தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி.அரசகுமார் மீது வழக்கு பதிவு: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

Jun 27, 2026 - 20:01
0
தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி.அரசகுமார் மீது வழக்கு பதிவு: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் (பதிவு செய்யப்படாத அமைப்பு) நிறுவனர் தலைவரான பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் மீது தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக கூறப்படும் புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக (A1) சென்னை சாலிகிராமம், மெஜஸ்டிக் காலனியில் வசிக்கும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவரான பி.டி.அரசகுமார் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இரண்டாவது குற்றவாளியாக (A2) சங்கத்தின் பொருளாளரான முத்துக்குமார் பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும், சிலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்
விஜய்

மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகங்களிடம், பள்ளி அங்கீகாரம் (Recognition), பள்ளி தர உயர்வு (Upgradation), CMDA மற்றும் DTCP அனுமதிகள் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை அரசியல் மற்றும் அதிகாரிகள் செல்வாக்கு மூலம் பெற்றுத் தருவதாக உறுதியளித்து, பணம் வசூலித்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸார், பி.டி.அரசகுமார், முத்துக்குமார் மற்றும் பிறர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட நிதி பரிவர்த்தனைகள், ஆவணங்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்களிடம் பெறப்பட்டதாக கூறப்படும் தொகைகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தனியார் பள்ளி துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணையின் முடிவில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பி.டி. அரசகுமார்

அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்காக பல்வேறு துறைகளில் இருந்து நிதி வசூலிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். அந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User