"பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்த நான் காரணமா?" ஆவேசமான வி.டி.சதீசன்!
கொச்சி சி.எம்.ஆர்.எல் கம்பெனி மற்றும் எக்ஸாலஜிக் நிறுவனத்துக்கு இடையேயான பண பரிவர்த்தனை சம்பந்தமாக கடந்த 27-ம் தேதி அமலாக்கத்துறை கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் ரெய்டு நடத்தியது. அது பெரிய அளவில் அரசியல் அதிர்வலையை ஏற்படுத்தியது. அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகளின் கார் நொறுக்கப்பட்டது. அது சம்பந்தமாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு சி.பி.எம் நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வரும், கேரள சட்டசபை எதிர்கட்சி தலைவருமான பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது பற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் வி.டி.சதீசன் சில நாட்கள் கருத்து தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வி.டி.சதீசனிடம் அதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய வி.டி.சதீசன் கூறுகையில், "அமலாக்கத்துறை ரெய்டு விவகாரத்தில் எப்போது பதில் சொல்லவேண்டும் என முடிவுசெய்ய எனக்கு கால அவகாசம் வேண்டும். செய்தியாளர்கள் 12 முறை கேள்வி கேட்டதாக சொல்கிறார்கள். கேள்விக்காக ஒருமுறை மைக் நீட்டியபோது அது எனது முகத்தில் இடித்தது. அதுபற்றி நான் யாரிடமும் கூறவில்லை. எப்போது பதில் சொல்ல வேண்டும் என்பதற்கான உரிமையை எனக்கு தரவேண்டும். கேள்விகேட்க உங்களுக்கு உரிமை இருப்பதுபோன்று, பதிலளிக்க எனக்கு அவகாசம் தேவை. அதுபற்றி முழுமையாக தெரிந்து கொண்டுதான் நான் பேச முடியும். எனவே பதில் எப்போது சொல்ல வேண்டும் என நன் முடிவு செய்வேன்.

அது மத்திய அரசின் ஏஜென்சி பதிவு செய்த வழக்கு. விசாரணையின் ஒரு பகுதியாக அவர்கள் நடவடிக்கைகள் எடுக்கிறார்கள். மாநில அரசுக்கு இதில் எந்த ரோலும் இல்லை. ரெய்டு பற்றி எங்களுக்கு அவர்கள் தெரிவிக்கக்கூட இல்லை. போலீசுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. ஆனாலும், கூட்டமாக இருந்ததால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிடக்கூடாது எனக்கருதி போலீஸை அங்கு அனுப்பினார் உள்துறை அமைச்சர். விசாரணையின் ஒரு பகுதியாக வந்த பெண்கள் உள்ளிட்ட அதிகாரிகளை ஒரு குழு தாக்குதல் நடத்தி காரை உடைக்கிறார்கள். காருக்குள் இருந்தவர்களை தாக்குகிறார்கள். அது சட்டத்துக்கு எதிரானது. எக்காரணத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அங்கு போலீஸ் போகாமல் இருந்தால் என்ன ஆகியிருக்கும் என நினைத்துப்பாருங்கள்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வழக்கில் சி.பி.எம் அரசு அதிகாரத்தில் இருக்கும்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிர்கட்சி தலைவர் பினராயி விஜயன் ரெய்டு முடிந்து வெளியே வந்ததும் ராகுல் காந்தியை குற்றம்சாட்டி பேசுகிறார். அவர் மத்திய அரசையோ, பா.ஜ.க-வையோ குற்றம்சாட்டவில்லை. ராகுல் காந்தியா ரெய்டுக்கு ஆட்களை அனுப்பினார். ராகுல்காந்திக்கு எதிராக வழக்கு வந்தபோது, காங்கிரஸ் தொண்டர்களை ஏவி காரை உடைக்கச் சொன்னாரா. 55 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோதும் அமைதியாக ஒத்துழைப்பு அளித்தார் ராகுல் காந்தி. அது அரசியலுக்காக எடுத்த வழக்கு என்பதால் அரசியல் ரீதியாக எதிர்த்தோம். பினராயி விஜயனின் குடும்பத்தில் ஒருவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது என்றால் அதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளுங்கள். இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என ஒருவர் கோர்ட்டுக்குச் சென்றார். விசாரணை தொடர வேண்டும் என கோர்ட் கூறியது. விசாரணை சட்டப்படி அல்லவா நடக்கிறது. மத்திய அரசு ஏஜென்ஸி, கோர்ட் அனுமதியுடன் வழக்கு நடத்தும்போது, அதை விமர்சிக்க மாநில அரசுக்கு என்ன அதிகாரம் உள்ளது.

நான் மரியாதை நிமித்தமாக பிரதமரை சந்தித்தேன். எனக்கு முன்பு இருந்த பினராயி விஜயனும் இதுபோன்று 2 முறை சந்தித்துள்ளார். நான் முதன் முறையாகதான் பிரதமர் மோடியை சந்தித்தேன், நான் அவரை சந்தித்து, உடனே 'பினராயி விஜயனின் வீட்டில் இ.டி-யை விட்டு நாளையே ரெய்டு நடத்தவேண்டும்' எனச்சொன்னதாகவும். உடனே பிரதமர் மோடி போனை எடுத்து டயல் செய்து 'சதீசன் வந்து சொன்னதால் நாளை காலையில் அனைத்து இடங்களிலும் ரெய்டு நடத்தவேண்டும்' என சொன்னதாகவும் என்பதுபோன்று முன்னாள் அமைச்சர்கள் கூட மீடியாக்களிடம் சொல்லுவதை பார்க்கும்போது காமெடியாக உள்ளது. இதைக்கேட்டு நான் சிரிக்க வேண்டுமா அல்லது அழ வேண்டுமா? முதிர்ந்த அரசியல் தலைவரான பினராயி விஜயன் அப்படி எதுவும் சொல்லமாட்டார். சி.எம்.ஆர்.எல் கம்பெனியில் இருந்து அனைத்து கட்சியினரும் நன்கொடை வாங்கியுள்ளார்கள். அது அல்ல வழக்கு. அந்த நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு பெரிய தொகை மணி லாண்டரியாக சென்றுள்ளது. அதுதான் வழக்கு. எனவே இதில் மாநில அரசு தலையிட முடியாது" என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)