'சபரிமலையில் திருப்பதி மாடல் வசதிகள்' - முதல்வர் வி.டி.சதீசனின் திட்டம் என்ன?

Oct 18, 2026 - 17:30
0
'சபரிமலையில் திருப்பதி மாடல் வசதிகள்' - முதல்வர் வி.டி.சதீசனின் திட்டம் என்ன?

சபரிமலையில் மண்டல - மகரவிளக்கு கால பூஜைகளுக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக கேரள முதல்வர் வி.டி.சதீசன் தலைமையில் பம்பை மற்றும் நிலக்கல்லில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தேவஸ்வம் அமைச்சர் கே.முரளீதரன், கலாச்சாரத்துறை அமைச்சர் பி.சி.விஷ்ணுநாத், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் கே.ஜெயக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டோ ஆண்டனி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நிலக்கல் தங்குமிடம், கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து நிலையம் மற்றும் போலீஸ் முகாம்களைப் பார்வையிட்ட ஆய்வுக் குழுவினர், பின்னர் பம்பை பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். ​அப்போது பம்பையில் உள்ள கழிப்பறை வளாகத்தைப் பார்வையிட்ட முதல்வர், அங்கு நிலவிய சுகாதாரமற்ற சூழலைக் கண்டு அதிருப்தி தெரிவித்து மூக்கை மூடிக்கொண்டார். பக்தர்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி அடிப்படை வசதிகள் சுத்தமாகவும் முறையாகவும் கிடைக்க வேண்டும் என அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார். ​ஐப்பசி மாத பூஜைகளுக்கே ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ள நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிய வாய்ப்புள்ளது. ஆனால், சாலைகள் சீரமைப்புப் பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிப்பது, நிலக்கல் மற்றும் பம்பையில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது ஆகியவை பெரும் சவாலாக உள்ளன. குறிப்பாக, சபரிமலை பிரசாதமான அரவணை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடைமுறைகள் தாமதமாகியுள்ளதும், முன்கூட்டியே போதிய அரவணை கையிருப்பு தயாரிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதமும் கூட்டத்தில் தீவிரமாகக் கவனிக்கப்பட்டது.

ஆய்வில் வி.டி.சதீசன்

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் முதல்வர் வி.டி.சதீசன் கூறுகையில், "சபரிமலையை நாட்டின் தலைசிறந்த புனித யாத்திரை தலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த மண்டல - மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்ததும், பக்தர்களுக்காக சபரிமலையில் 'திருப்பதி மாடல்' மாதிரித் திட்டத்தின் கீழ் உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகள் செய்து தரப்படும். பம்பையில் துணிகளைக் கைவிடுவதால் கழிவுப் பிரச்னைகள் ஏற்படாதவாறு முறையான கட்டுப்பாட்டு அமைப்புகள் உருவாக்கப்படும். பக்தர்கள் தங்கும் இடைத்தாவளங்களில் அனைத்து வசதிகளும் அதிகரிக்கப்படும். ​பம்பையில் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக, நிலக்கல்லில் ஒரே நேரத்தில் 6,000 பக்தர்களை ஒழுங்குபடுத்தும் வகையில் ஜெர்மன் தொழில்நுட்பத்திலான பிரம்மாண்ட நிழற்குடை அமைக்கப்படும்.

சபரிமலை சன்னிதானத்தில் முதல்வர் வி.டி.சதீசன்

22 அவசர மருத்துவப் பிரிவுகள் தயார்நிலையில் வைக்கப்படும். கழிவு மேலாண்மைப் பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முழுமையாகச் செயல்படுத்தப்படும். ​யாத்ரீகர்களின் வசதிக்காக கே.எஸ்.ஆர்.டி.சி சார்பில் 461 பேருந்துகள் இயக்கப்படும். சபரிமலையுடன் இதர முக்கிய கோவில்களை இணைக்கும் வகையில் வழித்தடங்கள் ஒருங்கிணைக்கப்படும். சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய மோட்டார் வாகனத் துறை தீவிர சோதனைகளை மேற்கொள்ளும். சாளக்கயம் சாலை பொதுப்பணித்துறை மூலம் ரூ.15 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருகிறது; இதன் பணிகள் மிக விரைவில் நிறைவடையும்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User