‘சீமான் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறியது ஏன்?' – காங்கிரஸ் கடும் தாக்கு!

Jun 07, 2026 - 14:31
0
‘சீமான் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறியது ஏன்?' – காங்கிரஸ் கடும் தாக்கு!

காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி மேடைகளில் நகைச்சுவை நாடகம் நடத்தும் சீமானுக்கு, அந்தக் கேள்வியை எழுப்புவதற்கே என்ன தகுதி இருக்கிறது? நாளொரு நாடகமும் பொழுதொரு வேஷமும் போட்டு அரசியல் பிழைப்பு நடத்திவரும் சீமான், காங்கிரஸ் பேரியக்கத்தையும், ராகுல் காந்தியையும் விமர்சிப்பது அரசியல் நாகரிகத்தின் எல்லையை மீறிய செயல். ராகுல் காந்தியை விமர்சிப்பதற்கு சீமானுக்கு கொள்கைத் தகுதியோ, அரசியல் நேர்மையோ, மக்கள் அங்கீகாரமோ கிடையாது.

‘நாய் வேஷம் போட்டால் குரைக்கவும், நரி வேஷம் போட்டால் ஊளையிடவும்’ மட்டுமே தெரிந்த ஒரு வசன வியாபாரி, கொள்கை அரசியலைப் பற்றி பேசுவது தமிழ்நாட்டு மக்களுக்கே வேடிக்கையாக உள்ளது. நான்கு சதவீத வாக்குகளை மட்டுமே வைத்துக் கொண்டு, தன்னை மாற்று சக்தியாக விளம்பரம் செய்து கொள்வதால் மக்கள் தீர்ப்பை மாற்ற முடியாது. இன்று தி.மு.க-வினர் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்றால், அதற்குப் பின்னால் காங்கிரஸ் பேரியக்கத்தின் உறுதியான வாக்கு வங்கியும், அடித்தட்டு தொண்டர்களின் இடைவிடாத உழைப்பும் இருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை.

கணபதி சிவக்குமார்
கணபதி சிவக்குமார்

நேற்று வரை தி.மு.க-வை கடுமையாக விமர்சித்தவர், இன்று தி.மு.க-வின் அரசியல் வாதங்களைத் தூக்கிச் சுமப்பது எதற்காக? இந்த புதிய அரசியல் நெருக்கத்தின் நோக்கம் என்ன? சீமான் திடீரென தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறியது ஏன்? வெறும் மேடை வசனங்களால் உண்மைகளை மறைக்க முடியாது. சீமானுக்கு ஓர் நேரடிச் சவால்.  காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி மேடையில் ஜோக் அடிக்கும் சீமானே, உமக்கு உண்மையிலேயே துணிச்சல் இருந்தால், காங்கிரஸ் ஆதரவோடு வெற்றி பெற்ற கனிமொழி உள்ளிட்ட தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் மக்களிடம் சென்று வாக்கு கேட்கச் சொல்லுங்கள். காங்கிரஸ் இல்லாத களத்தில் அவர்களால் வெல்ல முடியுமா என்பதை மக்களே தீர்மானிப்பார்கள்.

சீமான்
சீமான்

தேர்தல் களத்தில் நிரூபிக்க முடியாதவர்கள் மேடைகளில் மட்டும் வீர வசனம் பேசுவது அரசியல் அல்ல. வார்த்தை ஜாலங்களை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு நேரடியாகக் களத்திற்கு வாருங்கள். யார் வெல்வார்கள், யாருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது, யாருக்கு வெறும் மேடை ஆதரவு மட்டுமே இருக்கிறது என்பதை தேர்தல் களத்தில் சந்தித்துப் பார்ப்போம். சீமான் என்று பெயர் வைத்தவன் எல்லாம் சீமானாகிவிட முடியாது. மேடைக்கு மேடை தத்துப்பித்தென்று பேசி மக்களைத் திசைதிருப்பும் வசன வியாபாரியே... உமது போலி அரசியலையும், முரண்பட்ட நிலைப்பாடுகளையும், தேர்தலுக்கு தேர்தல் மாறும் பேச்சுகளையும் தமிழ்நாட்டு மக்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர். காங்கிரஸ் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இனிமேலும் எல்லை மீறி பேசினால், அதற்கான அரசியல் ரீதியான பதிலை மக்களின் மன்றத்தில்  சந்திக்க நேரிடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User