நர்மதா நதிக்கு 11,000 லிட்டர் பால் அபிஷேகம்; வைரலான வீடியோ... நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்வதென்ன?

Apr 9, 2026 - 21:31
 0
நர்மதா நதிக்கு 11,000 லிட்டர் பால் அபிஷேகம்; வைரலான வீடியோ... நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்வதென்ன?

நர்மதா நதியில் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் கொட்டப்படும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது ஒருபுறம் மத நம்பிக்கை குறித்த விவாதத்தையும், மறுபுறம் சுற்றுச்சூழல் மற்றும் சமூக அக்கறை குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக NDTV வெளியிட்டுள்ள செய்தியில், ``மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் உள்ள சத்வேவ் கிராமம் உள்ளது. இங்கு, 'ஸ்ரீ தாதாஜி தர்பார் பதலேஷ்வர் மகாதேவ்' கோயிலில் 'சைத்ர நவராத்திரி' முன்னிட்டு கடந்த மார்ச் 18 முதல் ஏப்ரல் 7 வரை 21 நாட்களுக்குப் பிரமாண்ட ஆன்மிக விழா நடைபெற்றது. இதில் 41 டன் நெய் பயன்படுத்தப்பட்ட மகாயாகம், சிவ மகாபுராணப் பாராயணங்கள் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன.

இந்த விழாவின் ஒரு பகுதியாக, நர்மதா நதிக்குச் சடங்கு காணிக்கையாக சுமார் 11,000 லிட்டர் பால் ஆற்றில் கொட்டப்பட்டது. இது குறித்து ஏற்பாட்டாளர் பவன் பவார் கூறுகையில், ``எங்கள் குரு ஸ்ரீ சிவானந்த மகாராஜின் பேரார்வமே நர்மதா தாயாருக்கு அபிஷேகம் செய்வதும் மக்களுக்கு உணவளிப்பதும்தான். தினமும் 151 லிட்டர் பால் பயன்படுத்தப்பட்டது. ஒரு குறிப்பிட்ட நாளில் 11,000 லிட்டர் பாலுடன் இந்தச் சடங்கு நடைபெற்றது. இது முழுக்க முழுக்க ஆன்மிக நம்பிக்கையின் வெளிப்பாடு." என்றார்.

இந்தக் காணொளி வைரலானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன. இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். ஆற்றில் அதிகப்படியான பாலைக் கொட்டுவது, நீரில் உள்ள உயிரிய ஆக்சிஜன் தேவையை (BOD) அதிகரித்து, ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கும். இது மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக முடியும் என எச்சரிக்கின்றனர்.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த ஏற்பாட்டாளர்கள், `இந்த நிகழ்ச்சி முழுவதற்கும் தனிப்பட்ட முறையில் நிதி திரட்டப்பட்டது. இது பல நூற்றாண்டுகள் பழமையான ஆன்மிகத் தபோபூமி. எனவே மத நடைமுறைகள் குறித்துக் கேள்வி எழுப்பக் கூடாது' எனத் தெரிவித்தனர்." எனச் செய்தி வெளியிட்டிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0