Doctor Vikatan: கண் இமைகளின் மேல் வரும் மருவை அகற்றுவது பாதுகாப்பானதா, எப்படி அகற்றுவது?

Sep 30, 2026 - 08:30
0
Doctor Vikatan: கண் இமைகளின் மேல் வரும் மருவை அகற்றுவது பாதுகாப்பானதா, எப்படி அகற்றுவது?

Doctor Vikatan: என் உறவினருக்கு 45 வயதாகிறது. அவருக்கு கண் இமையின் மேல் மரு உள்ளது. இப்படி கண்களின் மேலும் கண்களைச் சுற்றியும் வரும் மருக்களை அகற்றுவது பாதுகாப்பானதா... எந்த முறையில் அகற்றுவது சிறந்தது? வீட்டு வைத்தியங்கள் பலன் அளிக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

கண் மருத்துவர் விஜய் ஷங்கர்
கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

கண்களின் மேலும், கண்களைச் சுற்றிலும் வரும் இத்தகைய வைரஸ் மருக்களை கண் மருத்துவர் (Ophthalmologist) அல்லது சரும மருத்துவர் (Dermatologist) அகற்றுவார். மருக்களை அகற்றுவதில் இரண்டு முறைகள் உள்ளன. 

அறுவை சிகிச்சை (Surgical Excision) முறையில் மருக்களை அகற்றலாம். லேசர் மூலமும் (Lasers) மருக்களை அகற்ற முடியும். கார்பன் டை ஆக்ஸைடு லேசர் (Carbon Dioxide Laser), எர்பியம் யாக் லேசர் (Erbium YAG Laser) மற்றும் பல்சேட்டுட் டை லேசர் (Pulsated Dye Laser - PDL) ஆகியவை இதற்காகப் பயன்படுத்தப்படும் முக்கிய லேசர்கள் ஆகும்.

சிறிய மருக்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அழித்து, அங்குள்ள சிறிய ரத்த நாளங்களைச் செயலிழக்கச் செய்வதுதான் லேசர் சிகிச்சையின் சிறப்பு.

கிரையோதெரபி (Cryotherapy) என்ற முறையில் அதிக குளிர்ச்சியைப் பயன்படுத்தியும் இந்த வைரஸ் மருக்கள் அகற்றப்படுகின்றன. எலக்ட்ரோதெரபி (Electrotherapy) எனப்படும் மின்சார சிகிச்சையைப் பயன்படுத்தியும் இவற்றை அகற்றலாம்.

மருக்களை அகற்றுவதில் வீட்டு வைத்தியம் எதுவும் கிடையாது. தவறான செய்திகளையோ, அடுத்தவர் செய்வதையோ கேட்டு அப்படி வீட்டிலேயே மருக்களை அகற்றும் சிகிச்சைகளை முயற்சி செய்து பார்ப்பது ஆபத்தானது.

பலர் பார்மசிகளில் சாலிசிலிக் அமிலத்தை (Salicylic acid) வாங்கி, மருவின் மேல் தடவி  அதை அகற்ற முயற்சி செய்கிறார்கள். ஆனால், இது கண்ணின் விழித்திரையை (Cornia) காயப்படுத்தக்கூடும் என்பதால் மிகவும் ஆபத்தானது.

லேசர் சிகிச்சை உட்பட அனைத்து சிகிச்சைகளுக்கும் சில பக்கவிளைவுகள் உண்டு. சருமத்தில் சிவப்பு நிறப் பகுதிகள் உருவாகலாம். எரிச்சல் உணர்வு ஏற்படலாம். ஒவ்வாமை (Allergic reaction) வரலாம். சருமத்தில் நிறமாற்றம் (Hyper or Hypo-pigmentation) ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

தழும்பும் (Scarring) வரலாம். விழித்திரை சேதமடையாமல் இருக்க, உலோகத்தாலான கார்னியா பாதுகாப்பு ஷீல்டால் (Metal corneal shield) கண்ணை மூடிப் பாதுகாத்து, மிகவும் கவனமாக இச்சிகிச்சையைச் செய்ய வேண்டும். எனவே, கண் இமையில் மருக்கள் வந்தால் கண்டிப்பாக கண் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதுதான் பாதுகாப்பானது.

டாக்டர் விஜய் ஷங்கர்:

சென்னை, ஆர்.ஏ.புரம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் சங்கர் ஐ கேர் கிளினிக் வைத்து நடத்துகிறார். இத்துறையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User