"மஞ்சள் அலர்ட் அறிவிப்பு; ஆனால் `ரெட் அலர்ட்டுக்கு' இணையான மழை" வயநாடு நிலச்சரிவு பற்றி வி.டி.சதீசன்

Jul 07, 2026 - 21:01
0
"மஞ்சள் அலர்ட் அறிவிப்பு; ஆனால் `ரெட் அலர்ட்டுக்கு' இணையான மழை" வயநாடு நிலச்சரிவு பற்றி வி.டி.சதீசன்

கேரள மாநிலம், ​வயநாடு கள்ளாடியில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரிடரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுமார் பத்துக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் அப்பகுதியில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள். இதற்கிடையே மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் வி.டி.சதீசன், "மீனங்காடியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழு சம்பவ இடத்திற்கு வந்தடைந்துள்ளது. கோழிக்கோட்டில் உள்ள குழுவினரும் விரைவில் வந்தடைவார்கள். மாநிலக் காவல்துறையும் தீயணைப்புத் துறையும் தற்போது சம்பவ இடத்தில் உள்ளன. திருச்சூரில் உள்ள பாதுகாப்புப் படைப் பிரிவும் உதவிக்குத் தயாராக உள்ளது. மண்ணை அகற்றுவதற்காக எட்டு எஸ்கவேட்டர்கள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால், உபகரணங்களுக்கோ அல்லது படைகளுக்கோ எந்தப் பற்றாக்குறையும் இருக்காது.

கேரள முதல்வர் வி.டி.சதீசன்

நிலச்சரிவு நடந்த பகுதியில் உள்ள மண்ணை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகமும் பேரிடர் மேலாண்மை ஆணையமும் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தன. அதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சரின் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஒப்பந்ததாரர்கள் அவசரமாக மண்ணை அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், அது பின்பற்றப்படவில்லை. நெடுஞ்சாலை கட்டுமானத்தில் தேவையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற புகாரும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

அப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மீட்புப் பணிகளைப் பாதித்து வருகிறது. காலையில் 225 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக அறிக்கை கூறுகிறது. சேறும் சகதியுமான மண்ணும் மழையும் மீட்புப் பணிகளை மேலும் கடினமாக்குகின்றன. மத்திய அரசின் விதிமுறைகளின்படி அப்பகுதிக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டிருந்த போதிலும், 'சிவப்பு எச்சரிக்கைக்கு' இணையான மழை அங்கு பெய்துள்ளது.

வயநாடு நிலச்சரிவு

பேரிடர் நடந்த இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக வருவாய்த்துறை அமைச்சர் ஏ.பி.அனில் குமாரும், வேளாண்மைத்துறை அமைச்சர் டி.சித்திக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் அலுவலகம், தலைமைச் செயலாளர் அலுவலகம், பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் தலைமையில் மீட்புப் பணிகளும் அடுத்தகட்ட நடவடிக்கைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User