18 வருட உழைப்பு, ஜப்பானில் பிறந்த குழந்தைகள்... கலங்கும் இந்தியர்! - அரசின் புதிய விதிகளால் சிக்கல்!

May 17, 2026 - 14:01
0
18 வருட உழைப்பு, ஜப்பானில் பிறந்த குழந்தைகள்... கலங்கும் இந்தியர்! - அரசின் புதிய விதிகளால் சிக்கல்!

பிசினஸ் மேனேஜர்’ விசா

ஜப்பானில் கடந்த 18 ஆண்டுகளாக இந்திய உணவகம் ஒன்றை நடத்தி வந்த மனிஷ் குமார் என்பவரின் வாழ்க்கை, ஒரே ஒரு அரசு உத்தரவால் தலைகீழாக மாறியிருக்கிறது.

தனது ‘பிசினஸ் மேனேஜர்’ விசா புதுப்பிப்பு விண்ணப்பத்தை ஜப்பான் குடிவரவுத் துறை நிராகரித்ததால், தனது உழைப்பால் உருவாக்கிய உணவகத்தை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

டோக்கியோவில் நடந்த ஒரு போராட்டத்தின்போது, தனது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதாகக் கூறி அவர் கண்ணீருடன் கதறியது, ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டுத் தொழில்முனைவோர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சைதாமா மாகாணத்தில் இந்திய உணவகம் நடத்தி வரும் மனிஷ் குமார், போராட்டத்தின்போது தனது நிலையை உருக்கமாக விளக்கினார். "இரண்டு வாரங்களுக்கு முன்பு, குடிவரவு சேவை ஏஜென்சி (ISA) அதிகாரிகள் என்னை என் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லும்படி கூறினார்கள். என் குழந்தைகள் இருவரும் ஜப்பானில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களுக்கு ஜப்பானிய மொழி மட்டுமே தெரியும், அவர்களின் நண்பர்கள் அனைவரும் ஜப்பானியர்கள்தான். இப்படிப்பட்ட சூழலில் எங்களை இந்தியாவுக்குத் திரும்பிப் போகச் சொன்னால், நான் என்ன செய்வேன்?" என்று கண்ணீருடன் அவர் எழுப்பிய கேள்வி, அங்கிருந்தவர்களை உலுக்கியது.

மனிஷ் குமாரின் இந்த அவலநிலை, ஒரு தனிநபரின் சோகம் மட்டுமல்ல. கடந்த 2025-ஆம் ஆண்டு ஜப்பான் அரசு தனது ‘பிசினஸ் மேனேஜர்’ விசா அமைப்பில் கொண்டுவந்த அதிரடி மாற்றங்களுக்குப் பிறகு, அங்குள்ள சிறு தொழில் உரிமையாளர்களிடையே பெருகிவரும் பதற்றத்தின் சின்னமாகவே இது பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, அக்டோபர் 2025-ல் புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு, இந்த விசாவுக்கான விண்ணப்பங்கள் 96 சதவீதம் சரிந்துள்ளன. மாதந்தோறும் சுமார் 1,700 ஆக இருந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை, தற்போது வெறும் 70 ஆகக் குறைந்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் டைம்ஸ் பத்திரிகையின்படி, உண்மையான வணிகங்களை நடத்தாமல், நீண்டகால குடியுரிமை பெறுவதற்கான எளிதான வழியாக இந்த விசாவைப் பயன்படுத்துபவர்களைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த கடுமையான விதிகள் கொண்டுவரப்பட்டதாக ஜப்பான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், அரசின் இந்த நடவடிக்கையால் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை விட, பல ஆண்டுகளாக நேர்மையாகத் தொழில் செய்து வரும் சிறு வணிக உரிமையாளர்களே நசுக்கப்படுகிறார்கள் என்று விமர்சகர்கள் கடுமையாக வாதிடுகின்றனர்.

அப்படியென்ன மாற்றங்கள் செய்யப்பட்டன?

ஜப்பானின் புதிய விதிகளின்படி, வெளிநாட்டு தொழில்முனைவோருக்கான தகுதிகள் மிகக் கடுமையாக்கப்பட்டுள்ளன. முன்பு 5 மில்லியன் யென் (சுமார் 30 லட்சம் ரூபாய்) ஆக இருந்த குறைந்தபட்ச மூலதன முதலீட்டுத் தேவை, தற்போது ஆறு மடங்கு உயர்த்தப்பட்டு 30 மில்லியன் யென் (சுமார் 2 கோடி ரூபாய்) ஆக்கப்பட்டுள்ளது.

இது சிறு வணிகங்கள் தகுதி பெறுவதை மிகவும் கடினமாக்கியுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஒரு முழுநேர உள்ளூர் ஊழியரையாவது பணியமர்த்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்பு, மூலதனத் தேவை பூர்த்தி செய்யப்பட்டால் ஊழியர்களை நியமிப்பது கட்டாயமில்லை. இது தவிர, விண்ணப்பதாரர் அல்லது அவரது முழுநேர ஊழியர், ஜப்பானிய மொழித் திறனை (JLPT N2 நிலை) வெளிப்படுத்த வேண்டும் என்ற புதிய நிபந்தனையும் சேர்க்கப்பட்டுள்ளது.

வணிகத் திட்டங்கள் இப்போது தொழில்முறை சான்றிதழுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதோடு, வரி பதிவுகள் மற்றும் அலுவலகத்தின் நம்பகத்தன்மை மீதான சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வீட்டு முகவரியை அலுவலகமாகப் பயன்படுத்துவதும் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்று கூறப்படுகிறது.

அரசின் இந்த சீர்திருத்தங்கள் முறைகேடுகளைத் தடுக்க அவசியம் என்று ஜப்பான் அரசு கூறினாலும், இந்த நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக ஜப்பானை நம்பி தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பல வெளிநாட்டு தொழில்முனைவோரின் வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடும் என்ற அச்சம் வலுத்துள்ளது.

மனிஷ் குமாரின் கண்ணீர், ஜப்பானின் புதிய கொள்கைகள் குறித்த ஒரு முக்கியமான விவாதத்தை எழுப்பியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User