`முதலீடு... வர்த்தகம்?!' பங்குச் சந்தையில் பணம் குவிக்க... இந்த 5 பாலபாடங்கள் முக்கியம் மக்களே.!

Sep 30, 2026 - 11:00
0
`முதலீடு... வர்த்தகம்?!' பங்குச் சந்தையில் பணம் குவிக்க... இந்த 5 பாலபாடங்கள் முக்கியம் மக்களே.!

‘எதிர்காலத்துக்குப் பணம் சேர்க்க எதில் முதலீடு செய்யலாம்?’ என்ற கேள்வியை எழுப்பினார் சிறிய அளவில் பிசினஸ் செய்து வரும் சென்னையைச் சேர்ந்த ஒருவர்.

உங்கள் ஓய்வுக்காலத்துக்கு இன்னும் 10 வருடங்களுக்கு மேல் இருக்கிறது. நீண்டகாலத்தில் பணவீக்கத்தைத் தாண்டி பணம் சேர்க்க பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள்தான் ஏற்றது என நிதி ஆலோசகர்கள் பலரும் சொல்கிறார்கள் என்றோம்.

பங்குச் சந்தை என்றதுமே பதற்றம் அடைந்த அவர், அதில்தான் நான் 75 லட்சம் ரூபாய் வரை இழந்துவிட்டேன் என்று சொல்லி அதிர்ச்சியூட்டினார். அவரிடம் விளக்கமாகக் கேட்டபோதுதான் தெரிந்தது, பல நண்பர்களின் பேச்சைக் கேட்டு பங்கு வர்த்தகத்திலும், எஃப் அண்ட் ஓ வர்த்தகத்திலும் பல வருடங்களாக ஈடுபட்டிருந்திருக்கிறார் என்பது.

சிறு முதலீட்டாளர்கள் எஃப் அண்ட் ஓ வர்த்தகத்தில் அதன் ரிஸ்க்கைப் புரிந்துகொள்ளாமல் ஈடுபட்டு நஷ்டப்படுகிறார்கள் என்பதற்காக பலவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது செபி. ஆனாலும், இப்படி பலரும் பெரும் இழப்புகளைச் சந்திக்கிறார்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, வர்த்தகம் செய்வது போன்றவற்றில் உள்ள ரிஸ்க் வேறுபாடுகளை சரியாகப் புரிந்துகொள்ளாமல், பங்குச் சந்தை பற்றிய நுட்பங்களைக் கற்றுக்கொள்ளாமல், பிறரின் பேச்சைக் கேட்டு இறங்கி கையைச் சுட்டுக்கொள்கிறார்கள்.

சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை முதலீட்டில் அடியெடுத்து வைக்கும் முன், முதலீட்டு ஆலோசகர்கள், சந்தை நிபுணர்கள் பலரும் அறிவுறுத்தும் அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள் என்னென்ன எனப் பார்ப்போம்.

1. முதலீடு வேறு... வர்த்தகம் வேறு!

பங்குச் சந்தை முதலீடு என்றாலே பங்குகளை தினம்தினம் வாங்கி விற்றுப் பணம் சம்பாதிப்பதுதான் என்று பலரும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். முதலீடு செய்வதற்கும், வர்த்தகம் செய்வதற்கும் உள்ள வேறுபட்டை அறியாமல் களத்தில் இறங்கி பணத்தை இழந்து நிற்கிறார்கள். மேலே பார்த்த சென்னை பிசினஸ்மேன் செய்த தவறும் அதுதான்.

ஒரு நல்ல நிறுவனத்தின் பங்குகளை அதன் தொழில், வருமானம், லாபம், கடன் உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை அலசி ஆராய்ந்து, நீண்டகால நோக்கத்தில் வாங்கி வைத்திருப்பது முதலீடு. ஆனால், பங்கின் விலை ஏறும், இறங்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு குறுகிய கால நோக்கில் வாங்கி விற்பது வர்த்தகம்.

செபியின் கடந்த சில ஆண்டுகளில் செய்யப்பட்ட ஆய்வில் எஃப் அண்ட் ஓ வர்த்தகத்தில் ஈட்டுபடுபவர்களில் சுமார் 93% பேர் நஷ்டத்தையே சந்தித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நீண்டகால இலக்குகளுக்குப் பணம் சேர்க்க வேண்டும் என்பதற்காக பங்குச் சந்தைக்கு வருபவர்கள், முதலில் வர்த்தகத்துக்கும் முதலீட்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

2. ரிஸ்க் அளவு, முதலீட்டு நோக்கம், காலம் முக்கியம்!

‘எவ்வளவு ரிட்டர்ன் கிடைக்கும்’ என்று கேட்பதற்கு முன், ‘எவ்வளவு நஷ்டத்தைத் தாங்க முடியும்’ என்று கேட்க வேண்டியது மிக அவசியம். அடுத்து, எப்போது பணம் தேவை என்ற கால அளவு முக்கியம். பங்குச் சந்தையில் ஒரு நல்ல நிறுவனத்தின் பங்காக இருந்தாலும், சந்தை சரிவின்போது அதன் விலை கணிசமாகக் குறைய வாய்ப்பு இருக்கிறது. பங்குச் சந்தை முதலீட்டில் எல்லா காலகட்டத்திலும் வருமானத்துக்கு உத்தரவாதம் உண்டு என்ற மனநிலை தவறு.

