரோ, "வி.சி.க-வின் வேட்பாளர் பட்டியலால் ரொம்பவும் அப்செட்டாகியிருக்கிறது தி.மு.க தலைமை. இச்சூழலில், 'நீங்கள் போட்டியிட வேண்டாம்' எனச் சொன்ன பிறகும் முறுக்கிக் கொண்டு போட்டியிட வேண்டுமா என்ற குரல் கட்சிக்குள் எழுந்திருக்கிறது.

தி.மு.க-வுக்கு விருப்பத்தை மீறி போட்டியிட்டால் ‘வி.சி.க போட்டியிடும் தொகுதிகளில் பெரிய ஆர்வமெல்லாம் காட்ட வேண்டாம். எட்டுத் தொகுதிகளும் கைவிட்டுப் போனாலும் பரவாயில்லை’ என்ற முடிவை தி.மு.க எடுக்கலாம் எனச் சொல்லப்படுவதால் எங்கள் தலைவர் காட்டுமன்னார்கோவிலில் போட்டியா.. இல்லையா.. என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஆனால், எங்கள் தலைவர் வெளியிட்ட அறிவிப்பிலிருந்து பின்வாங்குபவர் அல்ல.. பார்ப்போம்" என்கிறார்கள் நம்பிக்கையுடன். ட

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0