அதிமுக: "எடப்பாடி பழனிசாமிதான் இப்போதும் பொதுச்செயலாளர்; ஆனால்..." – கே.சி. வீரமணி சொல்வது என்ன?

May 16, 2026 - 12:31
0
அதிமுக: "எடப்பாடி பழனிசாமிதான் இப்போதும் பொதுச்செயலாளர்; ஆனால்..." – கே.சி. வீரமணி சொல்வது என்ன?

அ.தி.மு.க இரண்டாகப் பிளவுப்பட்டுள்ள நிலையில், அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ-வுமான கே.சி.வீரமணி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி அணியிலிருந்து வந்தார்.

இதனால், கே.சி.வீரமணியிடம் இருந்த திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்து அந்தப் பதவியில் டாக்டர் பசுபதியை நியமித்தார். அதைத் தொடர்ந்து கே.சி.வீரமணி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், வாணியம்பாடியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவைக் கூட்டி முறைப்படி விவாதித்து எடுக்க வேண்டிய முடிவுகளைத் தன்னிச்சையாகவும் அவசரப்பட்டுமே மேற்கொண்டுள்ளார்.

26 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரையும் அவர் எவ்வித விசாரணையும் இன்றி நீக்கியுள்ளார். இப்படி முக்கியப் புள்ளிகளை எல்லாம் நீக்கிவிட்டு அவர் யாரை வைத்து, எப்படி கட்சியை நடத்தப் போகிறார். நீக்கப்பட்டவர்கள் அனைவரும் தொண்டர்களுக்காக உழைத்தவர்கள்.

இந்த நீக்கம் சட்டரீதியாகச் செல்லாது என்று சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்துத் தெரிவித்துள்ளனர். எனவே, உடனடியாக பொதுக்குழுவைக் கூட்டி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்.

1996 தோல்வியின்போது தி.மு.க - அ.தி.மு.க என இருமுனைப் போட்டி மட்டுமே இருந்தது. ஆனால், இன்று தமிழகத்தில் தவெக அசூர வேகத்தில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை மக்கள் பலரும் அந்தப் பக்கம் சென்றுவிட்டனர். இந்தத் தேர்தலில் அ.தி.மு.க பின்தங்கி, 3-ம் இடத்திற்குத் தள்ளப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது.

விஜய் - வேலுமணி
விஜய் - வேலுமணி

தவெக 108 இடங்களில் வென்று பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அ.தி.மு.க-வின் எடப்பாடியாரோ அல்லது தி.மு.க-வோ முன்னரே எதிர்பார்க்கவில்லை. விஜய் சினிமாவில் உச்சத்தில் இருந்ததால் அரசியல் வேண்டாம் என்று முன்பு நான் கூறியிருக்கலாம். ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை முன்னிறுத்தி அவர் ஆட்சி நடத்துகிறார்கள். கடந்த 5 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்துவிட்டோம். எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாட்டைப் பின்பற்றினால் அடுத்த 5 ஆண்டுகளும் இந்த எம்.எல்.ஏ பதவியால் வாக்களித்த மக்களுக்கோ, தொண்டர்களுக்கோ எந்தப் பயனும் இல்லாமல் போய்விடும்.

எனவே, எங்களது மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு, தொண்டர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களைச் சந்திக்க ஏதுவாகவும், அதிமுக சார்பாகவே சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நாங்கள் ஆளுங்கட்சி அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.

ஆளுங்கட்சியின் ஆதரவு இருந்தால்தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். எடப்பாடி பழனிசாமிதான் இப்போதும் எங்களுடைய பொதுச்செயலாளர். அதில் மாற்றுக்கருத்து இல்லை. நாங்கள் கட்சியை விட்டுப் போகவில்லை, கட்சிக்குத் துரோகமும் செய்யவில்லை. தலைமை மீதான சில கருத்து வேறுபாடுகளால் மட்டுமே இந்த முடிவை எடுத்தோம்.

கே.சி.வீரமணி
கே.சி.வீரமணி

எங்களை நீக்கிய பின்னரும், எங்களுடன் இருந்த 40-க்கும் மேற்பட்டோரைத் தலைமைப் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டது. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு, தமிழகத்திலேயே அதிக ஆண்டுகள் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியவன் நான். அரக்கோணம் முதல் கந்திலி வரை என் கால் படாத இடமே இல்லை.

பொருளாதாரத்தையும் உழைப்பையும் கொட்டி கட்சியை வளர்த்துள்ளோம். தொண்டர்கள் மீண்டும் என்னை மாவட்டச் செயலாளராகப் பார்க்க விரும்புகிறார்கள். எங்களது இந்த மனக்குமுறலை பொதுக்குழுவில் முன்வைப்போம். பொதுக்குழு எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User