"பாட்டுல ஒரு இடம் மட்டும் ஏன் ஹிட் ஆகணும்?" - 'பத்தா', 'ராமாயணா' குறித்து கார்த்தி நேத்தா பேட்டி

Sep 30, 2026 - 08:30
0
"பாட்டுல ஒரு இடம் மட்டும் ஏன் ஹிட் ஆகணும்?" - 'பத்தா', 'ராமாயணா' குறித்து கார்த்தி நேத்தா பேட்டி

தன் வரிகளில், நம் உணர்வுகளோடு உரையாடுபவர் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா. சமீபத்தில் வெளியான 'பத்தா' படத்தின் 'மகளே' பாடலின் வரிகளும் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

அத்தோடு, ஏ.ஆர். ரஹ்மான், ஹான்ஸ் ஜிம்மர் இசையில் உருவாகி வரும் 'ராமாயணா' படத்தின் தமிழ் பதிப்பிற்கும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். 'பத்தா', 'ராமாயணா', சமகாலச் சூழலினால் அவருக்குப் பாடல் எழுதுவதில் உண்டாகும் அழுத்தம் எனப் பல கேள்விகளோடு அவரிடம் பேட்டி கண்டோம்.

பத்தா படத்தில்...
பத்தா படத்தில்...

நம்மிடையே பேசியவர், "'பத்தா' படத்துல நான் மூணு பாடல்களை எழுதியிருக்கிறேன். நான் எழுதின மூணு பாடல்களுமே மகள்களைப் பற்றிப் பேசுற உறவுப் பாட்டுதான். 'கண்ணகி', 'ஜோதி' படங்களில் இருந்து பெண் குழந்தைகளைப் பத்தியே தொடர்ந்து எழுதிட்டு இருக்கேன்.

எனக்கு ஆண் குழந்தை இருந்தாலும், குழந்தைகள் விஷயத்துல ஆண்-பெண் என்கிற பாகுபாடெல்லாம் இல்லைங்கிறதுதான் என் எண்ணம். அதனாலதான் 'மகளே' பாட்டை எழுதும்போது கூட என் மகனை மனசுல நினைச்சுதான் எழுதினேன்.

மகள், மகன் என்ற எல்லைகளைத் தாண்டிய ஒரு பொதுவான உணர்வு அது. எனக்கு எப்படியான பாடல் எழுதக் கொடுக்கப்பட்டாலும், அந்தச் சூழலுக்குள் ஒரு எளிய மனிதனா என்னால் அந்தச் சூழலுக்குள்ள பொருந்த முடியுதானு முதல்ல யோசிப்பேன்.

அந்த வகையில இந்த 'மகளே' பாட்டு ஒட்டுமொத்த தகப்பன்களுக்குமே பொருந்தக்கூடிய ஒன்றுதான். அந்த இடத்துல மகளுக்குப் பதிலா எந்த உறவை வேணாலும் நீங்க பொருத்திப் பார்த்துக்கலாம். இந்தப் படமும் மனிதனின் மனமாற்றத்தைதான் பேசுது.

இந்தப் படத்துல 'பத்தா'ங்கிற கதாபாத்திரமும் ஒரு கட்டத்துல, 'நாம் வேற மாதிரி வாழ்ந்திருக்கலாமோ'னு உள்ளுக்குள்ள உணர்கிறார். இது ஒரு கட்டத்தைக் கடந்து நின்று திரும்பிப் பார்க்கும் எந்தவொரு மனிதனுக்கும் பொருந்தும். 'இதை நாம அன்றைக்கே செஞ்சிருக்கலாம்'னு தோணும் இல்லையா? அப்படி ஒரு சிறு குன்றின் மேல நின்னு தன்னுடைய கடந்த காலத்தைப் பார்க்கிற ஒருவரின் கதைதான் 'பத்தா'.

தான் இழந்தவைகளை நினைத்து அடையும் குற்ற உணர்ச்சியும், அதிலிருந்து அவனுக்குக் கிடைக்கும் புதிய பாதையும்தான் 'மகளே' பாடல். தான் இழந்த எல்லாவற்றையும் விடத் தன் குழந்தையைக் கவனிக்காமல் விட்டுட்டோமோ என்ற குற்ற உணர்ச்சிதான் அவனுக்குப் பெரிதாகத் தெரியுது.

கவிஞர் கார்த்திக் நேத்தா
கவிஞர் கார்த்திக் நேத்தா

அதனால, தன் மகளிடம் கேட்கும் ஒரு மன்னிப்புப் பாடலா இதை நாம எடுத்துக்கலாம். ‘மொழியே’ பாடலும் அப்படித்தான் உருவாச்சு. இயக்குநர் பாலாஜி அண்ணாவைப் பொறுத்தவரை, ஒரு முழு கதையையும் குறுகிய நேரத்துக்குள்ள அழகா சொல்லிடுவாரு.

