அமெரிக்காவில் சரித்திரம் படைத்த ரோஜா - செல்வமணி மகள் - திறமைக்கு கிடைத்த Herman B Wells விருது!

Apr 21, 2026 - 13:32
 0
அமெரிக்காவில் சரித்திரம் படைத்த ரோஜா - செல்வமணி மகள் - திறமைக்கு கிடைத்த Herman B Wells விருது!

ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சரும், பிரபல நடிகையுமான ரோஜா, இயக்குநர் ஆர்.கே. செல்வமணி ஆகியோரின் மகள் அன்ஷு மாலிகா அமெரிக்காவின் புகழ்பெற்ற இண்டியானா பல்கலைக்கழகத்தில் (Indiana University) உயரிய விருதான `ஹெர்மன் பி வெல்ஸ்' (Herman B Wells Award - 2026) விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.

அந்தப் பல்கலைக்கழகத்தில் மதிப்புமிக்க `லுடி ஸ்கூல் ஆஃப் இன்ஃபர்மேட்டிக்ஸ், கம்ப்யூட்டிங் அண்ட் இன்ஜினியரிங்' கல்லூரியில் அன்ஷு மாலிகா Computer Science பயின்று வருகிறார். இவர் படிப்பில் மட்டுமின்றி தொழில்நுட்பம் மற்றும் சமூக சேவையிலும் சிறந்து விளங்குகிறார்.

அன்ஷு Herman B Wells விருது
அன்ஷு Herman B Wells விருது

இந்த ஹெர்மன் பி வெல்ஸ் விருதுக்கு முன்பாகவே, இவர் தனது துறைசார்ந்த திறமைக்காக Maureen Biggers Leadership Award for Equity and Technology Excellence (2025), Luddy Academic Excellence Award (2024-25), Global Entrepreneur Award (2024), Global Impact Advocate Award (2025) மற்றும் மதிப்புமிக்க கிரேஸ் ஹாப்பர் ஸ்காலர்ஷிப் (Grace Hopper Scholarship) உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.

கோடிங் மற்றும் வெப் டெவலப்மென்ட் ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட இவர், வெறும் ஏட்டுக்கல்வியோடு நின்றுவிடாமல் `Art for a Cause’ போன்ற முன்னெடுப்புகளின் மூலம் சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

`ஹெர்மன் பி வெல்ஸ்' விருது இண்டியானா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மிக உயரிய மற்றும் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த விருதுகளில் ஒன்றாகும். இண்டியானா பல்கலைக்கழகத்தின் 11-வது தலைவராகவும், பின்னர் அதன் வேந்தராகவும் இருந்து பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றிய `ஹெர்மன் பி. வெல்ஸ்' என்பவரின் நினைவாக 1961-ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இது எளிதில் கிடைத்துவிடும் விருது அல்ல. ஆண்டுதோறும் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களில், மிகச்சிறந்த தகுதிகள் கொண்ட ஒரே ஒரு மாணவருக்கு மட்டுமே மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இது இளங்கலை மாணவர்களுக்கான மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது.

அன்ஷு Herman B Wells விருது
அன்ஷு Herman B Wells விருது

தேர்வுக்கான தகுதிகள்:

  • மாணவர்கள் குறைந்தபட்சம் 3.8 GPA-க்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.

  • பல்கலைக்கழக வளாகத்திலும், மாணவர் அமைப்புகளிலும் சிறந்த தலைமையாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.

  • கல்விக்கு வெளியே சமூக சேவை மற்றும் தன்னார்வப் பணிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இந்த விருதைப் பெறும் மாணவர்களின் பெயர் இண்டியானா பல்கலைக்கழகத்தின் `மெமோரியல் யூனியனில்' நிரந்தரமாகப் பொறிக்கப்படும் என்பது இந்த விருதின் மற்றொரு மாபெரும் சிறப்பு.

ரோஜாவின் நெகிழ்ச்சிப் பதிவு

தனது மகளின் இந்த மிகப்பெரிய சர்வதேசச் சாதனையைக் கொண்டாடும் வகையில், ரோஜா மற்றும் அவரது கணவர் ஆர்.கே. செல்வமணி இருவரும் அமெரிக்கா சென்று பல்கலைக்கழகத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் நேரில் கலந்துகொண்டனர்.

இது குறித்து ரோஜா தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் நெகிழ்ச்சியான ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "கனவுகளில் இருந்து இலக்கை நோக்கிய பயணம்... இண்டியானா பல்கலைக்கழகத்தில் மதிப்புமிக்க விருதை வென்று எங்கள் மகள் சரித்திரம் படைத்துள்ளாள். ஒரு சிறிய கனவாகத் தொடங்கியது, இன்று எங்களுக்கு மிகப்பெரிய பெருமையையும், பலருக்கும் உத்வேகத்தையும் தரும் தருணமாக மாறியுள்ளது. கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, தைரியம் உன்னை இங்கு கொண்டு வந்துள்ளது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே," என்று உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அன்ஷு Herman B Wells விருது
அன்ஷு Herman B Wells விருது

அரசியல், சினிமா என்ற வலுவான பின்னணியில் இருந்து வந்தாலும், தனது சொந்த உழைப்பாலும், கல்வித்திறனாலும், சமூக அக்கறையாலும் அன்ஷு மாலிகா அமெரிக்க மண்ணில் இந்த உயர்ந்த விருதைப் பெற்றுள்ளது பாராட்டத்தக்க விஷயம். ஒரு மாணவியாகக் கல்வியிலும், சமூகப் பொறுப்பிலும் சிறந்து விளங்க வாழ்த்துகள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0