வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். பாணியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்; பீகாரில் 24 பேர் சிக்கியது எப்படி?

Jun 22, 2026 - 16:00
0
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். பாணியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்; பீகாரில் 24 பேர் சிக்கியது எப்படி?

நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு இரண்டாவது முறையாக நடத்தப்பட்டது. ஏற்கனவே நடத்தப்பட்ட நீட் தேர்வின் போது வினாத்தாள்கள் கசிந்ததால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று நடந்த நீட் தேர்வுக்குப் பலத்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வினாத்தாள்கள் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் கடைசி நேரத்தில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டன. அப்படி இருந்தும் பீகாரில் நீட் தேர்வில் மோசடி நடந்துள்ளது.

நீட் மறுதேர்வின் போது பீகாரின் லக்கிசராய் என்ற இடத்தில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் பட பாணியில் நடந்த மோசடி முறியடிக்கப்பட்டது.

ஒரு கும்பல் மாணவர்களுக்குப் பதில் வேறு நபர்களை நீட் தேர்வு எழுத வைத்ததை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த அதிரடி சோதனையில் மருத்துவ மாணவர்கள், தேர்வுப் பணியில் ஈடுபட்ட பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்கள் உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

இந்த மோசடியில் கயாவில் உள்ள ஏஎன்எம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவ மாணவர் அர்பித் ராஜ் மூளையாகச் செயல்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இவரிடம் ஏற்கனவே 2024ம் ஆண்டு நீட் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தி இருக்கிறது.

இது தவிர இந்த வழக்கு தொடர்பாக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மற்றொரு மருத்துவ மாணவரான மயங்க் காஷ்யப்பும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்கள் 14 பேரும் இந்த ஆள்மாறாட்ட மோசடியில் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ''ஹசன்பூர் உயர்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் பயோமெட்ரிக் நிறுவன ஊழியராகக் காட்டிக் கொண்டு மயங்க் காஷ்யப் நுழைந்தார். அவர் முதலில் பிடிபட்டார். அவரைத் தொடர்ந்து லக்கிசராய் பகுதியில் உள்ள கேஆர்கே மேல்நிலைப் பள்ளி மற்றும் கேந்திரிய வித்யாலயா ஆகிய இடங்களில் போலீஸார் சோதனை நடத்தி மற்றவர்களைக் கைது செய்தோம்'' என்றார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழக செவிலியர் மாணவி பூனம் குமாரி நீட் தேர்வில் மற்றொரு மாணவிக்காகக் கலந்து கொண்டதாகப் பிடிபட்டார். இதே போன்று எய்ம்ஸ் ரேபரேலி மாணவர் சவுரப் ஜாவும் கைது செய்யப்பட்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User