வைபவ் சூர்யவன்ஷியின் `God Mode' சம்பவம் - லக்னோவை வீழ்த்தி ப்ளே-ஆஃபை நெருங்கிய ராஜஸ்தான்!

May 20, 2026 - 11:31
0
வைபவ் சூர்யவன்ஷியின் `God Mode' சம்பவம் - லக்னோவை வீழ்த்தி ப்ளே-ஆஃபை நெருங்கிய ராஜஸ்தான்!

ஐபிஎல் 2026 தொடரின் பரபரப்பான 64-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிரட்டலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

RR vs LSG
RR vs LSG

டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதற்கேற்ப களம் புகுந்த லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிரடியாக இருந்தது. மிட்செல் மார்ஷ் நங்கூரமாக நின்று ராஜஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடிக்க 57 பந்துகளில் 11 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 96 ரன்கள் குவித்து, சதத்தை தவறவிட்டாலும் அணியின் ரன் ரேட்டை எகிற வைத்தார்.

அவருக்கு பக்கபலமாக ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். கேப்டன் ரிஷப் பண்ட் தனது பங்கிற்கு வித்தியாசமான ஷாட்களை அடித்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

221 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்தினார். லக்னோவின் மயங்க் யாதவ், ஆகாஷ் சிங் பந்துவீச்சை துவம்சம் செய்த வைபவ், மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிக்ஸர் மழை பொழிந்தார். வெறும் 38 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.

RR
RR

அவருக்கு உறுதுணையாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் (43 ரன்கள்) மற்றும் நிதானமாக ஆடிய துருவ் ஜூரெல் (53 ரன்கள்) அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். கடைசி ஓவர்களில் லக்னோ பௌலர்கள் கட்டுப்படுத்த முயன்றாலும், ஆட்டம் ராஜஸ்தான் கையை விட்டுப் போகவில்லை.

இறுதியில், 19.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 225 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் மாஸ் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது வைபவ் சூர்யவன்ஷிக்கு வழங்கப்பட்டது.இந்த வெற்றியின் மூலம் தனது பிளே ஆப் வாய்ப்பையும் தக்க வைத்ததோடு மிரட்டலான சேஸிங் மூலம் தங்களின் பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது பிங்க் ஆர்மி!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User