நான் அவர் சொல்கிற சூழலை மட்டும் பாடலாக்காமல், ஒட்டுமொத்தத் திரைக்கதையின் சாரமும் அந்தப் பாட்டுக்குள்ள வரணும்னு நினைப்பேன். படம் எதை நோக்கிப் போகுதோ அந்த மையக் கருத்தையும் பாடலுக்குள் கொண்டுவந்துடுவேன்.

இது கவிஞர் கண்ணதாசனைப் பின்பற்றும் பாணி. எடுத்துக்காட்டுக்கு, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்துல வர்ற ‘சொன்னது நீதானா’ பாடல், திரைப்படத்தின் ஒட்டுமொத்தக் கதையையும் கண்ணதாசன் அந்த ஒரு பாட்டுல சொல்லியிருப்பாரு.

என் ஆசிரியர் கண்ணதாசனின் இந்த உத்தியைத்தான் நான் எல்லா பாடல்களிலுமே பின்பற்றி வர்றேன். 'பத்தா' படத்துல அடுத்து வர்ற பாடல்களையும் நீங்க கேட்டுப் பார்த்தா, இந்தப் படம் எதை நோக்கிப் போகுதுன்னு உங்களால புரிஞ்சுக்க முடியும்." என்றவர், பாடல்களுக்குக் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து, "பாடல் வெளியான பிறகு நிறைய பேர் ஃபோன் பண்றாங்க.

கூப்பிட்டுட்டு ஒரு நிமிஷம் அமைதியா இருக்காங்க. அப்புறம் அந்த மௌனத்தைக் கடந்து ஒரு விசும்பல் சத்தம் கேக்குது. கலையினுடைய தேவையும் ஆற்றலும் இதுதான்னு இந்தப் பாடல்கள் எனக்கு ஆணித்தரமாக உணர்த்துது.

'மகளே' பாட்டுக்கு வந்த விசும்பல் அடங்குறதுக்குள்ள 'மொழியே' பாட்டுக்கும் அழைப்புகள் வரத் தொடங்கிடுச்சு. இந்தத் தருணத்துல என் குருநாதர்களான கண்ணதாசன், நா. முத்துக்குமார், புலமைப்பித்தன் ஐயா, அறிவுமதி அண்ணன் எல்லாரையும் நினைச்சுப் பார்க்கிறேன்." என்றார்.

Karthik Netha & Balaji Tharaneetharan
Karthik Netha & Balaji Tharaneetharan

தொடர்ந்து அவரிடம், ''சோசியல் மீடியாவுக்கேற்ப ஹூக் வைத்து எழுத வேண்டும் என அழுத்தம் உங்களிடம் தரப்படுகிறதா?" எனக் கேட்டோம். அதற்கு அவர், "ஆமா. அது நடக்கும். நான் அவங்ககிட்ட, "ஒரு மூணு நிமிட பாடல்ல ஒரு இடம் மட்டும் ஹிட் ஆகணும்னு ஏன் நினைக்கிறீங்க? அந்த ஒட்டுமொத்த பாடலையுமே ஹிட் பண்ணலாமே!"ன்னு கேட்பேன்.

"குழந்தையோட கண்ணு மட்டும் அழகா இருக்கணும்" என்றோ "சிரிப்பு மட்டும் அழகா இருக்கணும்" என்றோ யாரும் குழந்தை பெத்துக்க முடியாது. பெத்துக்கும்போது ஒட்டுமொத்த குழந்தையுமே தங்க ரதம் போல அழகாக வரணும்னுதான் நினைப்போம். கலை என்பதே இயற்கையாக முழுமையோடு உருவாவதுதான்.

அது செயற்கை நுண்ணறிவு மாதிரி துண்டு துண்டா உருவாக்கப்படுறது இல்லை. 'மொழியே' பாடலில் இப்போ ஒரு வரியை எல்லோரும் பாட ஆரம்பிச்சுட்டாங்க. அதேபோல 'மகளே' பாட்டுல வர்ற 'சேலை கட்டி நின்ன சிலை அழகி'ங்கிற வரியை மக்கள் மகளுக்கு மட்டும் இல்லாமல், காதலிக்கும் தங்கச்சிக்கும் பொருத்திப் பார்க்கிறாங்க.

ஒரு படைப்புக்கு என்ன விளைவு கிடைக்கணும்கிறதை ரசிகர்கள்தான் தீர்மானிக்கிறாங்க." என்றவரிடம், "'பத்தா'வில் மகள்களுக்காக மூன்று பாடல்கள். சமீபத்தில் 'ஜனநாயகன்' படத்திலும் ஒரு மகளுக்கான பாடல் எழுதியிருந்தீர்கள். ஒரே சூழலுக்கு மீண்டும் மீண்டும் எழுதும்போது உங்களுக்கு அயர்ச்சி ஏற்படுமா?" எனக் கேள்வி கேட்டோம்.

