அரக்கோணம்: அதிமுக ஹாட்ரிக் வெற்றி; மீண்டும் களமிறங்கும் சு.ரவி - என்ன செய்யப் போகிறது திமுக?

Mar 6, 2026 - 18:00
 0
அரக்கோணம்: அதிமுக ஹாட்ரிக் வெற்றி; மீண்டும் களமிறங்கும் சு.ரவி - என்ன செய்யப் போகிறது திமுக?

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் தனித்தொகுதியை அ.தி.மு.க தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக மூன்றாவது முறையாக நீடிக்கும் அ.தி.மு.க-வின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளரான சு.ரவி, வரும் தேர்தலிலும் களமிறங்குகிறார்.

அரக்கோணம் நகர்ப்பகுதி வாக்குகள் தி.மு.க-வுக்குக் கைகொடுத்தாலும், தொகுதியைக் கூட்டணிக்குத் தாரை வார்ப்பதால் அ.தி.மு.க-வுக்கே சாதகமான சூழல் ஏற்பட்டுவிடுகிறது. அதனால் இந்த முறை `தி.மு.க நேரடியாகப் போட்டியிட வேண்டும்’ என உடன்பிறப்புகள் போர்க்கொடித் தூக்கியிருக்கின்றனர்.

நெமிலி ஒன்றியச் சேர்மனும், தி.மு.க ஒன்றியச் செயலாளருமான பெ.வடிவேலு தனது மனைவி பவானிக்காக சீட் கேட்கிறார். மாவட்ட அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகனின் ஆதரவும் பவானிக்கு இருக்கிறது. சீட்டுக்கான ரேஸிலும் பவானியே முந்துகிறார்.

சேர்மன் வடிவேலு - மனைவி பவானி

சேர்மன் வடிவேலு வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் மனைவி பவானி பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வரும் பவானி, தி.மு.க-விலும் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளராக ஆக்டிவ்வாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். `பவானிக்கு சீட் கிடைக்குமேயானால், வன்னியர்களின் ஆதரவும் தி.மு.க-வுக்குக் கிடைக்கும். கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டால் தேர்தல் முடிவு அ.தி.மு.க-வுக்கே மீண்டும் சாதகமாகக்கூடும்’ எனக் கணக்குப்போடுகிறார்கள் உடன்பிறப்புகள்.

அரக்கோணம் தொகுதியைப் பொறுத்தவரை பட்டியலினத்தவரும், வன்னியர்களுமே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றனர். விஜய் களத்துக்கு வந்திருப்பதால், மும்முனைப் போட்டி நிலவுகிறது. எனவே, பட்டியல் சமூக வாக்குகள் மூன்றாகப் பிளவுப்படும்.

அன்புமணி தலைமையிலான பா.ம.க கைகொடுப்பது, இந்த முறையும் அ.தி.மு.க-வுக்குப் பிளஸ். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போதும், பா.ம.க மூலமாகத்தான் வன்னியர் வாக்குகளை அறுவடை செய்தார் சு.ரவி. அப்போது, தி.மு.க கூட்டணியில் களமிறங்கிய வி.சி.க வேட்பாளர் கௌதமசன்னா சுமார் 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் சு.ரவியிடம் தோல்வியடைந்தார். இப்போதும் அதே திட்டத்துடன்தான் காய் நகர்த்துகிறார் சு.ரவி என்கின்றனர்.

அமைச்சர் காந்தி - எம்.பி ஜெகத்ரட்சகன்

இந்த நிலையில்தான், `கடந்த முறைப்போல வி.சி.க அல்லது காங்கிரஸ் கட்சிக்குத் தொகுதியைத் தாரை வார்த்தால் தி.மு.க கூட்டணிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்படும்’ என தி.மு.க மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ஆர்.காந்தியும் கணக்குப் போடுகிறார். எம்.பி ஜெகத்ரட்சகனும் தொடர் தோல்வியை விரும்பவில்லை.

ஜெகத்ரட்சகனும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரைப் பிரசாரக் களத்தில் இறக்கி அந்தச் சமூக வாக்குகளை அறுவடை செய்யலாம் என்கின்றனர் உடன்பிறப்புகள். `ஒருவேளை மறுபடியும் கூட்டணிக்கு தொகுதியைக் கொடுத்துவிட்டால், ஜெகத்ரட்சகன் பிரசாரம் செய்ய வரமாட்டார். சேர்மன் வடிவேலு தனது தீவிர ஆதரவாளர் என்பதால், அவரின் மனைவிக்கு சீட் கிடைக்கும் பட்சத்தில் ஜெகத்ரட்சகன் வியூகம் அமைத்து பிரசாரக் களத்துக்கு வருவார். எனவே, காந்தியின் கணக்கும், ஜெகத்ரட்சகனின் வியூகமும் தி.மு.க-வின் வெற்றிக்கு கைகொடுக்கும்’ என்கிறார்கள் அரக்கோணம் தொகுதி உடன்பிறப்புகள்.

Loading…

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0