ஓய்வுக்காலத்துக்கு இன்னும் 15 ஆண்டுகள் இருக்கும் ஒருவர் சந்தை சரிவைத் தாங்கிக்கொண்டு நீண்டகாலம் முதலீடு செய்யக்கூடிய நிலையில் இருக்கலாம். ஆனால், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் தேவைப்படும் பணத்தை முழுவதுமாக பங்குகளில் முதலீடு செய்துவிட்டு, பணம் தேவைப்படும் நேரத்தில் சந்தை சரிந்தால், பண இழப்பு வரலாம். முதலீட்டின் கால அளவு, நிதி இலக்கு, நஷ்டத்தைத் தாங்கும் திறன் ஆகியவற்றைப் பார்த்துத்தான் முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும்.

புதுச்சேரியைச் சேர்ந்த ராம்குமார், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மகளுக்கு திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தார். அதற்கான பணத்தை பங்கு சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தார். எதிர்பாராத உலகச் சூழ்நிலையில் சந்தை சரிய, பெரும் இழப்பு ஏற்பட்டது. திருமணத்துக்கான தொகை போதாமல் கடன் வாங்கி சமாளித்தார். முதலீட்டு நோக்கம், கால அளவு போன்றவற்றை அவர் கவனத்தில் கொள்ளாமல் இருந்ததே சிக்கலுக்குக் காரணம்.

3. எல்லாப் பணத்தையும் ஒன்றிலேயே முதலீடு செய்வது ஆபத்து!

‘இந்தப் பங்கு அடுத்த நான்கு மாதங்களில் பட்டையைக் கிளப்பும்’ என்று யாராவது சொன்னதைக் கேட்டு, கையில் இருக்கும் மொத்தப் பணத்தையும் அந்த ஒரே பங்கில் முதலீடு செய்வது மிகப்பெரிய தவறு. ஒரு நிறுவனத்தின் தொழிலில் எதிர்பாராத பிரச்னை ஏற்பட்டு, அதன் லாபம் குறையலாம். அந்தத் துறையே பின்னடைவைச் சந்தித்து, அந்த நிறுவனத்தின் பங்கு விலை கடுமையாகச் சரியலாம்.

இதனால்தான் முதலீட்டில் டைவசிஃபிகேஷன் அவசியம் என்கிறார்கள் முதலீட்டு நிபுணர்கள். பங்கு சார்ந்த முதலீடுகளுடன் சேர்த்து, முதலீட்டாளரின் இலக்கு மற்றும் ரிஸ்க் தன்மைக்கு ஏற்ப கடன் சார்ந்த முதலீடுகள், தங்கம் உள்ளிட்ட பல்வேறு சொத்து வகைகளிலும் முதலீட்டைப் பரவலாக்குவது ரிஸ்க்கைக் குறைக்க உதவும். பங்குச் சந்தையில் மட்டுமே முதலீடு செய்தாலும், பல நிறுவனங்கள் மற்றும் பல துறைகளில் பரவலாக முதலீடு செய்வது முக்கியம்.

4. பிறர் சொல்வதை அப்படியே நம்புவது நஷ்டத்துக்கு வித்திடலாம்!

‘ப்ரோ... இந்தப் பங்கு மல்டிபேக்கர் ஆகும்ப்பா’, ‘இந்த ஆப்ஷனில் போட்டால் ஒரே மாதத்தில் பணம் இரட்டிப்பாகும் நண்பா’ என்றெல்லாம் உங்கள் நண்பர்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் பலரும் சொல்லலாம். சமூக வலைதளங்கள், யூடியூப் வீடியோக்களில் நிபுணர்கள் போலவே பலரும் ஆசையைச் தூண்டலாம். அத்தகைய ஆராய்ச்சி அற்ற பேச்சுகளையும், ஆதாரம் அற்ற தகவல்களையும் நம்பி முதலீடு செய்வது ஆபத்தானது.

ஒருவர் பங்குச் சந்தையில் சம்பாதித்துவிட்டார் என்பதற்காக அவருடைய அடுத்த ஆலோசனையும் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அதேபோல, கடந்த காலத்தில் ஒரு பங்கு அதிக லாபம் கொடுத்திருக்கிறது என்பதற்காக எதிர்காலத்திலும் அதே லாபம் கிடைக்கும் என்ற எந்த உத்தரவாதமும் கிடையாது. இதைப் புரிந்துகொள்ளாத நிலையால்தான் சென்னை பிசினஸ்மேன் 75 லட்சம் ரூபாய் இழ்ந்துவிட்டேன் எனப் புலம்புகிறார் என்பதை நாம் உணர வேண்டியது அவசியம்.

5. முதலில் அறிவு, பிறகு முதலீடு!

பங்குச் சந்தையில் முதலீடு செய்துதான் வாரன் பஃபெட் உலகப் பணக்காரர் ஆனாராமே... என் நண்பர்கூட சந்தையில் முதலீடு செய்துதான் கார், பங்களா என வசதியாக வாழ்கிறார்... இப்படி பொத்தாம்பொதுவாக படித்துவிட்டு, பார்த்துவிட்டு ஆசைப்பட்டுக் களத்தில் குதிப்பது ஆபத்து. முதலில் பங்குச் சந்தையின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பங்குச் சந்தை எப்படிச் செயல்படுகிறது, மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன, இண்டெக்ஸ் ஃபண்ட் எப்படி செயல்படுகிறது, எஸ்.ஐ.பி என்றால் என்ன, டிவிடெண்ட் என்றால் என்ன, சந்தை ஏன் ஏறி இறங்குகிறது, ரிஸ்க் என்றால் என்ன என்பது போன்ற அடிப்படைகளை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அடிப்படை முதலீட்டு அறிவைப் பெறாமல், சரியான வழிகாட்டல் இல்லாமல் முதலீட்டில் இறங்குவது நஷ்டத்தை நோக்கித் தள்ளிவிடலாம். முதலில் அறிவு, பிறகு முதலீடு... இதுதான் அடிப்படை பாலபாடம்.!

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User