`ராஜினாமா செய்ய மாட்டேன்!'- அடம்பிடிக்கிறாரா கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ்? என்ன நடக்கிறது?
பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெடித்திருக்கும் விவகாரம், விஜய் தலைமையிலான அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல்ரீதியாகவும் நெருக்கடிகள் அதிகரித்துவருவதால் அருள் விக்னேஷை ராஜினாமா செய்யவைக்க திட்டமிடுகிறது த.வெ.க தலைமை. ஆனால், ``நான் ராஜினாமா செய்ய மாட்டேன்" என அருள் விக்னேஷ் அடம்பிடிப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசியவர்கள், ``பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சொல்லப்படும் விவகாரத்தில் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறது காவல்துறை. அருள் விக்னேஷ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ பதவியை இழக்கவும் நேரிடும். இதற்கிடையில் 'அருள் விக்னேஷை த.வெ.க தலைமை காப்பாற்றுகிறது' என எதிர்க்கட்சிகள் ஓங்கி அடிப்பதால், எம்.எல்.ஏ பதவியிலிருந்து அவரை ராஜினாமா செய்ய வைத்துவிடலாம் என முதல்வருக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள் மூத்த அமைச்சர்கள்.
முதல்வரும் அதற்கு இசைவு தெரிவிக்கவே... அருள் விக்னேஷை அணுகியது த.வெ.க தலைமை. ஆனால், 'நான் ராஜினாமா செய்ய மாட்டேன்... நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை' எனச் சொல்லி வருகிறாராம், அருள் விக்னேஷ். இந்நிலையில், அடம்பிடிக்கும் எம்.எல்.ஏ-விடம் நாசுக்காகப் பேசி ராஜினாமா செய்ய வைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்களாம் அமைச்சர்கள்" என்றனர்.

நம்மிடம் பேசிய த.வெ.க நிர்வாகிகளோ, "அருள் விக்னேஷ் கைதாகும் முன்பே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம். அருள் விக்னேஷ் அதற்கு ஒத்துழைப்பு தெரிவிக்கவில்லை என்றாலும் அவரை எப்படியாவது ராஜினாமா செய்ய வைத்துவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது கட்சித் தலைமை. அதன் பிறகு அவர் கைதாகவும் வாய்ப்பிருக்கிறது. இதற்கிடையில் உயர் நீதிமன்றம் என்ன முடிவெடுக்கிறது என்பதையும் கூர்ந்து கவனித்துவருகிறோம்" என்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)