அட்டப்பாடி மது கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை; கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு

May 26, 2026 - 08:01
0
அட்டப்பாடி மது கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை; கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி இளைஞர் மது(30) 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ஒரு கும்பல் தாக்கியதில் மரணமடைந்தார்.

பசிக்கு கடைகளில் இருந்து உணவுபொருட்கள் திருடியதாகக் குற்றம் சுமத்தி மதுவை அஜமுடி காட்டில் இருந்து பிடித்து கொண்டுவந்த அந்தக் கும்பல் முக்காலி பகுதியில் கட்டி வைத்து தாக்கியது.

அந்தக் கும்பல் தாக்கும் வீடியோக்கள் அந்தச் சமயத்தில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. மது கொலை வழக்கில் மண்ணார்க்காடு பட்டியலினத்தவருக்கான தனி கோர்ட் கடந்த 04.03.2023 அன்று வழங்கிய தீர்ப்பில், நான்காம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அனீஷ், 11-ம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அப்துல் கரீம் ஆகியோர் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டனர்.

முதல் குற்றவாளியான ஹுசைன் உள்ளிட்ட 14 பேரும் குற்றவாளிகள் என கோர்ட் அறிவித்தது. அவர்களுக்கு 05.03.2023 அன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 13 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

16-ம் குற்றவாளியான முனீருக்கு 3 மாதம் சிறைத்தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் ஏற்கனவே விசாரணை சமயத்தில் சிறையில் இருந்ததால் 500 ரூபாய் அபராத தொகை மட்டும் செலுத்தியதை அடுத்து விடுவிக்கப்பட்டார்.

முதல் குற்றவாளியான ஹுசைனுக்கு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மற்ற 12 குற்றவாளிகளுக்கும் தலா ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

கோர்ட்டுக்கு வந்த அட்டப்பாடி மது குடும்பத்தினர்
கோர்ட்டுக்கு வந்த அட்டப்பாடி மது குடும்பத்தினர்

அந்தத் தீர்ப்பு மூலம் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனக்கூறி மதுவின் தாய் மல்லி மற்றும் அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதே சமயம், தண்டனையை ரத்தாக்க வேண்டும் எனக் குற்றவாளிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி வி.ராஜா விஜயராகவன், நீதிபதி கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது. ஏற்கனவே 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்ததை ஆயுள் தண்டனையாக உயர்த்தி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதேசமயம், முதல் குற்றவாளியான ஹுசைன் விடுவிக்கப்பட்டார். ஹுசைனின் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததாலேயே ஐ.பி.சி பிரிவு 149-ன் கீழ் குற்றம்சாட்ட முடியாது. கும்பலின் பொதுவான நோக்கத்தில் இவருக்கும் பங்கு இருந்ததா அல்லது அத்தகைய நோக்கம் பற்றி இவருக்குத் தெரிந்திருந்ததா என்பதை நிரூபிக்க வேண்டும்.

குடும்பத் தேவைக்காகவே தான் முக்காலிக்கு வந்ததாக ஹுசைன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மதுவை காட்டிலிருந்து பிடித்துக் கட்டிக் கொண்டு வந்தவர்களின் கூட்டத்தில் ஹுசைன் இல்லாததால், உயர் நீதிமன்றம் ஏற்கனவே இவருக்கு ஜாமீன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அட்டப்பாடி மது கொலை சம்பவம்
அட்டப்பாடி மது கொலை சம்பவம்

இரண்டு மற்றும் மூன்றாவது குற்றவாளிகளான முக்காலி மரைக்கார், பொதுவச்சோல ஷம்சுதீன், 5 முதல் 10 வரையிலான குற்றவாளிகளான தாழுசேரி ராதாகிருஷ்ணன், பொதுவச்சோல அபூபக்கர், படிஞ்ஞாறபள்ள குரிக்கள் வீட்டில் சித்திக், தொட்டியில உபைது, விருத்தியில் நஜீப், மண்ணம்பற்ற ஜெய்ஜுமோன், மற்றும் 12 முதல் 15 வரையிலான குற்றவாளிகளான புத்தன்புரக்கல் சஜீவ், கள்ளமல முரிக்கட சதீஷ், செருவில் ஹரீஷ் (42), கள்ளமல பிஜு ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நான்காம் குற்றவாளி கக்குப்படி குன்னத்துவ வீட்டில் அனீஷ், 11-வது குற்றவாளி முக்காலி சோலையில் அப்துல் கரீம் ஆகியோரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. 16-வது குற்றவாளி முனீருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்திருந்த மூன்று மாத சிறைத்தண்டனை மற்றும் 500 ரூபாய் அபராதத்தை, ஒரு வருட சிறைத்தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதமாக உயர்த்தி உத்தரவிடப்பட்டது.

குற்றவாளிகள் தலா மூன்று லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும், தவறினால் மேலும் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். அபராதத் தொகையில் 30 லட்சம் ரூபாய் மதுவின் தாய்க்கும், மீதமுள்ள தொகை சட்டப்படியான வாரிசுகளுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User