"அமைச்சர் வன்னிஅரசு சொல்வது வேறு... நான் எழுப்புகிற கேள்விகள் வேறு!" - விளக்குகிறார் ஆளூர் ஷாநவாஸ்
த.வெ.க அரசின் மூன்று மாதகால ஆட்சி குறித்து பல்வேறு அதிரடி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ். இந்தச் சூழலில், நமது சந்தேகங்களை கேள்விகளாக்கி அவர் முன்வைத்தோம்...
"பா.ஜ.க கட்டுப்பாட்டில் த.வெ.க ஆட்சி நடைபெறுவதால்தான் விமர்சனங்களை முன்வைத்து வருகிறேன்' என்கிறீர்கள். கடந்த ஆட்சியிலும்கூட, 'பா.ஜ.க-வுடன் தி.மு.க திரைமறைவு கூட்டணி வைத்திருப்பதான' விமர்சனங்களும் இருந்ததுதானே?"
"கொள்கையை விட்டுக்கொடுத்துவிட்டார்கள், ஆளுநரோடு சமரசம் செய்துகொண்டார்கள் என்பதுபோன்ற குற்றச்சாட்டுகள் எதுவும் அன்றைய தி.மு.க அரசு மீது இல்லையே!
சட்டசபையில் இரண்டுமுறை தேசியகீதம் பாடப்பட வேண்டும் என்கிறார் ஆளுநர். அதை ஏற்றுக்கொண்ட த.வெ.க அரசு, 'பதிலுக்கு எங்கள் உரையை அப்படியே படிக்கவேண்டும்' என்கிறார்கள். அதற்கு ஆளுநரும் ஓ.கே சொல்லிவிட்டார். 'ஆளுநர் சொல்வதைத்தான் நான் கேட்பேன்' என அப்போது எந்த துணைவேந்தராவது சொன்னார்களா? நமது முதல்வராது அந்த துணைவேந்தரை இப்போதுவரை கண்டித்தாரா... அல்லது அந்த பட்டமளிப்பு விழாவையாது தடுத்து நிறுத்தினாரா? 'நீட் விலக்கு' என்பதுதானே இன்றைய தமிழக அரசின் கொள்கை! அதை முன்வைத்துத்தானே மாணவர்கள் போராடினார்கள். அதை ஏன் இந்த அரசு ஒடுக்க நினைத்தது?

தி.மு.க ஆட்சியின்போது, நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்களுக்கு அன்றைய அரசு அனுமதி மறுத்ததா அல்லது போராட்டக்காரர்களைத்தான் போலீஸ் வைத்து நெட்டித் தள்ளியதா? ஆக, இந்த கொள்கை முரண்பாடுகளைத்தான் நான் சுட்டிக்காட்டுகிறேன்."
"மத்திய பா.ஜ.க-வின் 'புதிய கல்விக்கொள்கை', 'விஸ்வகர்மா திட்டம்' உள்ளிட்டவற்றை அடியொற்றி அன்றைய தி.மு.க அரசும், 'மாநில கல்விக்கொள்கை', 'நவீன தொழில் பயிற்சி' திட்டங்களைக் கொண்டுவந்ததாக விமர்சனங்கள் உண்டுதானே?"
"மத்திய அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவருகிறது என்றாலே அதில் நமக்கு எதிரான அம்சங்கள்தான் 100% இருக்கும் என கூறிவிட முடியாது. எனவே, புதிய கல்விக்கொள்கையில் நமது மாநிலக் கொள்கைகளுக்கு எதிராக இருக்கக்கூடிய விஷயங்களை எல்லாம் நீக்கி, நாம் புதிதாக ஒரு மாநில கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்துதானே ஆகவேண்டும். உதாரணமாக, 'தாய்மொழிக் கல்வி'யை மேற்கண்ட இரண்டு திட்டங்களுமே வலியுறுத்துகிறது என்றாலும், இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை, அதன் உள்ளடக்க நோக்கத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொண்டாக வேண்டும்."
"கூட்டணி ஆட்சியில் இருக்கும்போது 'கூட்டணி தர்மத்துடன் உள்ளுக்குள் விவாதிக்க வேண்டும்' என்ற வைகோவின் வாதத்தில் உள்ள நியாயத்தை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?"
