ஈரோடு: துணிக்கடை விளம்பர ரீல்ஸ் சர்ச்சையில் TVK எம்எல்ஏ; கொந்தளிக்கும்அரசியல் கட்சிகள்

Nov 05, 2026 - 08:31
0
ஈரோடு: துணிக்கடை விளம்பர ரீல்ஸ் சர்ச்சையில் TVK எம்எல்ஏ; கொந்தளிக்கும்அரசியல் கட்சிகள்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ-வாக, த‌.வெ.க-வைச் சேர்ந்த தமிழ்செல்வி பதவி வகித்து வருகிறார். ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொள்வதில் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வீட்டில் இருந்து கொண்டு வரும் மதிய உணவைச் சாப்பிடுவது வரை ரீல்ஸாகத் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

இவரின் பதிவுகள் அரசியல் களத்தில் கவனம் பெற்று வருகின்றன. இந்த நிலையில், தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம் நகரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடைக்கு ஆதரவாக புடவை விளம்பர வீடியோவில் பேசியிருக்கிறார்.

புடவை விளம்பரத்தில் எம்எல்ஏ
புடவை விளம்பரத்தில் எம்எல்ஏ

சம்மந்தப்பட்ட துணிக்கடை நிறுவனம் அந்த வீடியோவை விளம்பர ரீல்ஸாக வெளியிடப்பட்டுள்ளது. தொகுதி மக்கள் அனைவருக்கும் பொதுவான மக்கள் பிரதிநிதியாகப் பார்க்கப்படும் அந்தத் தொகுதி எம்.எல்.ஏ, குறிப்பிட்ட ஒரு துணிக்கடையின் புடவை விளம்பரத்தில் பங்கெடுத்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. இந்தச் செயலுக்கு மற்ற அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்புகளைப் பதிவுசெய்து வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சிலர், "சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பொறுப்புமிக்க பதவி. அதை வணிக ரீதியான லாபங்களுக்காகப் பயன்படுத்துவது அந்தப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் செயல்.

எம்.எல்.ஏ மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பயன்படுத்தி, ஒரு தனியார் நிறுவனத்தின் துணியையோ அல்லது பொருளையோ விளம்பரப்படுத்துவது, மக்களைத் தவறாக வழிநடத்துவது போலாகும். தீபாவளி போன்ற பெரிய பண்டிகைக் காலங்களில் குறிப்பிட்ட ஒரு துணிக்கடையை ஆதரித்து ஒரு மக்கள் பிரதிநிதியாக விளம்பரப்படுத்துவது தார்மீக ரீதியாக தவறான முன்னுதாரணம்.

பண்டிகைக் காலங்களில் வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் இருக்கும் அடித்தட்டுப் பெண்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளின் இதுபோன்ற வணிக ரீதியான ஆடம்பரப் பதிவுகள் பெரும்பாலும் மனக்கசப்பையும், ஏமாற்றத்தையுமே அதிகமாகத் தரும்" என்றனர்.

புடவை விளம்பரத்தில் எம்எல்ஏ
புடவை விளம்பரத்தில் எம்எல்ஏ

இது குறித்து தெரிவித்த எம்.எல்.ஏ தமிழ் செல்வி தரப்பு, "வழக்கமாக அந்தக் கடையில்தான் ஜவுளி எடுப்பார். குடும்ப நண்பர் என்ற காரணத்தினால் காலர் மைக் அணிந்து விளம்பர வீடியோவில் பேசிக்கொடுத்தார். மற்றபடி வேறு எதுவுமில்லை " என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User