விசிக Vs திமுக: ``சுயநல சாணக்கியத்தனம் யாருடையது?" - முற்றும் வார்த்தைப்போர்!

May 22, 2026 - 12:01
0
விசிக Vs திமுக: ``சுயநல சாணக்கியத்தனம் யாருடையது?" - முற்றும் வார்த்தைப்போர்!

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்தக் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான தலைவர்களில் ஒருவர் திருமாவளவன். நீண்டகாலமாக தொடரும் இந்த உறவில் தேர்தலுக்கு பின்பு சிறு பிணக்கு இருப்பது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது. குறிப்பாக 108 இடங்களில் வென்ற தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு விசிக அலுவலகம் ஏறியபோது, அதை ஏற்கவும் இல்லாமல் மறுக்கவும் இல்லாமல் ஒரு மாதிரி தலையசைத்திருந்தார் திருமாவளவன்.

தவெக தொண்டர்கள்
தவெக தொண்டர்கள்

கூட்டல் - கழித்தல் கணக்குகளுக்குப் பிறகு தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது இரு கட்சிகளுக்குமிடையே இருந்த பிளவு அங்கங்கே எட்டிப்பார்த்தாலும், அவ்வளவு வெளிப்படையாக தெரியவில்லை. அதற்கு முக்கியக் காரணமாக 'தவெக ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு அளிக்கிறோம்' என்ற திருமாவளவனின் வார்த்தைகள் எனக் கூறப்பட்டது.

ஆனால், தவெக தலைவர் விஜய்யின் முதல் மாநாடான விக்கிரவாண்டி மாநாட்டின் உரையில், திருமாவளவனை குறிவைத்து 'ஆட்சியில் பங்கு தருகிறோம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கோரிக்கையை தொடர்ந்து முன்னெடுத்துவரும் திருமாவளவன் தற்போது தவெக ஆட்சியில் தனக்கென ஒரு அமைச்சரவையை ஏற்றிருக்கிறார். திண்டிவனம் எம்.எல்.ஏ வன்னி அரசுக்கு ஆதி திராவிடர் நலம் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் நலத்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்றிலிருந்து தி.மு.க தரப்பிலிருந்து விசிக-வை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக தி.மு.க எம்.பி.ஆ.ராசா தன் எக்ஸ் பக்கத்தில்,

``முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’

மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’

வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்;

பூ முடித்தவனை புறந்தள்ளி —புணர்ச்சிக்கு வேறிடம்தேடுவதில் தவறில்லை!

ஆ.ராசா
ஆ.ராசா

பெரியாரின்‘காலதேச வர்த்தமான’ த்திற்கு காத்திருப்போம் ; என்றாலும் களமாடுவோம்! வெற்றி நமக்கே!!" எனப் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் வி.சி.க பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி தன் எக்ஸ் பக்கத்தில்,

``அதிகாரம் எளியவர்க்கு அதிலென்ன ஆத்திரம் ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே. அநீதி தொடர்ந்து அனைத்தும் உரைத்தால் அணைக்க முடியா அனலில் தகித்து போவீர்!' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், ஆ.ராசாவின் பதிவுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்தப் பதிவு டெலிட் செய்யப்பட்டது.

இன்று காலை அமைச்சராக வன்னி அரசு பதவியேற்றதும் மீண்டும் ஆ.ராசா தன் எக்ஸ் பக்கத்தில்,

``என் வீட்டுத் தோட்டத்துத்

தென்னை

கூனி வளைந்து

எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்

அதற்குப் பெயர்

முடத்தெங்கு”!

அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?

வாழ்க தமிழ்!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

எஸ்.எஸ்.பாலாஜி - வன்னி அரசு
எஸ்.எஸ்.பாலாஜி - வன்னி அரசு

இந்தப் பதிவுக்கு விசிக-வின் அதிகாரப்பூர்வ பக்கத்தில்,

``விசிக ஒன்றும் மற்ற கட்சிகளின் தயவில் வளரவில்லை! தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இரத்தமும் சதையுமாய் சிந்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்கு வங்கியைத் தக்கவைத்து, கூட்டணி கட்சிகளின் வெற்றிக்குத் தோள் கொடுத்தது சிறுத்தைகளின் உழைப்பு! "கட்சித் தாவல்" பற்றிப் பேச மற்ற கட்சியினருக்கு என்ன தகுதி இருக்கிறது? காங்கிரஸை வீழ்த்த சங் பரிவாருடன் (BJP) கூட்டணி வைத்த வரலாறு யாருடையது? வாஜ்பாய் அமைச்சரவையில் அங்கம் வகித்துவிட்டு, பிறகு அதே பாஜகவை எதிர்த்த 'சுயநல சாணக்கியத்தனம்' யாருடையது?

இது போன்ற பல அரசியல் நாடகங்களை தமிழ்நாடு பார்த்திருக்கிறது... கொள்கைக்காகக் கரம் கோர்த்தோம், நாங்களாகக் கூட்டணியை விட்டு வெளியேறுகிறோம் என்ற அறிவிப்பை இன்னும் வெளியிடக்கூட இல்லை... அதற்குள் ஏன் இந்த எரிச்சல்? ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை மட்டும் வாங்கிக்கொண்டு, அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் உங்களின் 'சமூக நீதியை' நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்! விசிக என்னும் பேரியக்கம் எழுச்சித் தமிழரின் உழைப்பால், கோடிக்கணக்கான சிறுத்தைகளின் இரத்தம் மற்றும் வியர்வையால் வளர்க்கப்பட்டது.

திருமாவளவன்

கட்சி நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் எந்த நேரத்தில் எந்த அரசியல் உத்தியைக் கையாள வேண்டுமென்று எங்களின் மாண்புமிகு தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்! எங்களை விமர்சிப்பதற்கு முன், கூட்டணிக் கட்சிகளை வெறும் 'வாக்கு வங்கி' ஏணியாக மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அவர்களின் உழைப்பைச் சுரண்ட நினைத்த உங்களின் சுயநலப் புத்தியைப் போய் கேள்வி கேளுங்கள்!" - என பதிலளித்திருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User