"உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கிறோம்... காப்பீடு வசதி கூட இல்லை" - டெலிவரி பணியாளர்கள் வேதனை

May 11, 2026 - 18:31
0
"உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கிறோம்... காப்பீடு வசதி கூட இல்லை" - டெலிவரி பணியாளர்கள் வேதனை

இன்றைய நம் நவீன வாழ்வில் 'விரைவு டெலிவரி' என்ற வசதி சாதரணமான முன்னேற்றமாகத் தோன்றினாலும், அதன் பின்னால் இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கூடிய மக்களின் உழைப்பு சாதரணமானது அல்ல.

குடும்பச் சூழலினால் இளம் வயதிலே வேலை தேடுபவர்களுக்கு உடனே கைக்கொடுக்கும் வேலையாக இருப்பினும், அந்த வேலையினால் ஏற்படக்கூடிய சிரமங்கள் அதிகமே. இந்த வேலையில் படித்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள் பகுதிநேர வேலையாக ஐந்து மணிநேரம் பணிபுரிவதன் மூலம் இருநூறு ரூபாய் வரை ஊக்கத் தொகையும், முழுநேரம் பணிபுரிவதன் மூலம் நானூறு ரூபாய் வரை ஊக்கத் தொகையாகப் பெறலாம்.

அவர்களின் வேலை நேரத்தைப் பொறுத்து ஊதியமும் மாறுபடுகிறது. சில நேரங்களில் இவை வேலை பார்க்கும் நேரத்தைப் பொறுத்தும் அமையும்.

டெலிவரி பணியாளர்கள்
டெலிவரி பணியாளர்கள்

உணவு டெலிவிரி பணியில் இன்சென்டிவ் பற்றிய கவலை அதிகளவு இருக்கும், ஆனால் கேப்/பைக் டேக்சியில் இன்சென்டிவ் பற்றிய கவலை இருப்பதில்லை. மேலும் உணவு டெலிவரியில் பகுதி நேர வேலையாக இருந்தாலும் முழுநேர வேலையாக இருந்தாலும் தொடர்ந்து செய்யவேண்டி இருக்கும். ஆனால் கேப்/பைக் டேக்சியில் அவ்வாறு இல்லாமல் நம் நேரத்தைப் பொறுத்து தொடர்ந்தும் அல்லது தங்களுக்கு வேண்டிய நேரத்திலும் மாற்றிக் கொள்ளலாம்.

ஆர்டரை ஏற்றுக்கொண்ட கணத்திலிருந்தே அவர்களின் காலக்கணக்கீடு தொடங்கும். அந்த நேரச் சக்கரம் பருவநிலை, போக்குவரத்து நெரிசல் என எதையும் கணக்கில் கொள்ளாது ஓய்வில்லா உழைப்பாகவே மாறுகிறது.

டெலிவரி பணியாளர்கள் நேரத்தில் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால் அவர்களின் தினசரி போராட்டம் மன அழுத்தத்தையை ஏற்படுத்துகிறது. இதுமட்டுமில்லாமல் தினசரி அவர்களின் உணவைத் தவிர்க்கும் நிலை ஏற்பட நேரடியாக அவர்களின் உடல்நலத்தைப் பாதிக்கிறது.

டெலிவரி பணியாளர்கள்
டெலிவரி பணியாளர்கள்

குறிப்பாக பெண்களுக்குப் பாதுகாப்பு சிக்கல், உடல் மற்றும் மன சார்ந்த பிரச்னைகள் இருப்பதால் பெண்கள் இந்த டெலிவரி வேலைக்குப் பொருந்த மாட்டார்கள் என்ற சமூகப்பார்வையை அடித்து நொறுக்கி இன்று பல பெண்கள் இவ்வேலையைச் செய்து வருகின்றனர்.

'டெலிவர் வேலை செய்யும் பணியாளர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து செய்தாலும், விபத்துகள் நேரும்போது அவர்களுக்கான காப்பீட்டு உதவிகள் பெரும்பாலும் தாமதமாகவே கிடைக்கின்றன. அல்லது கால் இழப்பு போன்ற கடுமையான பாதிப்புகளுக்கு ரூ.1 முதல் 5 லட்சம் வரைவும், உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.5 முதல் 10 லட்சம் வரைவும், காப்பீட்டு திட்டத்தின் மூலம் கிடைக்கப் பெறுகின்றன.

மேலும், அரசும், நிறுவனங்களும் இணைந்து சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020, இ ஷ்ரம் பதிவு திட்டம் போன்ற திட்டங்களின் மூலம் மருத்துவ உதவி, உயிர் காப்பீடு, விபத்து காப்பீடு, மாற்றுத்திறன் நிவாரணங்கள் வழங்க உறுதி செய்துள்ளது.

டெலிவரி பணியாளர்கள்
டெலிவரி பணியாளர்கள்

‌‌சில மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் டெலிவரி பணியாளர் ஒருவர் இரவு 8 மணியளவில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆனால், நிறுவன தலைமை அதிகாரி அதனைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. இறந்தவரின் உடலையும் இரவு 2 மணிக்குத்தான் மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

பின் நிறுவனம் சரியாகப் பதிலளிக்கவில்லை எனக் கோபமடைந்த சக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் நிறுவனம் சிறு தொகையை இழப்பீடாக வழங்கியுள்ளது. பணியாளர்களும் பணம் திரட்டி தங்களால் முடிந்தவரை இறந்தவரின் குடும்பத்திற்கு உதவியுள்ளனர்.

சென்னையில் உணவு டெலிவரி பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர், ஒருமுறை வாடிக்கையாளர் பகிர்ந்திருந்த லொக்கேஷன் தெளிவாக இல்லாததால் குறிப்பிட்ட இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பலமுறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றபோதும், அழைப்புகள் ஏற்கப்படாமல் துண்டிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் சில நேரத்திற்குப் பிறகு வாடிக்கையாளர் தொடர்புகொண்டு, டெலிவரி தாமதமானதாகக் கூறி கோபமாகப் பேசியதாக அந்த ஊழியர் தெரிவித்தார்.

டெலிவரி பணியாளர்கள்
டெலிவரி பணியாளர்கள்

அதேபோல், கடுமையான போக்குவரத்து நெரிசலால் தாமதம் ஏற்பட்ட சூழல்களிலும் சில வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்ளாமல் இழிவாகப் பேசிய அனுபவங்களும் ஏற்பட்டுள்ளதாகக் கூறினர்.

மேலும், சில வாடிக்கையாளர்கள் முதலில் ஒரு லொக்கேஷனைப் பகிர்ந்துவிட்டு, டெலிவரி பணியாளர்கள் அந்த இடத்திற்குச் சென்ற பிறகு வேறு இடத்தைத் தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தேவையற்ற அலைச்சல், கூடுதல் நேர விரையம் மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளும் நிலையும் ஏற்படுகிறதாகப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

நம் வாழ்க்கையை எளிமையாக்க விடாது ஓடிக்கொண்டிருக்கும் இந்த டெலிவரி பணியாளர்களின் உழைப்பையும், வலியையும் உணர வேண்டியது அவசியமானது.

- தர்ஷினி.சி

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User