திருச்சி: அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை?- உயிரிழந்த மாணவி; - போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்!

May 24, 2026 - 09:01
0
திருச்சி: அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை?- உயிரிழந்த மாணவி; - போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், தொண்டைமாநல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சேட்டு - கலைச்செல்வி ஆகியோரது மகள் சீதாலட்சுமி(வயது:19). இவர், திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் அரசு செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு டிப்ளமோ செவிலியர் படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு மூக்கில் சதை வளர்ந்துள்ளதால் அதற்கு சிகிச்சை பெற திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கூறினர். இதனை அடுத்து, அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சிகிச்சைக்கு பின்பு அவர் உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்களும், சக மாணவிகளும் அதிர்ச்சியடைந்தனர். 'மருத்துவரின் தவறான சிகிச்சையும், மயக்க மருந்து அதிக அளவு வழங்கப்பட்டதால் தான் சீதாலட்சுமி உயிரிழந்ததாக' குற்றம்சாட்டி அவரது பெற்றோர்கள் மற்றும் சக செவிலியர்கள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 'உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும். தவறான சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர்கள் கோரிக்கை வைத்தனர். அரசு மருத்துவமனை முன்பு சுமார் மூன்று மணி நேரம் அவர்கள் சாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடமும், உயிரிழந்த மாணவியின் உறவினர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். சிகிச்சை அளித்ததன் விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மாணவியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசு செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனை வளாகம் அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

minister ramesh

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ்,

"அறுவை சிகிச்சை மேற்கொண்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் விசாரணை மேற்கொண்டு சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கு கல்லூரியில் எந்தவித பிரச்னையும் ஏற்படுத்தக் கூடாது என அவர்கள் நிர்வாகத்திடம் பேசி உள்ளோம். அப்படி ஏற்பட்டால் அவர்களை என்னை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். மாணவியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை நிச்சயம் செய்வோம்" என தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User