`6 அமைச்சர் பதவி; 10 வாரியப் பொறுப்பு; ஆசைகாட்டிய தவெக... அதிமுக-வுக்கு துரோகம்!' - இபிஎஸ் சாடல்

May 13, 2026 - 15:01
0
`6 அமைச்சர் பதவி; 10 வாரியப் பொறுப்பு; ஆசைகாட்டிய தவெக... அதிமுக-வுக்கு துரோகம்!' - இபிஎஸ் சாடல்

இன்று தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 234 சட்டமன்ற உறுப்பினர்களில், திமுக வெளிநடப்பு மற்றும் இதர காரணங்களால் 63 பேர் பங்கேற்கவில்லை. மீதமிருந்த 171 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர். இதில், 144 வாக்குகள் ஆதரவாகவும், 22 வாக்குகள் எதிராகவும், நடுநிலை வாக்குகள் 5 வாக்குகள் எனவும் பதிவாகியிருந்தது. இதில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பிளவுபட்டு சி.வி.சண்முகம், எஸ்.பி வேலுமணி ஆதரவு வேட்பாளர்கள் 25 பேர் ஆதரவாகவும், எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ-கள் 22 பேர் எதிராகவும் வாக்களித்திருக்கின்றனர்.

அதிமுக எடப்பாடி பழனிசாமி
அதிமுக எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், சட்டமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ``அதிமுக-வின் கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். நேற்று மாலையே தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என வாட்ஸ்அப், மெயில், மெசேஜ் என பல்வேறு வழிமுறைகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்தோம். ஆனால், கொறடாவுக்கு எதிராக, சட்டத்தை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்திருக்கின்றனர். அதிமுக-வின் தலைவர்களை முன்னிலைப்படுத்தி, இரட்டை இலைச் சின்னத்தில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிப்பெற்றவர்கள். அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயல்புதான்.

ஆனால், இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் கட்சி 6 அமைச்சர் பதவிகளையும், 10 வாரியப் பொறுப்புகளையும் கொடுக்கிறது என அதிமுக எம்.எல்.ஏ-களிடம் ஆசை வார்த்தைக் கூறி, சில முன்னாள் அமைச்சர்கள் பதவிக்காக அதிமுக-வுக்கு துரோகம் செய்திருக்கிறார்கள். தூய்மையான ஆட்சி நடத்துவேன் எனக் கூறிய முதல்வர் விஜய், கட்சியில் பிரச்னை இருக்கிறது எனத் தெரிந்து, ஒரு சாராரின் வீட்டுக்குச் சென்றுவருவது தூய்மையான அரசியலும் அல்ல, நல்ல வழிகாட்டுதலும் அல்ல. இது வருத்தமளிக்கிறது. கொறடாவின் உத்தரவை மீறி எம்.எல்.ஏ-கள் செயல்படுகிறார்கள் என்றால், அங்கு குதிரை பேரம் நடந்திருக்கிறது என்பதைத்தான் புரிந்துகொள்கிறோம். இத்தகைய தூய்மையான அரசை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக எடப்பாடி பழனிசாமி
அதிமுக எடப்பாடி பழனிசாமி

தவெக அரசு, இன்று தன் ஆட்சிக்கு ஆதரவளித்த அதிமுக உறுப்பினர்களால்தான் பதவியில் தொடர்கிறது. 34 சதவிகித வாக்குகள்தான் தவெக பெற்றிருக்கிறது. மீதமிருக்கும் 66 சதவிகித மக்கள் தவெக-வுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை தவெக புரிந்துகொள்ள வேண்டும். தவெக அரசுக்கு எதிராக திமுக-வுடன் நூற்றுக்கு நூறு சதவிகிதம் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இதை அவர்களும் திட்டவட்டமாக உறுதிப்படுத்திவிட்டார்கள். 25 வாக்காளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். மக்களும், கழகத் தொண்டர்களும் பதவிக்காக அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்களை மன்னிக்கமாட்டார்கள்." என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User