அஸ்ஸாம் நபரின் ஆவணம் மூலம் போலி வங்கிக் கணக்கு; ரூ.2.28 லட்சம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

Oct 18, 2026 - 08:00
0
அஸ்ஸாம் நபரின் ஆவணம் மூலம் போலி வங்கிக் கணக்கு; ரூ.2.28 லட்சம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், வைக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் டிப்பர், டாரஸ் லாரிகள், சட்டவிரோத மண் கடத்தல் கும்பல்கள் மற்றும் பல்வேறு வழக்குகளின் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இன்ஸ்பெக்டர் ஷமீர்கான் நேரடியாகவும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலமாகவும் பெருமளவில் லஞ்சம் வசூலிப்பதாக ரகசியப் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, கோட்டயம் விஜிலென்ஸ் எஸ்.பி பினு உத்தரவின் பேரில், டி.எஸ்.பி பிரதீப்குமார் தலைமையிலான சிறப்புக் குழுவினர் வைக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ​அதில், ஆய்வாளர் ஷமீர்கான் யு.பி.ஐ செயலி மூலம் லஞ்சப்பணம் வசூலித்த பகீர் தகவல் வெளியானது. லஞ்சப் பணத்தைப் பெறுவதற்காக, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜோகட் கொகோய் என்பவரின் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி, கடந்த மாதம் 5-ம் தேதி வைக்கம் கனரா வங்கிக் கிளையில் ரகசிய வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்கியுள்ளார். பின்னர், கண்காணிப்பு வளையத்தில் சிக்காமல் இருப்பதற்காக, வைக்கம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணின் மொபைல் போன் எண்ணை அந்த வங்கிக் கணக்குடன் இணைத்து யு.பி.ஐ வசதியை உருவாக்கியுள்ளார். ​வங்கிக் கணக்கு தொடங்கப்பட்ட இரண்டு நாட்களில், அதாவது கடந்த மாதம் 7-ம் தேதி முதலே லஞ்சப் பணம் மளமளவெனக் குவியத் தொடங்கியது.

UPI - யு.பி.ஐ

ஒரே மாதத்தில் அந்த வங்கிக்கணக்கில் சுமார் 2 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வந்து சேர்ந்துள்ளது. அந்தப் பணத்தை ஏ.டி.எம் மூலம் எடுத்துள்ளார் இன்ஸ்பெக்டர் ஷமீர்கான். கண்காணிப்பு கேமராக்களில் முகம் பதிவாகிவிடக் கூடாது என்பதற்காக முகக்கவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்தபடி வைக்கம், குறவிலங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள ஏ.டி.எம் மையங்களுக்குச் சென்று அவரே நேரடியாகப் பணத்தை எடுத்துள்ளார். அவர் பணம் எடுக்கும் சி.சி.டி.வி காட்சிகளை ஆதாரத்துக்காக விஜிலென்ஸ் அதிகாரிகள் திரட்டியுள்ளனர். மேலும், அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட ​சோதனையில் ஷமீர்கானிடமிருந்து லஞ்சப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்பட்ட செல்போன், சிம் கார்டு மற்றும் கனரா வங்கி ஏ.டி.எம் கார்டு ஆகியவை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

லஞ்சம் வாங்கி சிக்கிய இன்ஸ்பெக்டர் ஷமீர்கான்

போலிக் கணக்கு தொடங்கப்பட்ட கனரா வங்கிக் கிளையிலும் அதிகாரிகள் நேரில் சென்று விரிவான ஆவணச் சோதனைகளை நடத்தி வருகின்றனர். லஞ்சப் பரிவர்த்தனைக்குத் தனது செல்போன் எண்ணை இன்ஸ்பெக்டருக்கு வழங்கிய பெண்ணிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெளிமாநிலத் தொழிலாளியின் ஆவணங்களை முறைகேடாகப் பயன்படுத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிய சம்பவம் கேரளக் காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User