"அப்படியென்றால், அந்த நியாயங்களை எப்போதுமே வெளியில் பேசக்கூடாது. கடந்த காலங்களில், 'உதய சூரியன் சின்னத்தில் நின்று போட்டியிடுங்கள்' என வி.சி.க-விடமும்தான் தி.மு.க கேட்டுக்கொண்டது. ஆனால், தனிச்சின்னத்தில் நிற்பதற்கான எங்கள் உரிமையைப் போராடிக் கேட்டுப்பெற்று நாங்கள் தேர்தலை சந்தித்தோம். அதைத்தானே ம.தி.மு.க-வும் செய்திருக்க வேண்டும். ஆனால், அப்போது வாய்மூடி மௌனமாக இருந்த வைகோ, இப்போது வெளியில் வந்து ஏன் அதையெல்லாம் பேசுகிறார்? 'கூட்டணி தர்மம் ஆகுமா?' என்ற அவரது கூற்றுபடியே பார்த்தாலும், இது எப்படி நியாயமாகும்?
'நியாயத்தை எங்கு வேண்டுமானாலும் பேசலாம்; அதுதான் நமது கட்சியின் தனித்தன்மையை வெளிக்காட்டும்' என எங்கள் தலைவரே பொதுவெளியில் சொல்லியிருக்கிறார்."
"அப்படியென்றால், 'பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள், ஒரு ஜோதிடரை எப்படி அரசு அதிகாரியாக நியமிக்கலாம்?' என த.வெ.க அரசைக் கேள்வி கேட்கவேண்டிய திருமாவளவன், 'அது முதல்வர் விருப்பம்-உரிமை' என்று கருத்து தெரிவித்தது ஏன்?"
"அந்த நியமனத்தை வி.சி.க-வில் உள்ள பலருமே ஒரு கோணத்தில் கண்டித்தோம்தான். அதேசமயம், எங்கள் தலைவர் ரத்தன் பண்டிட்டை ஜோதிடராக பார்க்காமல், முதல்வரின் நண்பராக மட்டுமே பார்த்து அந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார். இது ஒரு சின்ன விஷயம். ஆனால், கடந்த மூன்று மாத கால த.வெ.க அரசு மீது நான் வைக்கும் விமர்சனங்கள் என்பது கொள்கை ரீதியிலான மிகப்பெரிய விஷயங்கள்!"
"சமூக நீதித்துறை பெயர் சர்ச்சையின்போது ஆரம்பத்தில் முரண்பட்ட கருத்தைக்கூறிய அமைச்சர் வன்னி அரசு, பின்னர் 'வி.சி.க தலைவர் கருத்தே என் கருத்தும்' என நிலையை மாற்றிக்கொண்டார். ஆனால், நீங்கள்?"
"சமூக நீதித்துறையாக தொடரக்கூடாது; ஆதி திராவிடர் நலத்துறையாக மாற்றப்பட வேண்டும் என்பது எங்கள் கட்சியின் நிலைப்பாடு. எனவேதான் அமைச்சர் வன்னி அரசுவும் 'கட்சி நிலைப்பாடு எதுவோ அதுதான் என் நிலைப்பாடும்' என சொல்லிவிட்டார். ஆனால், நான் எழுப்புகிற கேள்விகள் வேறு... 'தேசிய கீதத்தை இரண்டு முறை பாடவேண்டும், தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்துக்குத் தள்ள வேண்டும்' என்பதெல்லாம் கட்சியின் நிலைப்பாடா?
'இந்து அறநிலையத்துறையையே கலைக்கவேண்டும்' என்ற சொல்கிற பா.ஜ.க அண்மையில், இந்து அறநிலையத்துறைக்கு பாராட்டு தெரிவிக்கிறது. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தலைமைச் செயலாளரை, த.வெ.க அரசு பணி நீட்டிப்பு செய்திருக்கிறது. இதையெல்லாம் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்காமல், ஏன் என்று கேள்வி எழுப்புவதுதானே வி.சி.க-வின் நிலைப்பாடு. அதைத்தானே நான் செய்கிறேன்."
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)