திருச்சி மாவட்டம் துடையூர் ஸ்ரீவிஷமங்களேஷ்வரர் கோயில்: விஷக்கடிகள் நீங்கும்... திருமணவரம் கூடிவரும்

Jun 17, 2026 - 09:01
0
திருச்சி மாவட்டம் துடையூர் ஸ்ரீவிஷமங்களேஷ்வரர் கோயில்: விஷக்கடிகள் நீங்கும்... திருமணவரம் கூடிவரும்

காவிரிக்கரையில் ஏராளமான சிவத்தலங்கள் உள்ளன. அவற்றில் சோழ மன்னர்கள் கட்டிய ஆலயங்கள் பல. ஒவ்வோர் ஆலயமும் ஒவ்வொரு சிறப்பினை உடையது அந்த வகையில் துடையூர் மிகவும் முக்கியமானது.

திருச்சி- நாமக்கல் சாலையில், சமயபுரம் டோல்கேட் மற்றும் நொச்சியத்துக்கு அருகில் உள்ள துடையூரில் அமைந்திருக்கிறது ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவிஷ மங்களேஸ்வரர் ஆலயத்தை அடையலாம். திருச்சியில் இருந்து குணசீலம் செல்லும் பேருந்தில் பயணித்தால், துடையூர் பேருந்து நிலையத்தை அடையலாம்.

முன்னொரு காலத்தில் சிவனடியார் ஒருவர் இங்கு பிராகார வலம் வரும்போது பாம்பு ஒன்று தீண்டியது. அருகில் யாரும் இல்லை. செய்வதறியாத அந்த அடியார், 'சிவமே கதி' என அங்கேயே அமர்ந்தார். சிவநாமம் ஜபித்தார்.

என்ன ஆச்சர்யம்... சிறிது நேரத்தில் சிவபெருமானின் அருளால் உடலில் ஏறிய விஷம் முறிந்தது. இதனால் இத்தல் மூலவர் விஷமங்களேஷ்வரர் என்னும் திருப்பெயரைப் பெற்றார். இன்றும் விஷக்கடி என வருபவர்களுக்கு மூலவருக்கு அபிேஷகம் செய்த திருநீறு தரப்படுகிறது. அதை வாங்கி பூசிக்கொண்டால் பாதிப்புகள் குறையும் என்கிறார்கள்.

துடையூர் ஸ்ரீவிஷமங்களேஷ்வரர் கோயில்
துடையூர் ஸ்ரீவிஷமங்களேஷ்வரர் கோயில்

பழைமையான இந்தக் கோயில் கண்டராதித்த சோழனால் கட்டப்பட்டது. ஒருகாலத்தில் கொள்ளிடக்கரையில் கடம்ப வனத்தில் பிரமாண்டமாக இருந்த இந்த ஆலயம் தற்போது சிறியதாக மாறினாலும் அதன் மகிமையும் எழிலும் அப்படியே உள்ளது. இந்த ஆலயத்தின் சிற்பங்கள் காண வேண்டிய சிறப்பினை உடையவை.

இந்தத் தலம் மிகவும் முக்கியமானதாக விளங்கக் காரணம், இங்கே மும்மூர்த்திகளும் அருள்பாலிப்பதுதான். இங்கே மூலவராக ஸ்ரீவிஷ மங்களேஸ்வரர்; அம்பாள்- ஸ்ரீமங்களாம்பிகை. அடுத்து, கோஷ்டத்தில் ஸ்ரீசரஸ்வதி தேவியும், பிராகாரத்தில் அவரின் கணவர் ஸ்ரீபிரம்மாவும் தரிசனம் தருகின்றனர்.

அதேபோல், மடியில் தாயாரை இருத்திக்கொண்டு ஸ்ரீலக்ஷ்மி நாராயணராக, திருமால் காட்சி தருகிறார். திருநாவுக்கரசர் இத்தலத்தைத் தன் பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடியுள்ளது சிறப்பு.

