அக்.31: சிம்மத்தில் குரு-கேது : எந்த ராசிக்கு யோகம், எந்த ராசிக்கு கவனம்? 12 ராசிகளுக்கான பலன்கள்!

Oct 30, 2026 - 19:00
0
அக்.31: சிம்மத்தில் குரு-கேது : எந்த ராசிக்கு  யோகம், எந்த ராசிக்கு கவனம்? 12 ராசிகளுக்கான பலன்கள்!

கிரஹங்களில், குருவை ‘பிரகஸ்பதி’ என்பர். அது, வேதம் அளித்த திருநாமம். ஸத்வ குணம் பொருந்தியவர் குரு. தன் இரண்டு பக்கங்களிலும் உள்ள செவ்வாயையும் சனியையும் கட்டுப்படுத்தி, இருவரையும் ஸத்வ குணத்துடன் இணைத்து உலக இயக்கத்தின் பயனை உணர வைப்பவர் என்கிறது ஜோதிடம்.

குரு பகவான்

பூரண சுப கிரகமான குருபகவானின் திருவருள் இருந்தால் சகல விதமான மங்கல விஷயங்களும் தங்குதடையில்லாமல் கைகூடும். மட்டுமன்றி அதிர்ஷ்டம், புண்ணியம், பெருமை, புகழ் என அனைத்தும் குருவருளால் வாய்க்கும் என்பார்கள் பெரியோர்கள். ஞானமும் மோட்சமும்கூட அவரால் கிடைக்கும் வரங்கள்தான்.

இத்தகு மகிமை பொருந்திய குருபகவான், சூரியன் வீட்டுக்கு அதாவது சிம்ம ராசிக்கு விஜயம் செய்யும்போது, ஆன்மாவும் அறிவும் சந்திக்கின்றன என்பார்கள். இப்போது சிம்மத்தில் அவர் கேதுவுடன் இணைந்து அமர்ந்துள்ளார்.

‘காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா என்று உயிரும், உடலும், வாழ்வும் நீர்க்குமிழி போன்று நிலையற்றது’ என்பதைச் சில நிகழ்வுகளால், நிமிடத்தில் உணர வைப்பவர் கேது பகவான். பூர்வ ஜன்மம், நிகழ் ஜன்மம், ஏழேழு ஜன்மம் என எல்லா ஜன்மங்களிலும் செய்த பாவங்களுக்கும் பரிகாரம் தேடித் தருபவர் இவரே! மந்திரங்களை ஜபிப்பதுடன், அவற்றின் பிரம்ம ரகசியம் அறிந்து அன்றாட வாழ்வில் அதைப் பின்பற்ற வைப்பவரும் இவர்தான்.

இப்படிப்பட்ட கேது, அக்டோபர் 31 முதல் (திருக்கணிதப்படி) குருவுடன் சேர்ந்து சிம்மத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். இதனால் 12 ராசிகளுக்கும் என்னென்ன பலன்கள் உண்டாகும்... விளக்குகிறார் ஜோதிட முருகப்பிரியன்!

கேது பகவான்

சிம்மத்தில் குருவும் கேதுவும் - 12 ராசிகளுக்கான பலன்கள்!

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு – கேது சேர்க்கை ஏற்படுவதால், புதிய சிந்தனைகளும் வித்தியாசமான அணுகுமுறைகளும் உருவாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில், உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். முதலீடு மற்றும் யூக வணிகத்தில் அவசர முடிவுகளைத் தவிர்த்து நிதானமாகச் செயல்படுவது நல்லது. குலதெய்வ வழிபாடு மற்றும் ஆன்மிகச் சிந்தனைகள் மனதிற்கு நிம்மதியைத் தரும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக ஸ்தானத்தில் குரு – கேது சேர்க்கை ஏற்படுவதால், வீடு, நிலம் மற்றும் சொத்து தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், விட்டுக்கொடுத்துப் பேசுவதன் மூலம் அவற்றைச் சரிசெய்ய முடியும். வேலை மற்றும் தொழிலில் புதிய பொறுப்புகள் தேடி வரலாம். வீடு அல்லது வாகனம் வாங்கும் முயற்சியில் இருப்பவர்கள், ஆவணங்களை முழுமையாகச் சரிபார்த்த பிறகு முடிவெடுப்பது அவசியம். தாயாரின் உடல்நலம் மேம்படும்; மன அமைதி நிலவும். வீட்டில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்; சிறு பிரச்னைகளைப் பெரிதுபடுத்தவேண்டாம்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு தைரிய ஸ்தானத்தில் குரு – கேது சேர்க்கை ஏற்படுவதால், தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதிகரிக்கும். நீண்ட நாள்களாகத் தள்ளிப்போன முயற்சிகளில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சகோதர, சகோதரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து உறவு மேம்படலாம். தகவல் தொடர்பு, எழுத்து மற்றும் விற்பனை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். அதேநேரத்தில், பயணங்களில் கவனமாக இருப்பதுடன், அவசரப்பட்டு எந்தவொரு முக்கிய முடிவையும் எடுக்காமல் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு தனம் மற்றும் குடும்ப ஸ்தானத்தில் குரு – கேது சேர்க்கை ஏற்படுவதால், பணம் தொடர் பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வருமானத்தைச் சேமிப்பாக மாற்றுவதற்கான முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் பேசும்போது வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பது அல்லது கடன் வாங்குவது போன்ற விஷயங்களில் நன்கு யோசித்துச் செயல்படுங்கள். உணவுப் பழக்கங்களில் ஒழுங்கைக் கடைப்பிடித்து, உடல்நலத்திலும் கவனம் செலுத்துவது நல்லது.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு ராசியிலேயே குரு – கேது சேர்க்கை ஏற்படுவதால், சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் புதிய மாற்றங்கள் உருவாகலாம். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்களின் தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பாகச் சரியான திட்டமிடலுடன் முடிவெடுப்பது நல்லது. ஆன்மிக விஷயங்களில் நாட்டம் கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவ தோடு, பொறுமையையும் கடைப்பிடித்தால் முன்னேற்றத்திற்கான வழிகள் பிறக்கும். அதேபோல், குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டுப் பேசுவது உறவில் நெருக்கத்தை அதிகரிக்கும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு விரய ஸ்தானத்தில் குரு – கேது சேர்க்கை ஏற்படுவதால், செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழல் உருவாகலாம். வெளிநாடு தொடர்பான முயற்சிகள் மற்றும் தொலைதூரப் பயணங்களில் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். முக்கியமான விஷயங்களில், சிந்தித்துச் செயல்படவும் முடிவெடுக்கவும் விரும்புவீர்கள். தூக்கம், ஓய்வு மற்றும் அன்றாடச் செலவுகளில் ஒழுங்கைப் பின்பற்றுவது அவசியம். தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, மன அமைதிக்காகத் தியானம் மற்றும் இறை வழிபாட்டில் ஈடுபடுவது நல்ல பலனைத் தரும்.

