அண்ணா நகர் களத்தில் சிற்றரசை முன்னிறுத்திய உதயநிதி! - உச்சகட்ட பரபரப்பில் தேர்தல் பிரசாரம்

Apr 10, 2026 - 17:01
 0
அண்ணா நகர் களத்தில் சிற்றரசை முன்னிறுத்திய உதயநிதி! 
- உச்சகட்ட பரபரப்பில் தேர்தல் பிரசாரம்

அண்ணா நகர் தெருக்கள் முழுவதும் பிரசாரக் குரல் முழங்க, பொதுமக்கள் மத்தியில் உற்சாகம் காணப்பட்டது. திமுக கொண்டு வந்த திட்டங்கள், செய்த வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு பேசிய உதயநிதி, "சிற்றரசு பற்றி உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை" என தனது பேச்சை தொடங்கி, இளைஞரணியில் இருந்து வளர்ந்து வந்த கட்சி நிர்வாகியாக சிற்றரசுவை முன்னிறுத்தினார்.

“நான் இளைஞரணி செயலாளர், சிற்றரசு இளைஞரணியில் பயிற்சி பெற்று இன்று மாவட்டக் கழகச் செயலாளராக இருக்கிறார். உங்களின் ஆதரவுடன் விரைவில் சட்டமன்ற உறுப்பினராக வரப் போகிறார்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தன் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை எடுத்துக்காட்டாக கூறிய உதயநிதி, “அந்த தொகுதி பல விஷயங்களில் ஒரு ரோல் மாடல். அதுபோலவே அண்ணா நகரையும் மாற்றும் திறன் சிற்றரசுவுக்கு உள்ளது” என வலியுறுத்தினார்.

மேலும், கலைஞர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளின் மரபை நினைவுபடுத்தி, "எனக்கும் சிற்றரசுவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. கலைஞர் கருணாநிதி நின்று வெற்றி பெற்ற சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ நான். சிற்றரசு, கலைஞர் கருணாநிதி நின்று வெற்றி பெற்ற அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு விரைவில் சட்டமன்ற உறுப்பினராகப் போகிறார்" என கூறி உணர்ச்சிரீதியாக இணைத்தார்.

கடைசியாக வாக்கு வித்தியாசத்தையும் இலக்காக முன்வைத்த உதயநிதி, “கடந்த முறை 28 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுகவின் எம்.கே.மோகனை வெற்றி பெற செய்த நீங்கள் இந்த முறை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் சிற்றரசுவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று மக்களிடம் கோரிக்கை வைத்தார்.

அண்ணா நகர் தொகுதியில் திமுக சார்பில் சிற்றரசு, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, தவெக வேட்பாளர் ராம் குமார், நாதக வேட்பாளர் சங்கர் உள்ளிட்ட பலர் போட்டியிடும் நிலையில், தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் நேரடி பிரசாரம், அண்ணா நகர் அரசியல் போட்டிக்கு புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0