மேலும் இத்தலத்தில் ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேதராக ஸ்ரீசுப்ரமணியர், தன் மனைவியர் உஷா- பிரத்யுஷாவுடன் சூரிய பகவான், கோஷ்டத்தில் ஸ்ரீகாத்யாயினி சமேதராக ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் ஆகியோரும் தனிச்சந்நிதி கொண்டு அருள்கின்றனர்.

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இங்கே ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, தோஷங்களாலும் தடைகளாலும் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறதே என வருந்துபவர்கள் இங்கு வந்து குளித்து, ஈரத்துணியுடன் கோயிலுக்கு வந்து, விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

துடையூர் ஸ்ரீவிஷமங்களேஷ்வரர் கோயில்
துடையூர் ஸ்ரீவிஷமங்களேஷ்வரர் கோயில்

இங்குள்ள ஒவ்வொரு சந்நிதியிலுமாகச் சேர்த்து மொத்தம் 11 தீபங்களை ஏற்றி, 11 முறை பிராகார வலம் வரவேண்டும். அப்படிச் செய்தால், கல்யாணத் தடைகள் அகலும், தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பன ஐதிகம்.

துடையூர் கோயிலில் இன்னொரு விசேஷமும் உண்டு. இதோ, வைகாசி விசாக நன்னாளில், ஸ்ரீபிரம்மாவுக்கும் ஸ்ரீசரஸ்வதிக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடைபெறுகிறது. ஸ்ரீபிரம்மாவுக்குக் கல்யாண உற்ஸவம் நடைபெறும் ஆலயம் என்னும் சிறப்பினை உடையத் தமிழகத்தலம் இது என்பதால் மிகவும் விசேஷம்.

அதற்காக வைகாசி விசாக நன்னாளில் அதிகாலை 3 மணிக்கெல்லாம் ஹோமங்கள் நடைபெறத் தொடங்கிவிடுமாம். பச்சரிசிப் படி சார்த்துதல், பருப்புத் தேங்காய் பிடித்தல், சீர் வரிசை என அமர்க்களப்படும்.

ஹோமங்கள் முடிந்ததும் பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் காலை 4.30 முதல் 6 மணிக்குள், ஸ்ரீபிரம்மாவுக்கும் ஸ்ரீசரஸ்வதி தேவிக்கும் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடந்தேறும். அதையடுத்து ஸ்ரீபிரம்மாவும் ஸ்ரீசரஸ்வதிதேவியும் தம்பதி சமேதராக, பிராகார வலம் வருவதைக் காணக் கண் கோடி வேண்டும்.

நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீபிரம்மா, ஸ்ரீசரஸ்வதி ஆகியோரின் உற்ஸவ மூர்த்தங்கள் இங்கே உள்ளன. பாதுகாப்பு கருதி, துடையூர் கிராமத்தில் ஊருக்குள் அமைந்திருக்கிற ஸ்ரீவிநாயகர் கோயிலில் உற்ஸவ மூர்த்தங்கள் அனைத்தையும் பத்திரமாக வைத்திருக்கிறார்கள்.

துடையூர் ஸ்ரீவிஷமங்களேஷ்வரர் கோயில்
துடையூர் ஸ்ரீவிஷமங்களேஷ்வரர் கோயில்

விழாக்களின்போது உற்சவர்கள், கொள்ளிடக் கரையில் உள்ள துடையூருக்கு வருவார்கள். அற்புதமான தரிசனத்தை பக்தர்களுக்குத் தந்துவிட்டு, துடையூர் பிள்ளையார் கோயிலுக்குச் சென்றுவிடுவார்கள்.

வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை வந்து துடையூர் விஷமங்களேஷ்வரரைத் தரிசனம் செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள் உங்கள் கஷ்டங்கள் துடைத்தெறியப்படும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். சேர்ந்துவாழ்வும் தம்பதியர் மிகவும் அந்நியோன்யத்துடன் தம் வாழ்வைத் தொடர்வர். வாழ்க்கை நலமாகும் வளமாகும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User