Birds: "இந்தப் பூமி வெறும் மனிதர்களுக்கானது மட்டுமல்ல..." - கண்ணாடிச் சுவர்களால் பலியாகும் பறவைகள்

Jul 04, 2026 - 17:01
0
Birds: "இந்தப் பூமி வெறும் மனிதர்களுக்கானது மட்டுமல்ல..." - கண்ணாடிச் சுவர்களால் பலியாகும் பறவைகள்

மலைகளின் அரசியான நீலகிரி மலையில் இயற்கை எழிலைச் சிதைத்து கட்டப்பட்டு வரும் ஆடம்பர தங்கும் விடுதிகளால் ஏற்படும் சூழலியல் பாதுகாப்புகள் ஒருபுறம் என்றால் தங்கும் விடுதிக்குள் இருந்தவாறே இயற்கை எழிலைக் கண்டு ரசிக்கிறோம் என்கிற பெயரில் முழுக்க முழுக்க கண்ணாடிகளைக் கொண்டு எழுதப்படும் சுவர்களில் பறவைகள் மோதி துடிதுடித்து உயிரிழக்கும் துயரங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டுச் சென்றும் அரசு அதிகாரிகள் வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள் எனப் பறவைகள் குறித்தான ஆய்வாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

பறவை
பறவை

இந்தத் துயரம் குறித்து பகிர்ந்த ஓங்கில் அறக்கட்டளை நிறுவனரும் பறைவை ஆர்வலருமான மலை நாடன் ஆசாத், "பறவைகளைக் காண்பதற்காக வந்திருந்த விருந்தினர்களை அழைத்துச் செல்ல தங்கும் விடுதி ஒன்றின் வெளியே காத்திருந்தேன். பட்டென ஒரு சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன்.

குக்குருவான் எனப்படும் ( White cheeked barbet) பறவை ஒன்று விடுதியின் கண்ணாடி சுவரில் மோதி விழுந்து அலகில் இரத்தம் சொட்டச் சொட்ட துடிதுடிக்கொண்டிருந்தது. சில விநாடிகளில் அந்தப் பறவை துடிதுடித்து இறந்தது. கலங்கிய கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

வந்திருந்த விருந்தினர்களும் இதைக் கண்டு வருத்தமுற்றார்கள். பெரும் சோகத்துடன் பறவைகளைப் பார்க்க புறப்பட்டோம். பறவைகள் ஏன் இப்படி அநியாயமாகக் கொல்லப்பட வேண்டும். ஒரு கழுகின் இறைக்காக இவை இறந்திருந்தால் பெரிதாக வருத்தம் இருந்திருக்காது. ஆனால், மனிதர்களின் பேராசைகளால், அழகை ரசிக்கிறோம் என்கிற பெயரில் கட்டப்படும் நவீன கட்டுமானங்களால், இருபுறமும் ஒளி ஊடுருவும் கண்ணாடிகள் இருப்பதால் அது பறக்கும் வழி என்று நினைத்து மோதி விழும் பறவைகள் இறக்கின்றன.

உண்மையில் நம்மால் கொலை செய்யப்படுகின்றன. நம்மால் இப்படித் தொடர்ந்து கொலை செய்யப்படும் பறவைகளைச் சில ஆண்டுகளுக்கு முன் பார்த்துவிட்டு கலங்கி உயிரியியல் ஆய்வாளர் மொய்னுதீனுடன் பேசிக் கொண்டிருந்தபோது இதை ஆவணப்படுத்தலாம் என அவர் சொல்ல, இரண்டு ஆண்டுகளுக்கு முன் எங்கள் குழுவின் ஆய்வுக்கட்டுரை ஒரு ஆய்விதழிலில் வெளியானது.

அதை அடிப்படையாக வைத்து மாவட்ட ஆட்சியர் , வனத்துறை உயர் அதிகாரிகள் எனப் பலருக்கும் கடிதம் எழுதி பறவைகள் மோதலைத் தடுக்க சில வழிகாட்டுதல்களை முன் வைத்தோம்.

கண்ணாடி சுவரில் மோதி உயிரிழந்த பறவை.
கண்ணாடி சுவரில் மோதி உயிரிழந்த பறவை.

ஆனால், எந்தப் பயனுமில்லை. அந்தக் கடிதங்கள் கண்டுகொள்ளப்படவே இல்லை. சில இதழ்களில் செய்திகளும் வெளியாகின. ஆனாலும் கண்டுகொள்ளப்படவே இல்லை. கடந்த மாதம் புதுதில்லியில் நடைபெற்ற கருத்தரங்கத்தின் கருப்பொருளாக எங்களின் ஆய்வுக்கட்டுரை பேசப்பட்டுள்ளது. ஒரு நம்பிக்கையை விதைத்துள்ளது.

இந்தியாவில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வே முதல் ஆய்வு என அவர்களும் தெரிவித்துள்ளனர். தற்போது தோழர் திரு. சக்திவேல் Poovulagin nanbargal இணையத்தில் சிறப்பான ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். இன்னும் இப்பிரச்னை பெரிதாகப் பேசப்பட வேண்டும். நீங்களும் பேசுங்கள். அரசின் செவிகளில் எட்டும் வரை பேசுங்கள். இந்தப் பூமி யாவருக்குமானது. வெறும் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல" எனக் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User