Binance:`ரூ.52,000 கோடிப்பு.!' - ஒரே லேப்டாப் மூலம் உலகின் மிகப்பெரிய சைபர் கொள்ளை நடந்தது எப்படி?

Oct 31, 2026 - 17:30
0
Binance:`ரூ.52,000 கோடிப்பு.!' - ஒரே லேப்டாப் மூலம் உலகின் மிகப்பெரிய சைபர் கொள்ளை நடந்தது எப்படி?

டிஜிட்டல் நாணயங்கள் உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலமாகப் பார்க்கப்படும் சூழலில், அதன் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு பிரம்மாண்ட சைபர் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைத் தளமான ‘பைனான்ஸ்’ (Binance), வரலாறு காணாத ஒரு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதில், சுமார் 6.3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 52,000 கோடி ரூபாய்) மதிப்பிலான டிஜிட்டல் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது, உலகெங்கிலும் உள்ள கிரிப்டோ முதலீட்டாளர்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மெகா கொள்ளையின் பின்னணியில் வடகொரியாவின் தொடர்பு இருக்கலாம் எனச் சர்வதேச ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். குறிப்பாக, வடகொரியாவின் ‘டிரேடர்ட்ரெயிட்டர்’ (TraderTraitor) என்ற ஹேக்கிங் குழு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று பிபிசி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்தச் சம்பவம், கிரிப்டோ பரிவர்த்தனைத் தளங்களின் பாதுகாப்பு குறித்த கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. பூட்டை உடைக்காமல், சாவி வைத்தே திருடியது போன்ற இந்த நூதன கொள்ளை எப்படி நடந்தது? முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளதா?

Binance

வழக்கமாக, ஹேக்கர்கள் பயனர்களின் தனிப்பட்ட கடவுச்சொற்களை (Private Keys) திருடித்தான் பணத்தைக் கொள்ளையடிப்பார்கள். ஆனால், இந்தத் தாக்குதல் முற்றிலும்மான வேறுபட்ட முறையில் நடத்தப்பட்டுள்ளது. பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு டெவ்ஆப்ஸ் பொறியாளரின் (DevOps engineer) மடிக்கணினியை ஹேக் செய்ததன் மூலம், அதன் உள்கட்டமைப்புக்குள் ஊடுருவியுள்ளனர்.

தனிப்பட்ட பயனர்களின் கணக்குகளை உடைப்பதற்குப் பதிலாக, பைனான்ஸின் சொந்த அமைப்புகளையே தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, பணப் பரிமாற்றங்களுக்கு ஒப்புதல் அளிக்க வைத்துள்ளனர். இதுகுறித்து கிரிப்டோ கண்காணிப்பு நிறுவனமான எல்லிப்டிக்கின் (Elliptic) தலைமை விஞ்ஞானி டாம் ராபின்சன் கூறுகையில், "இது ஒற்றை மடிக்கணினியைக் கடந்து, நிறுவனத்தின் முக்கிய அமைப்புகளுக்குள் ஹேக்கர்கள் அணுகலைப் பெற்றிருப்பதைக் காட்டுகிறது. பைனான்ஸின் சாவியைப் பயன்படுத்தியே, அதன் பெட்டகத்தைத் திறந்துள்ளனர்" என்று விவரிக்கிறார்.

இந்தக் கொள்ளையின் அளவு கற்பனைக்கு எட்டாதது. இதுவரை நடந்ததிலேயே இதுதான் உலகின் மிகப்பெரிய திருட்டாக இருக்கலாம் என ‘எல்லிப்டிக்’ நிறுவனம் கூறுகிறது. கடந்த ஆண்டு துபாயைச் சேர்ந்த ‘பைபிட்’ (Bybit) தளத்தில் நடந்த 1.5 பில்லியன் டாலர் கொள்ளையை விட இது நான்கு மடங்கு அதிகம். 2003 ஈராக் போருக்கு முன்னால் பாக்தாத்தில் உள்ள ஈராக் மத்திய வங்கியில் இருந்து திருடப்பட்ட 1 பில்லியன் டாலர் கொள்ளையுடன் இதை ஒப்பிடுகிறார் டாம் ராபின்சன். உலகின் மிகப் பெரிய கிரிப்டோ தளமான பைனான்ஸ், ஒரு நாளைக்குச் சுமார் 95 பில்லியன் டாலர் மதிப்பிலான பரிவர்த்தனைகளைக் கையாள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ‘ஹாட் வாலெட்டுகள்’ (Hot Wallets) மூலமே இத்தகைய தாக்குதல்கள் பெரும்பாலும் சாத்தியமாகின்றன. பரிவர்த்தனைகளுக்கு விரைவாகப் பணத்தை அணுகுவதற்காக இந்த வாலெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இணைய இணைப்பில் இல்லாத ‘கோல்டு வாலெட்டுகள்’ (Cold Wallets) அதிகம் பாதுகாப்பானவை என்றாலும், ஹாட் வாலெட்டுகளின் பாதிப்பு ஒட்டுமொத்த அமைப்பையும் உலுக்குகிறது.

கிரிப்டோ

கொள்ளையடிக்கப்பட்ட இந்தப் பணத்தை ஹேக்கர்கள் எப்படிப் பயன்படுத்துவார்கள்?

பிளாக்செயின் பகுப்பாய்வு நிறுவனமான ‘செயின்அனாலிசிஸ்’ (Chainalysis), திருடப்பட்ட டிஜிட்டல் சொத்துக்களைப் பாரம்பரியப் பணமாக மாற்றுவதற்கு ஹேக்கர்கள் இதற்கு முன் கண்டிராத புதிய வழிமுறைகளைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறது. இந்த செயல்முறைக்கு வாரங்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட ஆகலாம். கட்டுப்பாடுகள் குறைந்த பரிவர்த்தனைத் தளங்களுக்குப் பணத்தை மாற்றுவது, ஒரு கிரிப்டோ நாணயத்தை மற்றொன்றாக மாற்றுவது, தரகர்கள் மூலம் கமிஷனுக்குப் பணமாக மாற்றுவது போன்ற பல வழிகளை அவர்கள் கையாளக்கூடும்.

இந்த இக்கட்டான சூழலில், பைனான்ஸ் நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு ஓர் உறுதியை அளித்துள்ளது. உறுதிசெய்யப்பட்ட அனைத்து இழப்புகளையும் தனது சொந்த நிதியிலிருந்து ஈடுசெய்வதாகவும், பயனர்களின் நிதி பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், தாக்குதலுக்கு உள்ளான சொத்துக்களில் பாதியை முடக்கிவிட்டதாகவும், அதை ஹேக்கர்களால் அணுக முடியாது என்றும் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து டெபாசிட்கள் மற்றும் வித்ட்ராயல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்த மெகா கொள்ளைச் சம்பவம், டிஜிட்டல் நிதி உலகின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதிநவீனத் தொழில்நுட்பத்தால் பாதுகாக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு கோட்டை, இவ்வளவு எளிதாக உடைக்கப்பட்டிருப்பது, ‘நமது டிஜிட்டல் சொத்துக்கள் உண்மையிலேயே பாதுகாப்பானவையா?’ என்ற அடிப்படைக் கேள்வியை ஒவ்வொரு முதலீட்டாளரின் மனதிலும் எழுப்பியுள்ளது. இதன் அதிர்வுகள் கிரிப்டோ சந்தையில் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User