Lyricist Karthik Netha
Lyricist Karthik Netha

பதில் தந்தவர், "ஒரே உணர்வை, ஒரே சூழலை மீண்டும் மீண்டும் எழுதும்போது, "இதில எந்தளவுக்கு நாம நுட்பத்தைக் கூட்டப்போறோம்?" என்பதில் தான் சவாலே இருக்கு. சிந்திக்கச் சிந்திக்க நாம இன்னும் ரீஃபைன் ஆகிக்கிட்டே இருக்கோம்.

இயக்குநர் கொடுக்கிற சூழல் மூலமா, அந்த உறவை இன்னும் ஆழமா புரிஞ்சிக்கக்கூடிய வாய்ப்பு கவிஞர்களுக்குக் கிடைக்குது. வாழ்க்கையை ரொம்ப நெருங்கிப் பார்த்துப் புரிஞ்சுக்கிற வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கிறதுனாலதான் இந்தப் பாடல்கள் வெறும் வெற்றியா மட்டும் இல்லாமல், என் சொந்த வாழ்க்கைக்கும் பெரிதும் பயன்படுது." என்றவர், "இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் நான் இம்முறை இணைஞ்சு பணியாற்றியிருக்கேன்.

'மகளே' பாட்டு வரிகள் எழுதி மெட்டமைச்ச பாட்டு. ஆனா 'மொழியே' பாட்டு, அவர் போட்ட மெட்டுக்கு நான் எழுதினது.

பாலாஜி தரணிதரன் அண்ணன் அந்த மெட்டை அனுப்புனப்போ, அது இடைவிடாமல் 6-7 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு பெரிய மெட்டா இருந்தது. "அண்ணே, இதுல எதுல இருந்து எழுதணும்?"னு கேட்டேன்.

"தம்பி, எல்லாத்துக்கும் எழுதிருவோம்"னு சொன்னாரு. நான் அந்த மெட்டை மூணா பிரிச்சு, எழுதினேன். அதுக்கப்புறம் சாய் அபயங்கரும் பாலாஜி அண்ணனும் சேர்ந்து, வரிகளின் ஓட்டம் சிதையாதபடி அதை அழகாக 3.5 நிமிடப் பாடலாகச் சுருக்கினாங்க. அதேநேரம் 'மகளே' பாட்டை 80-களின் காலகட்டத்து உணர்வோடு கொண்டு வர நினைச்சோம்.

ரொம்ப வழக்கமான உவமைகள் இல்லாமல், கேட்ட மாத்திரத்திலேயே புரியக்கூடிய எளிய சொற்களைப் பயன்படுத்தி எழுதினேன். சாய் அபயங்கருக்குள் ஒரு பண்பட்ட இசைக்கலைஞன் இருக்கிறார் என்பது இந்தப் படத்துல தெளிவா தெரிஞ்சது" என்றார்.

Ramayana Movie
Ramayana Movie

இவர், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் 'ராமாயணம்' படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கு 'ஜெய் ஜெய் ராமா' பாடலை எழுதியிருக்கிறார். அந்தப் பாடல் குறித்து கார்த்திக் நேத்தா, "முதல்ல ஏ.ஆர். ரஹ்மான் சாருக்கு என் நன்றிகள். 'தக் லைஃப்' படத்துக்கு மணிரத்னம் சாரும் உதவி இயக்குநர்கள் பேசி என்னை அழைச்சாங்க.

ஆனா 'ராமாயணம்' படத்துக்கு ரஹ்மான் சாரே நேரடியா அழைச்சாரு. அவர் ஆபீஸ்ல இருந்து என்னைக் கூப்பிட்டு, "ராமாயணம் படத்துக்கு பாட்டு ஒன்னு எழுதணும், ரஹ்மான் சார் உங்களை எழுதச் சொல்றாரு"னு சொன்னப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. ஏற்கெனவே பாடல் இந்தியில் உருவாகியிருந்தது.

ஆனா "அப்படியே மொழிபெயர்க்காம அந்தச் சாரத்தை மட்டும் எடுத்துட்டு உங்க பாணியில எழுதுங்க"னு சொல்லிட்டாங்க. ரஹ்மான் சாருடன் சேர்ந்து ஹான்ஸ் ஜிம்மரும் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஹான்ஸ் ஜிம்மர் தன்னுடைய இசையில் புல்லாங்குழல், வீணை, நாதஸ்வரம் போன்ற கருவிகளைப் பயன்படுத்தியவர். அப்படிப்பட்ட ஆளுமைகளோடு இணைந்து பணியாற்றுவது எனக்குப் பெருமைதான்." என உற்சாகத்தோடு பகிர்ந்துகொண்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User