குரு-கேது செர்க்கை பலன்கள்

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் குரு – கேது சேர்க்கை ஏற்படுவதால், புதிய தொடர்புகள் உருவாகவும் அதன் மூலம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கவும் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் கைகூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் இப்போது கிடைக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஆலோசனைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், நன்கு ஆராய்ந்து செயல்படுவது நல்லது. எந்தவொரு விஷயத்திலும் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டு நடைமுறைக்கு ஏற்ற வகையில் செயல்பட்டால் மன நிம்மதியும் அதிகரிக்கும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில் ஸ்தானத்தில் குரு – கேது சேர்க்கை ஏற்படுவதால், பணியிடத்தில் புதிய மாற்றங் களைச் சந்திக்க நேரிடலாம். உங்களின் திறமைக்கும் உழைப்புக்கும் அங்கீகாரம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் மாற்றம் அல்லது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான முடிவுகளை அவசரப்படாமல் நிதானமாக எடுப்பது அவசியம். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் இணக்கமாகச் செயல்படுவது பணியில் சாதகமான சூழலை உருவாக்கும். தொழில் வளர்ச்சியை நோக்கி மேற்கொள்ளும் முயற்சிகளில் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் முன்னேற்றத்தைப் பெற முடியும். மற்றபடி குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும்; சுபகாரியங்களில் தடைகள் விலகும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு – கேது சேர்க்கை ஏற்படுவதால், ஆன்மிக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட தூரப் பயணங்கள் மற்றும் வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகலாம். உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் கூடும். தந்தை, குரு மற்றும் அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகளின் ஆலோசனைகளைப் பரிசீலித்து முடிவெடுப்பது நல்லது. அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பியிருக்காமல், கடின உழைப்பையும் முறையான திட்டமிடலையும் தொடர்ந்து கடைப்பிடித்தால் எதிர்பார்த்த இலக்குகளை நோக்கி முன்னேறலாம்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு அஷ்டம ஸ்தானத்தில் குரு – கேது சேர்க்கை ஏற்படுவதால், எதிர்பாராத மாற்றங்களைச் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகலாம். கூட்டுப் பணம், கடன் மற்றும் வரி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் இருந்த சில பிரச்னைகளுக்கு முடிவு காண்பதற்கான வாய்ப்புகளும் ஏற்படலாம். முக்கிய ஆவணங்கள் மற்றும் நிதி ஒப்பந்தங்களில் அவசரப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் அலட்சியம் காட்டாமல், மன அழுத்தத்தைக் குறைக்கும் பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் மனதையும் உடலையும் சீராக வைத்துக்கொள்ளலாம். உணவுப் பழக்கங்களிலும் கவனம் தேவை.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு களத்திர ஸ்தானத்தில் குரு – கேது சேர்க்கை ஏற்படுவதால், உறவுகளில் பரஸ்பர புரிதலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கும். திருமண முயற்சிகளில் இருப்பவர்கள் அவசரப்படாமல் பொருத்தமான முடிவுகளை எடுப்பது நல்லது. தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். இருப்பினும், எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவதற்கு முன்பாக அதன் விவரங்களை முழுமையாகச் சரிபார்ப்பது அவசியம். வாழ்க்கைத் துணையின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, விட்டுக்கொடுத்துச் செயல்பட்டால், குடும்ப உறவுகளிலும் தொழிலிலும் சாதகமான முன்னேற்றத்தைப் பெறலாம்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் குரு – கேது சேர்க்கை ஏற்படுவதால், நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும், முறையாகத் திட்டமிட்டு செயல்பட்டால் அவற்றைச் சமாளிக்க முடியும். போட்டிகள் மற்றும் அலுவலகத்தில் ஏற்படும் சவால்களைப் பொறுமையுடன் எதிர்கொள்வது நல்லது. கடன் மற்றும் செலவுகளைச் சீரமைத்து நிதி ஒழுங்கைப் பேணுவதில் கவனம் செலுத்துங்கள். உடல்நலத்தைப் புறக்கணிக்காமல், போதிய ஓய்வு, சத்தான உணவு மற்றும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுவது அவசியம். குலதெய்வ வழிபாட்டைத் தவறவிடாதீர்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User