FIFA: 6.1 கிலோ தங்கம்; திருட்டு, சேதம்... கையால் தொட முடியாது? - உலகக் கோப்பையின் அறியா பக்கங்கள்!

May 30, 2026 - 08:02
0
FIFA: 6.1 கிலோ தங்கம்; திருட்டு, சேதம்... கையால் தொட முடியாது? - உலகக் கோப்பையின் அறியா பக்கங்கள்!

கால்பந்து உலகக் கோப்பை.

இது வெறும் விளையாட்டுப் போட்டியின் வெற்றிச் சின்னம் மட்டுமல்ல. ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை, உலகமே வெறித்தனமாகக் கொண்டாடும் ஒரு திருவிழாவின் மகுடம்.

பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா என விரல் விட்டு எண்ணக்கூடிய அணிகள் மட்டுமே முத்தமிட்ட அந்தத் தங்கக் கோப்பையின் பின்னால், சுவாரஸ்யமான, திகைப்பூட்டும், சில சமயங்களில் நம்ப முடியாத மர்மக் கதைகள் புதைந்துள்ளன.

அதன் மதிப்பு தங்கத்தில் மட்டுமல்ல, அது கடந்து வந்த பாதையிலும் உள்ளது.

FIFA உலகக் கோப்பை
FIFA உலகக் கோப்பை

இன்று நாம் பார்க்கும் உலகக் கோப்பை, 1930-ல் அறிமுகமான அசல் கோப்பை அல்ல. முதல் கோப்பையின் பெயர் 'ஜூல்ஸ் ரிமெட் கோப்பை'. FIFA-வின் முதல் தலைவர் ஜூல்ஸ் ரிமெட்டின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

கிரேக்க வெற்றிச் சின்னமான 'நைக்'-இன் உருவம் தாங்கிய, தங்க முலாம் பூசப்பட்ட ஸ்டெர்லிங் வெள்ளியால் ஆனது அது. 1970-ல் பிரேசில் அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்றபோது, விதிமுறைப்படி அந்த அசல் கோப்பை அவர்களுக்கே நிரந்தரமாக வழங்கப்பட்டது.

அதன்பிறகுதான், இன்று நாம் காணும் 'FIFA உலகக் கோப்பை' என்ற புதிய கோப்பை வடிவமைக்கப்பட்டது. 1974-ல் மேற்கு ஜெர்மனி அணிதான் இந்தப் புதிய கோப்பையை முதன்முதலில் கைகளில் ஏந்தியது.

இரண்டாம் உலகப் போர், உலகையே உலுக்கிக் கொண்டிருந்த காலம். அப்போது FIFA-வின் துணைத் தலைவராக இருந்த இத்தாலியைச் சேர்ந்த ஒட்டோரினோ பராசி, ஒரு துணிச்சலான காரியத்தைச் செய்தார்.

ரோம் நகரில் உள்ள ஒரு வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜூல்ஸ் ரிமெட் கோப்பையை, ஆக்கிரமிப்புப் படைகளின் கைகளில், குறிப்பாக ஹிட்லரின் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக ரகசியமாக வெளியே எடுத்தார். பின்னர், அதை ஒரு சாதாரண ஷூ பாக்ஸில் வைத்து, தனது கட்டிலுக்கு அடியில் போர் முடியும் வரை மறைத்து வைத்தார்.

ஒரு ஷூ பாக்ஸிற்குள் உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் பரிசுகளில் ஒன்று பதுக்கப்பட்டிருந்தது, வரலாற்றின் ஒரு ஆச்சரியமான அத்தியாயம்.

FIFA உலகக் கோப்பை
FIFA உலகக் கோப்பை

அந்தக் கோப்பைக்கு சோதனை திருட்டு வடிவத்திலும் வந்தது. 1966-ல், இங்கிலாந்தில் உலகக் கோப்பை நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, லண்டனில் ஒரு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஜூல்ஸ் ரிமெட் கோப்பை திருடப்பட்டது.

ஒட்டுமொத்த இங்கிலாந்துமே அதிர்ச்சியில் உறைந்தது. ஆனால், 'பிக்கிள்ஸ்' என்ற ஒரு நாய் ஹீரோவாக மாறியது. தனது உரிமையாளருடன் நடைபயிற்சி சென்றபோது, ஒரு செய்தித்தாளில் சுற்றப்பட்டிருந்த பொட்டலத்தை பிக்கிள்ஸ் முகர்ந்து கண்டுபிடித்தது. உள்ளே, தொலைந்துபோன உலகக் கோப்பை!

அந்த ஆண்டு இங்கிலாந்து கோப்பையை வென்றபோது, வெற்றிவிழா விருந்துக்கு பிக்கிள்ஸுக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், சோகம் அத்துடன் முடியவில்லை. பிரேசிலுக்கு நிரந்தரமாக வழங்கப்பட்ட அதே ஜூல்ஸ் ரிமெட் கோப்பை, 1983-ல் ரியோ டி ஜெனிரோவில் உள்ள பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு தலைமையகத்தில் இருந்து மீண்டும் திருடப்பட்டது. இந்த முறை, அது முழுமையாக மீட்கப்படவே இல்லை.

தற்போதைய கோப்பை 18 காரட் தங்கத்தால் ஆனது. அதன் மொத்த எடை சுமார் 6.1 கிலோ. இதன் மதிப்பு பல லட்சங்கள் என்றாலும், இதன் கௌரவம் விலைமதிப்பற்றது.

இந்தக் கோப்பையை யார் வேண்டுமானாலும் தொட்டுவிட முடியாது. உலகக் கோப்பையை வென்ற வீரர்கள் மற்றும் நாட்டின் தலைவர்கள் மட்டுமே அசல் கோப்பையை வெறும் கைகளால் தொட முடியும் என்பது எழுதப்படாத விதி. மற்றவர்கள் கையுறைகளை அணிய வேண்டும்.

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள FIFA அருங்காட்சியகத்தில்தான் அசல் கோப்பை நிரந்தரமாக உள்ளது. வெற்றி பெறும் அணிக்கு அதன் பிரதி மட்டுமே வழங்கப்படும்.

FIFA 2022; மெஸ்ஸி

அப்படி வழங்கப்பட்ட ஒரு பிரதியைத்தான், 2014-ல் கோப்பையை வென்ற ஜெர்மனி வீரர்கள் தங்களது வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சேதப்படுத்தி விட்டனர். கோப்பையின் ஒரு சிறிய பகுதி உடைந்துவிட்டதாக ஜெர்மன் கால்பந்து சங்கமே ஒப்புக்கொண்டது.

ஒவ்வொரு முறையும் ஒரு அணி வெல்லும்போது,சல் கோப்பையின் அடிப்பாகத்தில் அந்த அணியின் பெயர் பொறிக்கப்பட்டு, அதன் வரலாறு புதுப்பிக்கப்படுகிறது.

இது வெறும் தங்கம் அல்ல; கனவு, உழைப்பு, கண்ணீர், கொண்டாட்டம், துரோகம், வீரம் எனப் பல உணர்ச்சிகளின் சரித்திரப் பெட்டகம்.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User